இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, February 17, 2014

நெகிழ வைக்கும் ஒரு  நிஜ  கதை


காதலில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் ஜெயிப்பதுதான் காதலுக்கு மரியாதை! அப்படி தங்கள் காதலுக்கு மரியாதை செய்த பல்லாயிரம் தம்பதிகளில், மதுரையைச் சேர்ந்த ராஜ்குமார் - ஸ்ரீபிரியா தம்பதிக்கும் இடமுண்டு. காதலித்த நாட்களின் ரொமான்ஸ் நிகழ்வுகள்; திருமணத்தின்போது ஏற்பட்ட பதற்றங்கள்; கணவன் - மனைவியாக அவதாரமெடுத்த பின் பொருளாதார நெருக்கடியால் ஆசைப்பட்ட வாழ்வை வாழ முடியாமல் போன விரக்தி; நம் காதல் ஜெயித்தே தீர வேண்டும் என்று எதிர்நீச்சல் போட்டு இன்று கரை சேர்ந்திருக்கும் வாழ்க்கைப் பயணம் என... ஒரு விறுவிறு காதல் 'கம்’ குடும்பப் படம் பார்த்த உணர்வு அவர்களின் கதை. கேட்போமா..?!
''இப்போ நாங்க வாழுற வாழ்க்கை இவ்வளவு வசதியா, சந்தோஷமா இருக்கக் காரணம்.... எங்களை வாழ்க்கையில் போராடி ஜெயிக்க வெச்ச எங்க காதல்தான்!''
- 15 வருடங்களுக்கு முன் மலர்ந்த தங்கள் காதலின் ஆசைப் பக்கங்களை அசைபோடத் தொடங்கினார் ராஜ்குமார்.
''அப்போ நான் எம்.காம் படிச்சுட்டு இருந்தேன். தாடி வெச்சுருப்பேன். தினமும் போற வழியில ஒருநாள் ஒரு லெட்டர். எடுத்துப் பிரிச்சுப் பார்த்தா, 'டியர் தாடி, உங்களை ரொம்ப பிடிச்சுருக்கு. உங்க பேர் என்ன?’னு கேட்குது அந்தக் கடிதம். அன்னிக்கு நைட் எல்லாம் தூக்கமே வரல. 'நம்மளையும் ஒரு பொண்ணு லவ் பண்ணுதா..?’னு ஒரே ஆச்சர்யம். கடிதத்துக்கு சொந்தக்காரியை தெரிஞ்சுக்கிற முயற்சியில இறங்கினப்போ, என் தேவதையா முன்ன வந்தா ஸ்ரீபிரியா'' என்று ராஜ்குமார் நிறுத்த,
''எங்க வீட்டுக்கு எதிரே இருக்கிற டீ கடையில டீ குடிக்கவும், பக்கத்துல கிரிக்கெட் விளையாடவும் இவர் அடிக்கடி வருவார். அவரோட தாடிதான் என்னைக் கவர்ந்தது. லெட்டருக்குப் பிறகு, நாட்கள் சூப்பரா நகர்ந்துச்சு. ரெண்டு பேரும் ஒரே ஏரியா. எங்க வீட்டு ஜன்னல் வழியாவே காதல் வளர்த்தோம். சாதி, வசதி இது ரெண்டும் எங்க திருமணத்துக்குப் பெரிய தடைகளா இருக்கும்னு எங்களுக்குத் தெரியும். என்ன பிரச்னை வந்தாலும், எல்லாத்தையும் சமாளிச்சு கல்யாணம் பண்ணிக்கணும்னு ரெண்டு பேருமே உறுதியா இருந்தோம்.
நான் பி.பி.இ படிச்சுட்டிருந்த சமயம், திடீர்னு ஒருநாள் அவர், 'ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம் செஞ்சுக்குவோம். நீ உங்க வீட்டுலயே இரு, நான் என் வீட்டுலயே இருக்கேன்’னு சொன்னார். 'அலைபாயுதே’ சினிமாவெல்லாம் வராத சமயம் அது. எனக்கு அதிர்ச்சியாவும், பயமாவும் இருந்துச்சு. இருந்தாலும், நாங்க பிரிஞ்சுடாம இருக்கறதுக்கு இது ஒரு பாதுகாப்பா தெரிஞ்சதால சம்மதிச்சேன். ஒரு கட்டத்துல வீட்டுக்கு விஷயம் தெரிய வந்தப்போ, வீட்டுலயே பூட்டி வெச்சுட்டாங்க. அங்க இருந்து தப்பிக்க, ஆட்கள் துரத்த, கார்லயே ஊர் ஊரா ஓட... அந்தக் கார்லயே அவர் தாலி கட்டினதை எல்லாம் இன்னிக்கு நினைச்சாலும் சிலிர்ப்பா இருக்கு!'' என்றபோது, 'களவாணி’ திரைப்படம் கண்ணில் வந்து போனது நமக்கு. தொடர்ந்தார் ராஜ்குமார்...
''அவங்க அப்பா, 'ஒரு பைசா கூட நான் தரமாட்டேன்'னு சொல்லிட்டார். நாங்களும் அதை துளியும் எதிர்பார்க்கலங்கறதை அவர்கிட்ட சொல்லிட்டு, பாதி கட்டியும் கட்டாமலும் இருந்த நண்பரோட வீட்டில்தான் முதல்ல தங்கியிருந்தோம். அந்த நாட்கள், 'காதல் சடுகுடு’தான். குழந்தையும் பிறக்க, சந்தோஷமா இருந்தோம். ஆனா, நான் பார்த்துட்டு இருந்த நகைத்தொழில்ல திடீர் நஷ்டம் ஏற்பட, அதலபாதாளத்துக்குப் போயிட்டோம். அதுக்கு மேல போராடத் தெம்பு இல்லாம... ஒரு பக்கம் விஷத்தையும் இன்னொரு பக்கம் அண்ணன் அல்லது நண்பர்கள் உதவி பண்ணுவாங்க என்ற நம்பிக்கையையும் வெச்சுட்டு நின்னோம். நம்பிக்கை பொய்க்க, குழந்தைக்கு மட்டும் கொடுக்காம நாங்க ரெண்டு பெரும் விஷத்தைக் குடிச்சுட்டோம். ஆனா... எப்படியோ பிழைச்சுட்டோம்'' என்றபோது, நமக்கு ஏக அதிர்ச்சி!
''நாங்க உயிர் பிழைச்ச அந்த நொடி, அழகா அமைஞ்ச காதல் வாழ்க்கையை, வீணாக்க முடிவெடுத்த முட்டாள்தனத்தை உணர்ந்தோம். பரிதாபத்தைவிட, 'காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு நீங்க என்ன சாதிச்சீங்க... முடிவை பார்த்தீங்களா..?’ என்ற ஏளனத்தைத்தான் சமூகம் எங்க மேல தெளிச்சுது. அதுதான், 'வாழ்க்கையில நாம ஜெயிச்சே தீரணும்’கற வைராக்கியத்தோட எங்களை எழுந்திருக்க வெச்சது. ரெண்டு பேரும் காளான் வளர்ச்சி பற்றிய பயிற்சிக்குப் போனோம். அதைப் பற்றி தேடித் தேடி நிறைய கத்துக்கிட்டோம். சின்ன முதலீட்டோட ஒரு தொழிலா எடுத்து செய்தோம். ஒவ்வொரு நாள் முடிவிலும், விடியல்லயும் 'நாம ஜெயிச்சுக் காட்டணும்’னு மந்திரமா சொல்லிக்கிட்டோம். உலகத்துலயே ஆகப் பெரிய சக்தி, அன்புதான். அவர் எனக்காகவும், நான் அவருக்காகவும் மாறி மாறி உழைக்க, நாலு வருஷத்துல, இப்போ 'பசுமை பால் காளான் பண்ணை’ உரிமையாளர் ஆகியிருக்கோம். அதுபற்றிய பயிற்சிகளையும் வழங்குறோம். மாசம் லட்சத்துக்கும் மேல வருமானம் வருது!'' என்றபோது, சந்தோஷத்துடன் கண்ணீரும் ததும்புகிறது ஸ்ரீபிரியா விழிகளில்!
''இப்போவெல்லாம் தொட்டதுக்கெல்லாம் சண்டை போடுற காதலர்களையும், ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சொல்ற தம்பதிகளையும் பார்க்கும்போது எங்களுக்கு வேடிக்கையா இருக்கு. சந்தோஷமான தருணங்கள்ல சேர்ந்திருக்கிறது பெருசில்ல. துயரமான நேரங்களையும் கைகோத்து கடக்குறதுதான் காதலுக்கு அழகு, அதுதான் காதலோட அர்த்தம்... எங்கள மாதிரி!''
- மனைவியின் முகம் பார்த்துப் புன்னகைக்கிறார் ராஜ்குமார்!

2 comments:

Very interesting. I am also interesting in Mushroo farming bnut many more doubts. please send these persons Contact details. Very useful for me. Thankyou. By. Venkat

தங்கள் வருகைக்கு நன்றி திரு வெங்கடேஷ் அவர்கள்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites