இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, May 9, 2013

மணப்பாறை முறுக்கு


மூக்கு முட்ட சாப்பிட்டாலும் , நொறுக்குத் தீனி இல்லாவிட்டால் பெரும்பாலோனோர் தவித்துப் போய்விடுவார்கள். நொறுக்குத் தீனிகளில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது முறுக்குதான். முறுக்கு என்றதுமே மணப்பாறை முறுக்கு தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்குமணப்பாறை- முறுக்குக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.
தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சியிலிருந்து மணப்பாறைக்கு காரில் ஒரு மணிநேரத்தில் சென்று சேரலாம். இங்குதான் சுவையும் மணமும் நிறைந்த மணப்பாறை முறுக்கு தயாரிக்கப்படுகிறது. கல்ஃப் நாடுகள், மலேஷியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறதாம். ரோமில் உள்ள ஒரு பிஷப்புக்கும் கூட இந்த முறுக்கை அனுப்பிவைக்கிறார்களாம். இனிப்பாகவும் இல்லாமல், காரமாகவும் இல்லாமல் ஒரு வித்தியாசமான சுவையோடு மணக்கும் இந்த மணப்பாறை முறுக்கு அனைவராலும் விரும்பப்படுகிறது.
இந்த முறுக்குக்கு ஒருவித அபாரமான ருசி எப்படி ஏற்படுகிறது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயற்கையே!. இதற்கு உள்ளூர்வாசிகள் கூறும் பதில் என்னவென்றால், மணப்பாறையில் கிடைக்கும் லேசான உப்பு ருசி கலந்த தண்ணீர்தான் என்கிறார்கள். இந்த உப்புத் தண்ணீர்தான் இந்த முறுக்குக்கு ஒருவித வாசனையையும் கொடுப்பதாக சொல்கிறார்கள். இது மட்டுமின்றி, முறுக்கை இவர்கள் இரண்டு தடவை பொறித்தெடுப்பதாக சொல்கிறார்கள்.ஒருமுறை பொறித்தெடுத்து வைத்துவிட்டு 3 நிமிடம் கழித்து கரகரப்பாக வரும்படி மீண்டும் பொறித்தெடுக்கிறார்கள். இப்படி பொறிப்பதால் வித்தியாசமான ருசி கிடைப்பதாக சொல்கிறார்கள். இந்த மண்ணிலேயே விளையும் பச்சரிசியைத்தான் முறுக்கு தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். அதுவும் பிரத்தியேகமான ருசிக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. சில ஸ்பெஷல் ஆர்டர்கள் வந்தால், முறுக்கு மாவுடன் நெய்யோ, வெண்ணையோ முறுக்கு மாவுடன் கலந்து ரிச்சாக தயாரிக்கப்படுகிறது.
மணப்பாறை முறுக்கு செய்யும் முறை எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி -1 கிலோ;கொஞ்சமாக உளுத்தம்பருப்பு இரண்டையும் நன்கு மாவாக்கி அத்துடன் ஜீரகம் , எள்,பெருங்காயம் ஓமம், 10 கிராம் உப்பு இவற்றை கலந்து அத்துடன் தண்ணீரை கொஞ்சமாக விட்டுக் கலந்து, அத்துடன் கொஞ்சம் எண்ணெயும் சேர்த்துப் பிசைந்து கொண்டபின், முறுக்கு மேக்கரில் விட்டு முறுக்கு இழைகளாக தயாரித்து, அந்த முறுக்குகளை கொஞ்ச நேரம் உலர வைக்க வேண்டும். கொஞ்ச நேரம் கழித்து எடுத்து கடலை எண்ணெயில் பொறித்து எடுத்து வைத்து விட்டு இரண்டாவது பேட்ச் முறுக்குகளைப் போட்டு பொறித்து எடுத்து வைக்கவேண்டும். பிறகு முதலில் பொறித்துவைத்த முறுக்குகளை திரும்பவும் பொறிக்கவேண்டும். அடுத்து இரண்டாவது பேட்ச் முறுக்குகளை பொறிக்க வேண்டும். இப்படியாக இரண்டிரண்டு தடவைகளாக பொறிக்கவேண்டும். பின்னர், காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்து டைட்டாக மூடிவிட வேண்டும். கொஞ்சம் ரிச்சாக இருக்கவேண்டுமானால், வெண்ணெய் அல்லது நெய் சேர்க்கலாம். இதுவே மணப்பாறை முறுக்கு செய்யும் விதம்.!
ஆனாலும் மணப்பாறையில் ஊறும் தண்ணீரும் மணப்பாறையில் விளையும் அரிசிக்கும் மட்டும்தான் அந்த சுவையும் மணமும் வருமாம்!.
முறுக்கு செய்யும் முறை என்னவோ எளிதாகத் தோன்றினாலும், கடின உழைப்பு தேவைப்படுகிறது. குடிசைத் தொழிலாக இதனை வீட்டுக்கு வீடு செய்யும் மக்கள் விடிகாலை 4 .00 மணிக்கு எழுந்து மதியம் 2.00 மணி வாக்கில் வேலையை முடிக்கிறார்கள். தீபாவளி ஸீசனில் மட்டும் வேலை முடிய நள்ளிரவு தாண்டிவிடுமாம்.
மணப்பாறை முழுவதும் 200 குடும்பங்களுக்கும் மேலாக முறுக்கு தயாரிப்பையே முக்கிய தொழிலாக செய்கிறார்கள். ஆனாலும் இவர்களுக்கு பெருத்த லாபம் கிடைப்பதில்லை. குறைவான மார்ஜின் வைத்துதான் முறுகள் விற்கப்படுகின்றன. . ஒரு முறுக்கு ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பொருட்களின் விலை ஏற்றம் இந்த முறுக்கு விலையில் மாற்றம் கொண்டு வருவதில்லையாம். சில ஸ்பெஷல் முறுக்குகளும் கிடைக்கின்றன. அவை இரண்டு ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. அவை இரண்டு மடங்கு பெரியதாக இருப்பதோடு, வெண்ணெய் சுவையோடு இள மஞ்சள் வண்ணத்தில் கிடைக்கின்றன.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites