முன்பெல்லாம் ஓட்டலுக்கு பார்சல் சாப்பாடு வாங்கப் போனால், வீட்டிலிருந்து கேரியர் எடுத்துக் கொண்டு போக வேண்டும். ஆனால், இன்றோ கையை வீசிக் கொண்டு ஓட்டலுக்குப் போனாலும், காசைக் கொடுத்தால் சாம்பார் முதல் ரசம், மோர், பொரியல், பாயசம் என அனைத்து அயிட்டங்களையும் பிளாஸ்டிக் பைகளில் பார்சல் செய்து கொடுத்து விடுகிறார்கள். சாப்பாடு மட்டுமல்ல, பூ முதல் புளி வரை அத்தனையும் இன்று பிளாஸ்டிக் பைகளில் அடக்கம்.
சுற்றுச்சூழல் பிரச்னைகள் காரணமாக குறிப்பிட்ட மைக்ரான் அளவு கொண்ட பிளாஸ்டிக் பைகளை மட்டுமே தயாரிக்க அரசு அனுமதிக்கிறது. நல்ல டிமாண்ட் உள்ள தொழில் செய்ய நினைக்கிறவர்கள் அரசு அனுமதித்துள்ள தரத்தில் பைகளைத் தயாரித்தால் நிச்சயம் நல்ல லாபம் பார்க்கலாம்.
சந்தை வாய்ப்பு:
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை ஒரு வருடத்திற்குச் செலவாகும் பிளாஸ்டிக் பைகளின் எண்ணிக்கை 12 லட்சம் டன். ஆனால், தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பைகளோ ஐந்து லட்சம் டன் மட்டுமே. வழக்கம்போல குஜராத் மாநிலம் பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கிறது.
தமிழ்நாட்டில் ஏற்படும் பற்றாக்குறையை குஜராத்திலிருந்து வாங்கிச் சமாளிக்கின்றனர். எனவே, இப்போது புதிதாகத் தொழில் தொடங்குகிறவர்கள் பாக்கியுள்ள சந்தை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். ஓட்டல்கள், சாலையோர உணவகங்கள், மெடிக்கல் ஷாப்கள், பேக்கரிகள், மளிகைக் கடைகள், பழம், காய்கறிக் கடைகள் என அனைத்து சிறிய மற்றும் பெரிய வியாபாரிகளும் கட்டாயமாகப் பயன்படுத்தப்படும் பொருளாக இருக்கிறது இந்த பிளாஸ்டிக் பைகள். இந்த சிறிய மற்றும் பெரிய வியாபாரிகளுக்கு சப்ளை செய்தாலே போதும். ஒவ்வொரு கடைக்கும் தேவையான அளவில் பைகளுக்கான ஆர்டரை பெற்று தயார் செய்து கொடுக்கலாம். அல்லது பல்வேறு அளவுகளில் நாமே தயார் செய்து அவற்றை கடைகளுக்கு விநியோகிக்கலாம்.
முதலீடு:
இந்த தொழிலைத் தொடங்க சுமார் 14 லட்சம் ரூபாய் வரை முதலீடு தேவை. இயந்திரங்கள் வாங்க சுமார் நாலே கால் லட்சமும் மீதி செயல்பாட்டு மூலதனத்துக்கும் தேவைப்படும்.
மூலப் பொருள்:
இதன் மூலப் பொருளான ஹெச்.எம்.ஹெச்.டி.பி., குருணை அரிசி போன்று இருக்கும். இதனை கிரான்யூல்ஸ் என்று அழைக்கிறார்கள். இந்த கிரான்யூல்ஸை ரிலையன்ஸ், ஆயில் இந்தியா கார்ப்பரேஷன் போன்ற பெரிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இதற்கான விநியோகஸ்தர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் மூலப் பொருளை வாங்கிக் கொள்ளலாம்.
தயாரிப்பு:
முதலில் மூன்றுவிதமான கிரான்யூல்ஸ்களை சரியான விகிதத்தில் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு இயந்திரத்தில் போட்டு 180-240 சென்டி கிரேட் வெப்பநிலையில் உருக வைக்க வேண்டும். கம்ப்ரசர் மூலம் வாயுவைச் செலுத்தி பிளாஸ்டிக் பேப்பர் போல ரெடி செய்கிறார்கள். பிறகு கட்டிங் மெஷினைக் கொண்டு தேவையான அளவுகளில் கட் செய்து, பஞ்சிங், சீலிங் இயந்திரங்களில் கொடுத்து எடுக்க பிளாஸ்டிக் பை தயாராகி விடுகிறது. இதில், எழுத்துக்கள் அச்சிட வேண்டும் எனில் பிரின்டிங் இயந்திரத்தில் செலுத்தி பிரின்ட் செய்து கொள்ள வேண்டும், அவ்வளவுதான்!
கட்டடம்:
இந்தத் தொழில் தொடங்க 2,000 சதுர அடியில் இடம் தேவை. இடம் சொந்த மானதாக இருந்தால் செலவில்லை. இல்லையெனில் வாடகைக்கு கணிசமான பணம் செலவாகும்.
இயந்திரம்:
பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கத் தேவைப்படும் இயந்திரங்கள் வாங்க மட்டும் குறைந்தபட்சம் நான்கு லட்ச ரூபாய் செலவாகும். இயந்திரங்களின் விலை அதிகரிக்க அதிகரிக்க பைகளின் தரமும் மேம்பட்டு இருக்கும். எஸ்டுடர், கட்டிங், சீலிங் மெஷின், பிரின்டிங் மற்றும் பஞ்சிங் மெஷின் போன்ற இயந்திரங்களும் தேவைப்படும். இந்த இயந்திரங்கள் தமிழ்நாட்டில் ராஜபாளையம், கோயம்புத்தூர் போன்ற இடங்களில் கிடைக்கிறது. எனினும், குஜராத்தில் கிடைக்கும் இயந்திரங்கள் இன்னும் கூடுதல் தரத்துடன் இருப்பதாக பிளாஸ்டிக் பேக் தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள்.
வேலையாட்கள்:
ஆண்டுக்கு இருபது லட்சம் கேரி பைகள் தயாரிக்க மூன்று திறமையான வேலை யாட்களும், இரண்டு சாதாரண வேலையாட்களும், ஒரு மேலாளரும் தேவைப் படுவார்கள்.
பிளஸ்:
எல்லாவிதமான பொருட்களும் பிளாஸ்டிக் பைகளில் கொடுப்பது வழக்கமான விஷயமாகி விட்டது. நாளுக்கு நாள் தேவை அதிகரிக்கிறதே தவிர குறைவதில்லை என்பது கூடுதல் பலன். போட்டிகள் அதிகம் இல்லை.
மைனஸ்:
பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது என பிளாஸ்டிக்கிற்கு எதிராகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடி வருகிறார்கள்.
தேவையும் அதிகம், வாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கும் தொழில் என்பதால் புதிதாகத் தொழில் தொடங்க இருக்கும் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
பானுமதி அருணாசலம், அ.முகமது சுலைமான்
படங்கள் : ச.இரா.ஸ்ரீதர் |
0 comments:
Post a Comment