இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, February 9, 2014

அழகு நுணுக்கம் கலாசாரம்!

மேற்கத்திய நாகரீகத்தின் தாக்கத்தில் குழந்தைகளுக்கு விலை உயர்ந்த பார்பி பொம்மைகளையும் செயற்கை இழைகளால் செய்யப்படுகிற புசுபுசு  பொம்மைகளையும் வாங்கிக் கொடுக்கும் பெற்றோருக்கு நம்மூரில் பஞ்சமே இல்லை. ஆயிரங்களைக் கொட்டிக் கொடுத்து வாங்கினாலும், இந்த  பொம்மைகளில் ஆரோக்கியத்துக்கோ, தரத்துக்கோ துளியும் உத்தரவாதமில்லை. பொம்மையின் இழைத்துகளோ, சாயமோ குழந்தைகளின் வயிற்றுக்குள்  போனால் நிச்சயம் கேடுதான். ஆனாலும், பெற்றோருக்கு வேறு வழியில்லை. 
Beauty resolution culture!
“ஏன் இல்லை... பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிற கொண்டபள்ளி பொம்மைகளை வாங்கிக் கொடுத்துப் பழக்குங்க. காணாமப் போயிட்டிருக்கிற  கலாசாரத்தையும் கட்டிக் காப்பாத்தலாம். உங்க பிள்ளைங்களும் ஆரோக்கியமா இருப்பாங்க. இந்த வருஷ நவராத்திரிக்கு உங்க வீட்டு கொலுவை  அலங்கரிக்கிற கொண்டபள்ளி பொம்மைகள், தொடர்ந்து உங்க குழந்தைங்க விளையாடப் பயன்படட்டுமே...’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த மாதவி. 

பொம்மைகளுக்கு, குறிப்பாக கொலு பொம்மைகளுக்குப் பெயர் போன கொண்டபள்ளி கிராமத்திலிருந்து விதம் விதமான பொம்மைகளை வரவழைத்து,  காட்சிக்கும் விற்பனைக்கும் வைப்பதுடன், அந்த பொம்மைகளின் பாரம்பரியத்தைப் பற்றிய விழிப்புணர்வையும் பரப்பி வருகிறார் மாதவி.  (www.kondapallihandicrafts.blogspot.com)‘‘ஆந்திராவுல உள்ள ஒரு கிராமத்தோட பெயர்தான் கொண்டபள்ளி. அங்கே வாழற மக்களோட பிரதான  தொழில், பொம்மைகள் பண்றது. பொல்கின்னு சொல்லப்படற ஒரு வகையான மரத்தை வச்சு, முழுக்க, முழுக்க கைகளாலயே செய்யப்படற  பொம்மைகள். 

எடை குறைவா, கையாள சுலபமா இருக்கும். கொண்டபள்ளியில உள்ள ஒவ்வொரு குடும்பமுமே இந்த பொம்மைகள் செய்யற தொழில்  தெரிஞ்சவங்களா இருப்பாங்க. ஆண்கள் வெட்டி, செதுக்கிக் கொடுக்க, பெண்கள் சாயம் ஏத்தி அழகுப்படுத்துவாங்க.பொம்மையோட ஒவ்வொரு  பகுதியையும் தனித்தனியே, ஒவ்வொரு கலைஞரும் கைகளாலேயே செய்து, பிறகு இணைப்பாங்க. அப்படி இணைக்க  புளியங்கொட்டையில இருந்து  செய்யற ஒருவிதமான இயற்கையான பசையை வச்சுத்தான் இணைப்பாங்க. பொம்மைகளை ஒட்டி, இணைச்சு முடிச்சதும், அடுத்து சாயம் பூசுவாங்க. 

அந்தச் சாயம் கூட இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டதுதான். அதனால குழந்தைங்க விளையாடவும் பாதுகாப்பானது.ஒவ்வொரு பொம்மையும்  யதார்த்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கிற கேரக்டர்களாக இருக்கும். இதிகாசங்கள்லேருந்தும், நாட்டுப்புறக் கலைகள்லேருந்தும் கூட உருவங்கள்  செய்வாங்க. மனித முகங்கள், கடவுள் உருவங்கள், விலங்குகள், கொண்டபள்ளி வீரர்கள் போன்றவையும் அடக்கம்.  உதாரணத்துக்கு பூம்பூம் மாடு,  அரிசி வியாபாரி, காய்கறிச் சந்தை, சலவைத் தொழிலாளி, உழவர்கள், பால் கறக்கும் பெண்கள், மரம் ஏறும் ஆண்கள், தண்ணீர் இறைக்கிற பெண்கள்...  இப்படி! இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாமப் போன பல தொழில் களையும் அதோட பின்னணியில உள்ள மக்களையும் அவங்க  வாழ்க்கையையும் அந்த பொம்மைகள்ல பார்க்கலாம். பக்தி சார்ந்த விஷயங்களையும் விட்டு வைக்கறதில்லை கொண்டபள்ளி கைவினைக்  கலைஞர்கள். 

தசாவதாரம், கீதோபதேசம், ராமாயணம், முருகனும் மயிலும், அனுமனும் ராமனும், நாட்டிய கணேசர்னு ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பொம்மைகளையும்  இத்தனை அழகா, நுணுக்கமான வேலைப்பாடுகளோட வேற எங்கேயும் பார்க்க முடியாது’’ என்கிறார் மாதவி. கைகளால் செய்யப்படுகிற கொண்டபள்ளி  பொம்மைகளுக்கு நிகராக கவனம் ஈர்க்கின்றன ஏட்டிகோப்பக்கா பொம்மைகள். கிராமத்துக் குழந்தைகளின் விளையாட்டுச் சாமான்கள், பொம்மை  ஸ்கூட்டர், கார், ரயில்வண்டி, மாட்டுவண்டி, சொப்புச் சாமான்கள் என அவற்றைப் பார்க்கும்போது, மீண்டும் குழந்தைப் பருவத்துக்குத் திரும்ப  ஏங்குகிறது மனது. இத்தனை பாரம்பரியம் மிக்க கொண்டபள்ளி பொம்மைகளுக்கு புவியியல்சார் குறியீடு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.  நல்லதொரு ஆரம்பத்துக்குக் காரணமாகட்டும் நவராத்திரி!   

2 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites