இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, August 31, 2013

பேன்சி நகைகள் – ஃபேஷன் நகைகள்

துரையின் பெருமைகளைச் சொல்லி மாளாது. மீனாட்சி அம்மன் கோயில், குண்டு மல்லிகை, ஜிகர்தண்டா என பல பெருமைகள். மதுரையில் பெயரெடுத்த எல்லாமே உலகம் முழுவதும் பெயர் வாங்கிவிடுகிறது என்பதும் உண்மை. அந்த வகையில் பரபரப்பான மதுரை நகரில் சத்தமில்லாமல் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது ஃபேன்ஸி நகைகளின் விற்பனை.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் மேற்கு கோபுரத்திற்கு அருகே உள்ளது புது வளையல்காரத் தெரு. இந்த தெருவில் பிரதான தொழிலே ஃபேன்ஸி நகைகள், கோல்டு கவரிங் நகைகள் விற்பனைதான். தமிழகம் முழுவதிலுமிருந்து, குறிப்பாக மத்திய மற்றும் தென் தமிழகத்தில் இருக்கும் சிறுவியாபாரிகள் இந்த தெருவிற்கு படையெடுப்பார்கள். நாமும் படையெடுத்தோம்.
இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள பலரும் வடமாநிலத்தவர்கள்தான். மும்பையிலிருந்து நேரடியாகப் பொருட்களை வாங்கி, இங்கு மொத்த விற்பனை செய்கின்றனர். இங்கிருந்துதான் தென் தமிழகத்தின் பல சில்லறை விற்பனையாளர்கள் நகைகளை வாங்கிச் செல்கின்றனர். இந்த தொழில் மதுரையில் தொடங்கப்பட்டு வளர்ந்த விதம், தொழில் வாய்ப்பு குறித்து நம்மிடம் பேசினார் பரம்பரையாக இந்த தொழிலில் ஈடுபட்டுவரும் ஷேக் அலாவுதீன்.
”கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ஃபேன்ஸி நகை விற்பனைத் தொழில் மதுரையில் நடந்து வருகிறது. முதன்முதலில் திண்டுக்கல்லில் செய்யப்பட்ட கம்மல்களின் விற்பனை மட்டுமே நடந்ததாம். பின்பு ஆந்திராவில் பந்தர் என்கிற ஊரில் இருந்து வரவழைக்கப்பட்ட கவரிங் நகைகள் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் பரவலாக கடைகள் ஆரம்பிக்கப்பட்டபிறகு மும்பையில் இருந்து ஃபேன்ஸி நகைகளை வாங்கத் தொடங்கினோம். இப்போது இங்கே சுமார் 230 கடைகள் உள்ளன. எங்களைத் தவிர, இந்த நகைகளை வாங்கிச் சென்று சில்லறை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், சிறிய அளவில் கடை நடத்தும் பெண்கள் உள்பட பலருக்கும் நல்ல தொழில் வாய்ப்பாக உருவாகி இருக்கிறது. கவரிங் நகைகள் மட்டுமில்லாமல், சைனா கற்கள், ஆஸ்திரேலிய கற்கள் பதிக்கப்பட்ட தரமான ஃபேன்ஸி நகைகள் போன்றவையும் இங்கே கிடைக்கிறது. இங்கு விற்பனை செய்யப்படுகிற நகைகளுக்கு ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை கேரண்டி தரப்படுகிறது” என்றார் அவர்.
அவ்வப்போது மாறிவரும் ஃபேஷனுக்கு ஏற்ப புத்தம் புதிய டிசைன்களில் நகைகள் இங்கே விற்பனை செய்யப்படுவதால், வாடிக்கையாளர்கள் விரும்பும் ஃபேன்ஸி நகைகளை உடனடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறோம் என்கிறார்கள் சிறு வியாபாரிகள். சாதாரண செயின் முதற்கொண்டு மணப் பெண்களுக்கான ஆடம்பர நகைகள் உள்பட அத்தனை வகையான ஃபேன்ஸி நகைகளும் இங்கு கிடைக்கிறது.
ஆறு மாதம் கேரண்டியோடு 110 ரூபாய்க்கு இங்கே கிடைக்கும் ஒரு தரமான செயினை சில்லறை விற்பனையில் 180 ரூபாய் வரைக்கும் விற்கிறோம் என்கிறார்கள் சில்லறை வியாபாரிகள். இங்கு 80 ரூபாய்க்கு வாங்கும் வளையலை 40 ரூபாய் அதிகம் விலை வைத்து 120 வரைக்கும் விற்க முடிகிறது என்கிறார்கள் அவர்கள். மணப் பெண் அலங்கார நகைகள், ஆடம்பர நெக்லஸ், நாட்டிய நிகழ்ச்சிகளுக்குப் புத்தம் புதிய நகைகள் வேண்டும் என்பவர்கள் தாராளமாக இங்கு வந்து வாங்கிச் செல்லலாம். இந்த நகைகள் 750 ரூபாய் முதல் கிடைக்கிறது.
இல்லத்தரசிகளுக்கு, சுயதொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்களுக்கு மதுரை ஃபேன்ஸி நகைகள் சிறந்த தொழில் வாய்ப்பு. கொஞ்சமாக முதலீடு செய்து தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்கள் இப்பவே மதுரைக்குப் புறப்படலாம். மீனாட்சியம்மனை தரிசிக்க மதுரைக்குச் செல்கிறவர்களும் வளையல்கார தெருவுக்குள் ஒரு வலம் வரலாமே!

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites