இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, October 20, 2021

ரப்பர் தொழில்.

 ன்னியாகுமரி மாவட்டத்தில் பணப்பயிரான ரப்பர் மரச் சாகுபடி அதிக அளவு செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலானோர் ரசாயன உரம் பயன்படுத்திதான் ரப்பர் விவசாயம் செய்கிறார்கள். அதிலும் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள சில எஸ்டேட்டுகளில் ரப்பர் மரங்களின் இலை உதிராமல் இருக்க ‘சல்பர்’ அடிப்பதாகக் குற்றச்சாட்டு இருந்துவருகிறது.


‘சல்பர்’ என்ற ரசாயன மருந்து தண்ணீரில் கலப்பதால் நீர் நிலைகளில் நச்சுத்தன்மை ஏற்படுவதாகவும், அந்தத் தண்ணீரைக் குடிப்பவர்களுக்குப் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதாகவும் சொல்லப் படுகிறது. இந்நிலையில் எந்தச் செயற்கை உரமும் பயன்படுத்தாமல் தனது 40 சென்ட் நிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இயற்கை முறையில் ரப்பர் விவசாயம் செய்து, நல்ல லாபம் ஈட்டி வருகிறார் மார்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு பகுதியைச் சேர்ந்த கிரேஸ் ராணி.

தோட்டத்தில் உற்பத்தியான ரப்பர் பாலிலிருந்து தயாரித்த ரப்பர் ஷீட்டுகளை வீட்டில் உலர வைத்துக்கொண்டிருந்தவரைச் சந்தித்தோம். மகிழ்ச்சியோடு வரவேற்றவர், தனது ரப்பர் தோட்டத்துக்கு நம்மை அழைத்துச் சென்று ரப்பர் மரங்களைக் காட்டியவாறே பேசினார் கிரேஸ் ராணி.

ரப்பர் மரத் தோட்டத்தில் கிரேஸ் ராணி
ரப்பர் மரத் தோட்டத்தில் கிரேஸ் ராணி

40 சென்ட்... 120 மரங்கள்

“இது 40 சென்ட் நிலம். இதுல கொல்லாமாவு (முந்திரி மரம்) பனை மரம் எல்லாம் இருந்துச்சு. ஆனா, அதுல எந்த வருமானமும் கிடைக்கல. அந்த மரங்களை எல்லாம் அழிச்சுட்டு 10 வருஷத்துக்கு முன்ன ரப்பர் மரங்களை நட்டோம். இந்த 40 சென்ட்ல 120 மரங்கள நட்டிருக்கோம். அதுல இப்ப 100 மரங்க பால் வெட்டுது” என முன்னுரைக் கொடுத்தவர் ரப்பர் மரம் நடவு பற்றி விவரித்தார்.

“ரப்பர் மரம் நடணும்னு ரப்பர் போர்டுல சொன்னா போதும். அவங்க வந்து நிலத்தைப் பார்த்துட்டு என்ன ரகம் ரப்பர் வைக்கலாம், எத்தனை மரம் வைக்கலாம்னு சொல்வாங்க. அப்படிதான் இந்த நிலத்தில ரப்பர் நட்டோம். நிலத்தில குண்டு (குழி) எடுத்து, நல்ல ஒணந்த சாணம் (உலர்ந்த எரு) ஒரு குண்டுக்கு சுமார் 5 கிலோ போட்டோம். அதுக்கு மேல ஒணந்த சாணம் போட்டு மண்ணப் போட்டு மூடினோம். அதுல ரப்பர் தை (நாற்று) வாங்கி வெச்சோம்.

மரத்திலிருந்து வடியும் பால்
மரத்திலிருந்து வடியும் பால்

6-ம் ஆண்டில் அறுவடை

ரப்பர் மரத்த பொறுத்த அளவுல ஒரே ஒரு தடவைதான் குழிக்குள்ள அடி உரம் போட முடியும். அதுக்கு பெறவு மத்த மரங்கள போலக் குழி வெட்டி உரம் போட முடியாது. பொதுவா மழைக்காலமான ஜூன், ஜூலை-யிலதான் ரப்பர் மரம் நடவு செய்யணும். அப்ப தண்ணி ஊத்துற வேலை மிச்சமாவும். ரப்பர் செடி நட்ட பெறவு மண்புழு உரம், இலைதழையெல்லாம் போட்டுதான் வளத்தோம். 6-வது வருஷத்துல பால் வெட்டுறதுக்கு உள்ள தரம் ஆச்சுது. அதுல இருந்து பால் வெட்டத் தொடங்கினோம்.

ஊடுபயிர் வருமானம்

ரப்பர் பால் வெட்டத் தொடங்கின மொத வருஷத்துல நாம செலவு செய்த முதலீடு எல்லாம் கிடைச்சுரும். ஆனா, நாங்க ரப்பர் நட்ட மொத வருஷம் வெண்டை, வெள்ளரி, பயறு எல்லாம் நட்டதிலயே ரப்பர் நாற்று வாங்குன 3,500 ரூபாயும், உரம் வாங்கினதுக்கான பணமும் கிடைச்சுட்டுது” என்றவர், இயற்கை உரம் போட்டு ரப்பர் மரம் வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும், லாபம் பற்றியும் சொன்னார்.

காயவைக்கப்பட்டிருக்கும் ரப்பர் ஷீட்
காயவைக்கப்பட்டிருக்கும் ரப்பர் ஷீட்

இயற்கையில் நோய்த் தாக்குதல் இல்லை

“இயற்கை முறையில ரப்பர் மரம் வளர்த்ததுனால ஓகி புயல் வந்த சமயத்தில எங்களுக்கு ஒரு மரம்கூட முறியல. எங்க தோட்டத்துக்குப் பக்கத்தில செயற்கை உரம் போடுற ரப்பர் தோட்டத்தில ஓகி புயல் சமயத்துல மரங்கள் முறிஞ்சது. அதுபோல ரப்பர் மரத்துக்கு இலைச்சுருட்டு, வேர் அழுகல், பட்டைச் சீவல் நோய்கள் வரும். பட்டைச் சீவல்னா மரத்தோட பட்டையில கறுப்பு கலர்ல ஒரு மாதிரி சீழ்போல வரும். இயற்கை முறையில ரப்பர் வளர்க்கிறதுனால இந்தமாதிரி நோய்கள் எல்லாம் வரல.

ரப்பருக்கு ஒரு வேர்தான் ஆழத்தில இருக்கும். மற்ற வேர்கள் எல்லாம் மேலதான் இருக்கும். ரசாயன உரம் போடும்போது அந்த வேர்கள் எல்லாம் செத்துப்போகும். மண் வளமும் இருக்காது. செயற்கை உரம் போட்டா தோட்டத்தில உள்ள மண்ணு பாறை மாதிரி ஆயிரும். அதனால வேர்களுக்குக் கெடுதல் வரும். இயற்கை உரத்தால எங்க தோட்டத்தில மண் எப்பவும் பஞ்சுமெத்த மாதிரி நல்லா இருக்கும். அதுபோக மழை நீரைச் சேமிக்கச் சாலுபோல (நீளவாக்கில் பள்ளம்) போட்டிருக்கோம். மழை இல்லாம பனிகாலத்தில இங்க வளர்ந்து நிக்கிற செடிகள்ல பனி படர்ந்து தரையை ஈரப்பதமா வெச்சுகிடும். மலைப்பாங்கான இடம்ங்கிறதால இதுக்கு அதிகமா உரமும் தேவையில்ல, தண்ணியும் தேவையில்ல. பிப்ரவரி மாசம் வெயில் காலத்தில இலை உதிர்ந்துபோவும். அந்தச் சமயத்தில பால் வெட்டாம அப்பிடியே விட்டிருவோம்” என்றவர், பால் உற்பத்தியில் வரும் வித்தியாசத்தை விவரித்தார்.

ரப்பர் மரத்தோட்டம
ரப்பர் மரத்தோட்டம

4 கிலோ ஷீட்

“ரசாயன உரம் போடுறவங்களுக்கு ஒரு நாள் வெட்டுக்கு 30 லிட்டர் பால் கிடைக்குதுன்னா, இயற்கை முறையில வளர்க்கிற ரப்பர் தோட்டத்துல 40 லிட்டருக்கு மேல பால் கிடைக்கும். 40 சென்ட்டுல உள்ள எங்க மரத்தில ஒருநாள் கிடைக்குற பால் உலத்தினா 4 கிலோ ரப்பர் ஷீட் கிடைக்குது.

இயற்கை முறையில வளர்க்கிற ரப்பர்ல கிடைக்கிற பால் நல்ல கட்டியா இருக்கும். அதனால எடை அதிகமாவும் இருக்கும். இந்தப் பால் எடுக்கிறதுக்கு ஒரு மரத்துக்கு ஒரு ரூபா, ஒன்னரை, ரெண்டு ரூபா வரைக்கும் கூலி இருக்கு’’ என்றவர் ரப்பர் ஷீட் தயாரிப்பு பற்றிப் பேசினார்.

‘‘அரை லிட்டர் பாலுக்கு ஒரு ஷீட் அடிப்போம். இயற்கை முறையில அடிக்கிற ஷீட்டுக்குத் தனி விலை கிடையாது. ஆனா, பால் கட்டியா இருக்கிறதுனால எடை கூடுதலா இருக்கும். . மாசம் சராசரியா 48 கிலோ ரப்பர் ஷீட் விற்பனை செய்வோம். நாலு மாசத்துக்கு சீஸன் இருக்கும்.

இயற்கை முறையில வளர்க்கிற ரப்பர்ல கிடைக்கிற பால் நல்ல கட்டியா இருக்கும். அதனால எடை அதிகமாவும் இருக்கும்.

பாலுக்கு மவுசு

முதல் தர ரப்பர் ஷீட் கிலோ 165 ரூபாய் விற்குது. தரம் குறைஞ்ச ரப்பர் ஷீட் கிலோ 145 ரூபாய்க்குப் போகுது. நாலு மாசத்துக்கு சுமார் 30,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். மூணுல ஒரு பங்கு செலவாகும். அந்த வகையில் 40 சென்ட்டுக்கு சுமார் 20,000 ரூபாய் லாபம் கிடைக்கும். ஆனா ஒணக்க (உலர்ந்த) ஷீட்டை விடப் பச்சப் பாலுக்குதான் விலை கூட. இப்ப பச்சப்பால் ஒரு கிலோ 175 ரூபாய்க்கு விக்குது. கொரோனா காலத்தில கை உறை தயாரிக்கிறதுக்காகப் பச்சப் பால் அதிகமா கேக்குறாங்க. நாங்க இனிமே பச்சப் பாலாத்தான் கொடுக்கப்போறோம். அதுக்கு ரப்பர் போர்டு வழியா ட்ரம் கொண்டுவந்து தருவாங்க. அதில நாம பாலை அரிச்சு விட்டா போதும். அவங்க எடைபோட்டு எடுத்துட்டு போவாங்க. ரப்பர் பாலை கட்டியாக்கி ஷீட் அடிக்க வேண்டிய தில்ல. ஒணத்த வேண்டிய வேலை இல்ல. அதுமட்டுமில்லாம ஒணந்த ரப்பர் ஷீட்டை விடப் பச்சப்பால் எடையும் கூடுதலா இருக்கும். அதனால பச்சபால் கொடுக்கிறதுதான் லாபமா இருக்கும்” என்றவர் நிறைவாக.

ரப்பர் மரத்தோட்டம
ரப்பர் மரத்தோட்டம

“ரப்பர் லாபகரமான விவசாயம்தான். ரப்பர் மரத்துக்குப் பால் வெட்டுறது, உரம் போடுறதுன்னு மூணுல ஒரு பங்குச் செலவு ஆவும். ரெண்டு பங்கு லாபமா கிடைக்கும். ரப்பர் பால் வெட்டுறதுக்குப் பயிற்சி எடுத்துக் கிட்டுப் பால் வெட்டுனா இன்னும் லாபமா கிடைக்கும். என் ரப்பர் தோட்டத்துல நான்தான் முன்னாடி பால் வெட்டிக்கிட்டு இருந்தேன். ஆனா, இப்ப கூலிக்கு ஆள் வெச்சுதான் வெட்டுறோம்” என்று விடைகொடுத்தார்.



தொடர்புக்கு, கிரேஸ் ராணி,

செல்போன்: 87785 00165

ரப்பர் சாகுபடியில் கிடைக்கும் வருமானம் குறித்து
கிரேஸ் ராணி சொன்ன தோராயக் கணக்கு


கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏக்கர் கணக்கில் ரப்பர் விவசாயம் செய்பவர்கள் உண்டு. ஆனால், பிற வேலை செய்துகொண்டே வீட்டின் அருகே சிறிய இடங்களில் ரப்பர் வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் அதிகம். ரப்பர் பாலை தொழிலாளர்கள் வெட்டி வைத்துவிட்டுப் போனால், அதை ஷீட்டாக மாற்றி உலர வைத்து விற்பனை செய்வதைத் தோட்டத்தின் உரிமையாளர் கவனித்துக்கொள்வார். இதனால் பிற வேலைகள் பாதிக்காது.

100 ரப்பர் மரங்களை இயற்கை முறையில் வளர்த்தால் மாதம் சராசரியாக 48 கிலோ ரப்பர் ஷீட் உற்பத்தி செய்யலாம். ஒரு கிலோ ரப்பர் ஷீட் 165 ரூபாய் எனக் கணக்கிட்டால் 7,920 ரூபாய் கிடைக்கும். இதில் உரம், ரப்பர் பால் வெட்டும் கூலி எனச் சுமார் 2,640 ரூபாய் செலவு ஆகும். மீதி 5,280 ரூபாய் லாபமாகக் கிடைக்கும். சொந்தமாக ரப்பர் பால் வெட்டினால் இன்னும் கூடுதலாக 2,000 ரூபாய் லாபம் கிடைக்கும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites