இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, November 3, 2013

படுக்கும் பாயில் பறக்கும் மயில்

சிதம்பரம்-மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் இருக்கிறது தைக்கால் கிராமம். இந்த ஊரைக் கடக்கும் வாகனங்கள் ஒரு நிமிஷம் நின்று கடைகளில் மாட்டித் தொங்கும் பாய்களை வேடிக்கை பார்த்துவிட்டோ அல்லது வாங்கிக் கொண்டோதான் நகர்கின்றன. அந்த அளவுக்கு வண்ணமயமாக பார்வையைச் சுண்டி இழுக்கின்றன பாய்கள்.
''ஒரு ஆளு படுக்கிற பாய் வண்ணம் சேர்க்காதது 55 ரூபா, ரெண்டு ஆளு பாய் 70 ரூபா'' என்று பாயை விரித்துக் காட்டி வாடிக்கையாளிடம் விலை பேசும் முஸ்தபாவுக்குத் தொழிலில்  30 ஆண்டு அனுபவம். ''10 ரூபா விலை இருக்கும்போது, நான் வியாபாரத்தை ஆரம்பிச்சேன். இன்னிக்கு இவ்வளவு விலை. ஆனால், முன்னே மாதிரி வியாபாரம் சுறுசுறுப்பா இல்லை. கல்யாணப் பாய் ஆர்டரால் பொழைப்பு  ஓடுது!'' என்று இப்போதைய நிலவரம் சொல்கிறார்.
கடைகளில் ஜோராக வண்ணம் சேர்த்து டிசைன்களோடு மின்னும் பாய்கள் கையால் நெய்யப்படுகின்றன. மணமக்களின் பெயர்கள், திருமண நாள், மற்றும் டிசைன்கள் போட்டுத் தருகிறார்கள்.  
''அவங்க என்ன எழுதிக் கொடுக்குறாங்களோ, அதை அப்படியே பாயில் கொண்டு வந்துவிட முடியும். ஒரு பாய் நெய்ய மூன்று நாட்கள் வரை ஆகிடும்'' என்று சொல்லிகொண்டே குறுக்கும் நெடுக்குமாக விறுவிறுவென்று வண்ணக் கோரைகளை இணைத்துக்கொண்டு இருக்கிறார் 70 வயது சையது. இவர்போல 15 பேர் மட்டுமே இன்னமும் கையால் பாய் நெய்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் மெஷினுக்கு மாறிவிட்டார்கள்.
மெஷின் நாள் ஒன்றுக்கு 100 பாய்கள் நெய்தாலும், அதில் எழுத்தோ, டிசைனோ செய்ய முடியாது என்பதால், கல்யாணப் பாய்கள் மட்டும் கையால்தான் நெய்யப்படுகின்றன.
தரை மட்டத்தில் இருந்து அரை அடி உயரத்தில் மூன்று நான்கு கட்டை கழிகளையும், நான்கைந்து சிறு குச்சிகளையும் பயன்படுத்தி தறி அமைத்துக்கொள்கிறார்கள். தரையில் குத்துக் காலிட்டுக் குனிந்தவாறே, நாள் முழுவதும் கோரையைப் பின்னுகிறார்கள். மூன்று நாள் கழுத்து வலிக்கப் பின்னி முடித்தால், 350  கூலி கிடைக்கும்.
ஒரு பாய் முடைவதற்கு சுமார் 200-க்கு கோரை வாங்க வேண்டும். கல்யாணப் பாய் ஒன்று 600 அல்லது 650-க்கு விலை போகும். இது கல்யாணப் பாய்க்கான கணக்கு. மற்ற பாய்களுக்கு மீதம் உள்ள சிறிய கோரைகள், வண்ணம் சேர்க்காமல் நெய்து, குறைந்த விலைக்கு விற்கிறார்கள்.
சரி, அது என்ன கோரை? நம் விவசாய விளைநிலங்களில் வளரும் ஒரு விதமானகளை தான் இந்தக் கோரை. இப்போது இதைத் தனி யாக விதைக் கிழங்கு வாங்கி வந்து வயலில் விதைத்துச் சாகுபடி செய்கிறார்கள். பயிருக்குச் செய்வது போன்றே மூன்று முறை உரம் போட்டு தேவையான தண்ணீர் பாய்ச்சி, பராமரிக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பின்னர் அது அறுவடைக்கு வருகிறது. அதை ஆட்களை வைத்து அறுத்து எடுத்து வெயிலில் உலரவைத்து நன்கு காயவைக்கிறார்கள். பிறகு, பெண்களைவைத்து சிறிய வீணான கோரையைப் பொறுக்கி எடுத்துவிட்டு மீதத்தைக் கட்டாகக் கட்டிவைத்து,  சாதா பாய்க்குப் பயன்படுத்துகிறார்கள். வண்ணப் பாய்களுக்கு அதில் வண்ணம் சேர்த்துப் பயன்படுத்துகிறார்கள்!

-

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites