பட்டுச் சேலை என்றாலே பெண்களுக்குப் பரவசம் வருவது இயல்பு தான். ஆரணிப் பட்டு, தமிழகத்தின் அழகு அடை யாளங்களில் ஒன்று.
எப்படித் தயார் ஆகின்றன இந்தப் பட்டுப் புடவைகள்?
”பட்டு என்றாலே, காஞ்சிப் பட்டு என்கிறார்கள். ஆனால், ஆரணி பட்டு காஞ்சிப் பட்டுக்கு கொஞ்சமும் சளைத்தது இல்லை. ஆரணியில் மட்டும் ஐந்து லட்சம் பேர் இந்த பட்டு நெசவுத் தொழிலை நம்பி இருக்கிறார்கள். இங்கு உற்பத்தியாகும் பட்டுப் புடவைகளை வாங்கிச் சென்று காஞ்சி புரம் பட்டு என்று விற்கும் விற்பனையாளர்களும் உண்டு!” என்கிறார்கள் ஆரணி ஸ்ரீ லக்ஷ்மி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர்கள் முருகனும் சிவராமனும்.
”பட்டுப் புடவைக்குத் தேவையான பட்டு நூல், பெங்களூரு மற்றும் சீனாவில் இருந்து வரவழைக்கப்படும். மல்பரி புழுவின் கூட்டில் இருந்து இந்தப் பட்டு நூல் தயாரிக்கப்படுகிறது. பெங்களூரு நூல் விலை கிலோவுக்கு 2,500, சீன நூல் கிலோவுக்கு 2,800. ஒரு சேலைக்கு சுமார் ஒன்றரைக் கிலோ நூல் தேவைப்படும். கச்சா நூலை ட்விஸ்டிங் ஆலையில் கொடுத்துப் பாவு செய்து, அதன் மீது கலர் சாயம் ஏற்றுவோம். நீளம், அகலத்துக்கு ஏற்ப தனித் தனியாகப் பிரித்து நெசவுக்குக் கொடுத்தால், பட்டுச் சேலை ரெடி. கிட்டத்தட்ட ஒரு லட்சம் சேலை டிசைன்கள் உண்டு. டிசை னைப் பொறுத்து, ஒரு சேலைக்கு 60 கிராம் முதல் ஒன்றரைக் கிலோ வரை ஜரிகை தேவைப்படும். தங்கம், வெள்ளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஜரிகை விலையும் கூடுகிறது. இதனால், சேலையின் விலையும் அதிகரித்துவிடுகிறது.
ஒரு பட்டுப் புடவையைச் செய்து முடிக்க, 10 முதல் 15 நாட்கள் ஆகும். இங்கு பட்டுப் பாவாடை, பட்டுப் புடவை, பட்டு சுடிதார் மெட்டீரியல், பட்டு வேட்டி, பட்டு அங்கவஸ்திரம் என்று விதவிதமான பட்டு ஆடைகள் தயாரிக்கிறோம். இங்கு உற்பத்தியாகும் ஆடைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது!” என்று பட்டுப் புராணம் பாடுகிறார்கள் இருவரும்!
ஒரு பட்டுப் புடவையின் விலை அதன் டிசைன், ஜரிகைகளைப் பொறுத்து மாறுபடும். குறைந்தபட்ச விலை ரூ. 3000. அதிகபட்சம் ரூ. 1 லட்சம். பட்டு சுடிதாரின் விலை மீட்டர் ரூ.600 முதல் ரூ. 5000 வரை. பட்டு வேஷ்டிகளின் விலை ரூ. 2000 முதல் ரூ. 8000 வரை. பட்டு சட்டை ரூ. 400 முதல் ரூ. 1000 வரை விற்பனையாகின்றன.
- விஷேசங்களுக்கு சென்று வந்தவுடன் பட்டு புடவையை களைந்து உடனே மடித்து வைக்க கூடாது. நிழலில் காற்றாட 2 அல்லது 3 மணி நேரம் உலரவிட்டு பின்பு அதனை கைகளால் அழுத்தி தேய்த்து மடித்து எடுத்து வைக்கவேண்டும்.
- சாதாரண தண்ணீரால் மட்டும் அலசினால் போதுமானது. எக்காணரத்தை கொண்டும் பட்டுப்புடவையை சூரியஒளி படும்படி வைக்க கூடாது.
- அடித்து துவைக்க கூடாது. பிரஷ் போடக்கூடாது. வாஷிங் மிஷினிலும் போடக்கூடாது.
- அடிக்கடி அயர்ன் செய்வதை தவிர்க்க வேண்டும், அயர்ன் செய்யும் பொழுதும் ஜரிகையை திருப்பிப்போட்டு அதன் மேல் லேசான துணி விரித்து அதன் பின்பு அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்யக்கூடாது.
- பட்டுப்புடவைகளை அட்டை பெட்டிகளிலோ, பிளாஸ்டிக் கவர்களிலோ வைப்பதை காட்டிலும் துணிப்பைகளில் வைத்தல் அதன் தன்மையை பாதுகாக்கும்.
- வருடக்கணக்கில் பட்டுபுடவையை தண்ணீரில் நனைக்காமல் வைக்க கூடாது. பயன்படுத்தாமல் இருந்தாலும் 3 மாதத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலரவிட வேண்டும்.
சீனாவில் பண்டைய காலத்தில் ஒரு பேரரசின் இராணி (Si Ling-Chi) , அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டு இருக்கையில், அங்கிருந்த முசுக்கொட்டைச் செடியில் இருந்து ஒரு புழு, நல்ல இளம் மஞ்சள் நிறத்தில் ஒரு கூடு ஒன்றைக் கட்டியதைப் பார்த்து இருக்கிறார். அதனைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அரசி, கூட்டின் இழையப் பற்றி இழுக்க, அது நெடிய தூரம் நீண்டதாம். அதிலிருந்து, ஒரு கூடு ஒரே இழையில் ஆனதையும் தெரிந்து கொண்டு, நிறைய கூடுகளைச் சேர்த்து, பின் அதன் இழைகளைக் கொண்டு ஒரு சிறு ஆடை தயாரித்துப் பார்த்து, அதன் அழகில் மயங்கி, இப்படியாகத் துவங்கியதுதான் பட்டு நூலாடைகள். மேலும் இந்த வகை ஆடைகள் இராச குடும்பத்தில், அதுவும் சீனாவில் மட்டுமே ரகசியமாக வைக்கப்பட்டதாம்.
இப்படியாக சுமார் 2500 ஆண்டுகள் கழிந்துவிட, |ரோமானிய மன்னன் எதேச்சையாக சீன இளவரசியைத் திருமணம் செய்ய, முதல் முறையாக பட்டுக் கூடும், புழுவும் எல்லை தாண்டியது. எனினும் அவர்கள் அதனை வளர்க்கத் தெரிந்து இருக்கவில்லை. எனவே பாதிரியார் ஒருவரைச் சீனாவுக்கு அனுப்பி, அவர் மூலமாகத் தெரிந்து கொள்ள முறபட்டும், முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. இப்படியாக, சீனாவின் பட்டு நூலாட்சி கொடி கட்டிப் பறந்தது.
இந்தச் சூழலில், ஜப்பானியர்கள் வெகு சாமர்த்தியமாக பட்டு நூல் வளர்க்கத் தெரிந்த நான்கு சீனப் பெண்மணிகளைக் கடத்திச் சென்று அல்லது பணிப் பெண் வேலைக்கென அழைத்துச் சென்று, பின் திருமணம் செய்து கொண்டார்கள். அதன் பின் ஜப்பானியர்கள் அவர்கள் மூலமாக பட்டு நூல் வளர்ப்பைத் துவக்கி, அதன் உற்பத்தியில் மேம்பாடு கண்டு சீனாவின் உற்பத்தியை விடப் பன்மடங்கு உற்பத்தி செய்ய ஆரம்பித்து விட்டார்களாம். ஆனால், சீனர்களுக்கு அபிவிருத்தி செய்யத் தெரிந்து இருக்கவில்லையாம்.
அதன் பின்னர் ஜப்பான் பட்டு நெசவு, வளர்ப்புக்கான காப்புரிமையை மேலை நாடுகளுக்கு தர முன் வந்ததும், இந்தியாவும் சீனாவின் இரகசியத்தைத் தெரிந்து கொண்டதும் உலகளாவிய பட்டு நெசவுக்கு வழி வகுத்தது.
0 comments:
Post a Comment