வில்லியனூர்
|
களிமண்ணில் இருந்து சுடுபொம்மைகள் செய்து விற்கும் தொழில்தான்
ஆண்டாளைக் கைதூக்கிவிட்டுக் கரைசேர்த்து இருக்கிறது. இந்தச் சுடுபொம்மைத் தொழிலில்
ஈடுபட்டு உள்ள வர்கள்குறித்து வாய்ஸ் ஸ்நாப்பில் பதிவுசெய்து இருந்தார் 'என்
விகடன்’ வாசகி விசாலாட்சி. அவர்களில் சிலரைச் சந்தித்தபோது, ''இந்தத் தொழிலுக்குப்
பெரிதாக மூலதனம் தேவை இல்லை. மூளை இருந்தால் போதும்'' என்கிறார் ஐந்து ஆண்டுகளாக
இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள சுதா.
''நாங்க மாவட்டத் தொழில் மையம் மூலமா இந்தக் கலையைக்
கத்துகிட்டோம், அதுக்கப் புறம் 20 பேர் ஒண்ணாசேர்ந்து 'ஓம் சக்தி’ என்ற பெயர்ல
குழுவா இயங்க ஆரம்பிச்சோம். எல்லா ரும் எட்டாவது, பத்தாவது படிச்சவங்கதான்.
ஆர்வமும் அனுபவமும்தான் எங்களை வாழவைக்குது. எங்களுக்குத் தேவையான களிமண்ணை எங்க
ஊர் பக்கத்துல இருக்கிற சங்கராபரணி ஆத்துல இருந்து எடுத்துக் கிறோம்.
அலங்காரப் பொருட்கள், ஜாடி வகைகள், கலைப் பொருட்கள்னு விதவிதமாத்
தயாரிக்கிறோம். களிமண் சிற்பத்துக்கு மரச் சிற்பம், கல் சிற்பம், வெண்கலச் சிற்பம்
மாதிரி பெயின்ட் அடிப்போம். எல்லாப் பொருட் களையும் நாங்க கையாலதான் செய்வோம்.
மெஷின்ல செஞ்சா சிற்பம் அவ்வளவு முழுமையா வராது. நுணுக்க மான வேலைப்பாடுகளையும்
கொண்டுவர முடியாது.
ஆயுத பூஜை, கார்த்திகை தீபம், பொங்கல் போன்ற விசேஷ சமயத்துலதான்
வேலை அதிகமா இருக்கும். மற்ற நாட்கள்ல வெளியூர் ஆர்டர்களுக்கு ஏற்ற மாதிரி வேலை
செய்வோம்'' என்கிறார் சுதா.
''புதுவை போன்ற நகரங்களில் இருக்கும் வணிக வளாகங்களில் சீனா,
கொரியா போன்ற நாடுகளின் பொருட்கள் விற்பனை ஆகுது. ஆனா, இது மாதிரியான இந்தியப்
பாரம்பரியப் பொருட்களுக்குனு தனியா ஒரு கடைகூட இல்லை. மக்கள் மண் பானைகளை
வாங்கணும்னா ஊர் முழுக்க அலைஞ்சு திரிஞ்சு ரோட்டுக் கடைகளில் தான் வாங்க வேண்டியதா
இருக்கு'' என்று வருத்தத்துடன் கூறும் சித்ரா தொடர்கிறார்.
'' 'கலையில் ஈடுபடுறவங்க எந்த ஒருநிலை யிலேயும் நம்பிக்கையை இழக்க
மாட்டாங்க, எப்படியாச்சும் வாழ்ந்து காட்டுவாங்க’னு எங்களுக்கு ஆரம்பத்தில் பயிற்சி
தரும்போது சொன்னாங்க. அது இப்ப எங்க வாழ்க்கையிலேயும் உண்மையா நடக்குது. வீட்டில்
எந்த ஒரு கஷ்டம்னாலும் இங்கே வந்து வேலையை ஆரம்பிச்ச உடனே எல்லாக் கஷ்டங்களையும்
மறந்துடுவோம். மன நிம்மதியோட வாழத் தேவையான பணமும் கிடைக்குது. அதைவிட முக்கிய
மானது கைத்தொழில் ஒன்று தெரி யும் என்ற நம்பிக்கை. அது எங்களை பலப்படுத்துது''
என்கிறார்!
0 comments:
Post a Comment