இதற்கு அடுத்தபடியாக, ஏழைகளின் மெத்தையான கோரைப்பாய் தயாரிப்பில் முன்னணியில் இருக்கிறது சீர்காழி. இங்குள்ள தைக்கால் கிராமத்தில் வீடு தோறும் பாய் உற்பத்தி சேய்யப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலும் புகழ்பெற்ற இந்த பாய்கள், நூற்றாண்டு பாரம்பரியம் மிக்கதாகும். பாய் தயாரிக்கும் தொழில் பரம்பரையாக அடுத்தடுத்த தலைமுறையினரால் நடத்தப்பட்டு வருகிறது.
கோரைகள் அதிக அளவில் கிடைப்பதே இப்பகுதியில் இத்தொழில் செழித்து வளர காரணமாகும். சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் கோரை உற்பத்தி செய்யப்படுகிறது. கோரைகளை விளைவிக்க தேவையான கிழங்குகள் வாய்க்கால் வரப்புகளில் இருந்தே பெறப்படுகின்றன. கோரைப் பயிரிட்ட 6வது மாதத்தில் அறுவடைக்கு தயாராக வளர்ந்து நிற்கும். கோரைகளை அறுவடை செய்து இரண்டாக கிழித்து அவற்றை இரண்டு முறை காயவைத்து கட்டுக்கட்டி தொழிற்கூடத்திற்கு கொண்டு வந்து சுத்தம் செய்கின்றனர். பின்னர் தேவையான வண்ணத்தில் நனைத்து காயவைத்து பாயாக்கின்றனர். ஒருமுறை பயிரிட்ட கோரை தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருப்பதுடன் 10 ஆண்டுகள் வரை பலன் தருகிறது.
கோரையை வளர்ப்பவர்களே பாய் தயாரிக்க வேண்டும் என்பதில்லை. ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் கோரை விளைவித்து அவற்றை பாய் தயாரிப்பாளர்களுக்கு விற்பதன் மூலம் ஆண்டுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து வருகின்றனர். இத்தொழிலில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கிடைப்பதால் அவர்கள் மகிழ்ச்சியோடு இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
பந்திப் பாய், வண்ணப் பாய், திருமணப் பாய், தொழுவைப் பாய், சிறிய அளவிலான மேசை விரிப்பு என பலவித பாய்கள் இருந்தாலும், திருமணப் பாய்க்கு தனி மவுசு உண்டு. மணமக்கள் பெயர், திருமண நாள் போன்ற விவரங்களை கொடுத்துவிட்டால் கச்சிதமாக பாய் நெய்து தந்து விடுகின்றனர். ஒரு கிராமமே திருமணப் பாய் செய்து வருகிறது எண்ணும்போது இதற்குள்ள தேவை என்ன என்பது தெளிவாகிறது. திருமணப் பாய்கள் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.
தொழில் தற்போது எந்திரமயமாகி விட்டாலும், இன்னும் கைத்தறி மூலம் பாய் கோர்ப்பு நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. பெருகிவரும் தேவைகளுக்கு ஏற்ப தங்களால் உற்பத்தி செய்ய முடியாத நிலை இருப்பது இத்தொழிலின் தொடர் வெற்றிக்கு கிடைத்த கட்டியமாகும்.
கோரை புற்களை சம அளவில் வெட்டி அதனை எந்திரத்தில் வைத்துவிட்டால் நீலமாக வரும் பாயின் இருபக்கமும் அளவாக கத்தரித்து தையல்போட்டு கச்சிதமான பாயாக மாற்றிவிடுகின்றனர். இந்த பாய்களை தைக்கால் கிராமத்திற்கே வந்து வாங்கி செல்கின்றனர் பலர். நாள் ஒன்றுக்கு சுமார் 1000 பாய்களுக்கு மேல் விற்பனையாகிறது தைக்கால் பாய்கள்.
பாய்கள் தயாரிப்பவர்களிடம் இருந்து வாங்கிச் சென்று அவற்றை விற்பதற்கும் அதிகம் பேர் ஆர்வம் காட்டி வருவதால் விற்பனை வாய்ப்புள்ள தொழிலாகவும் இது உள்ளது. பெண்களும் கூட இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
40 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எந்திரங்களை கொண்டு பாய் உற்பத்தி நடைபெற்ற நிலை மாறி சென்னையிலேயே அவை வடிவமைக்கப்படுகின்றன. தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள இத்தொழில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தொழிலாகவும் உள்ளது.
இத்தொழிலில் ஒன்றரை லட்ச ரூபாய் முதலீடு செய்து எந்திரங்கள் வாங்கி தொழிலை தொடங்க முடியும். மூலப்பொருட்களுக்கு ஒரு லட்ச ரூபாய் ஒதுக்கி வைத்து பாய் தொழிற்சாலையை தொடங்கினால் மாதம் 20 ஆயிரம் ரூபாய்க்கு குறையாத வருமானம் வரும் தொழில் இதுவாகும்.
0 comments:
Post a Comment