இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, May 22, 2013

பசுமை நாயகன் கணேஷ்!




கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அரசு தரும் மானியத்தை விடவும், தொலைத்தொடர்பு துறைக்கு அரசு போடும் திட்டங்களை விடவும்,  விவசாயத் துறைக்கு மானியம் கிடைப்பது மிக மிகக் குறைவு. அப்படி அரசு அரிதாகப்போடும் திட்டங்களும், மானியங்களும் விவசாயிகளுக்கு முழுமையாகப் போய்ச்சேருகிறதா என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. அப்படித் தப்பித்தவறி அரசியல்வாதிகளின் கவனக்குறைவால் அவர்களின் பாக்கெட்டுக்குப் போகாமல் விவசாயிகளுக்குப் போகிறது என்றாலும் ஊரில் உள்ள அரசியல் செல்வாக்கு மற்றும் பணம் உள்ள விவசாயிகளுக்குத்தான் போய்ச்சேர்கிறது. இப்படி ஏழை விவசாயிகளுக்கும் அரசுக்கும் உள்ள இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் வேளையில், அந்த இடைவெளியைப் பாலம்போல செயல்பட்டு  இணைத்துக்கொண்டிருக்கிறது புதுவையில் இயங்கிவரும் சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மை அபிவிருத்தி மையம் என்ற தனியார் அமைப்பு. ஏழை விவசாயிகளுக்குக் கடன் வாங்கித்தருவது, புதிய திட்டங்களை அவர்களிடம் அறிமுகப்படுத்துவது என முழுமையாக விவசாயிகளுக்கென இயங்கிக்கொண்டு வருகிறது இந்த மையம்.
ரசாயன உரங்களே போடாமல், இயற்கை உரங்களால் விளையும் கீரைகளைத் தன் தோட்டத்தில் விவசாயிகளிடம் அறிமுகம் செய்துகொண்டிருந்த இந்த மையத்தின் தலைவர் கணேஷைச் சந்தித்தேன்.
''வேளாண்மையில் பட்டபடிப்பை முடித்தபிறகு  அரசு வேலைக்காகக் காத்திருந்தேன். அப்போ நிறைய கிராமங்களில் சுத்தித் திரிஞ்சப்ப, மண்புழு உரம், சொட்டு நீர்ப்பாசனம்னு நிறைய அரசு திட்டங்கள் ஏழை விவசாயிகளிடம் போய்ச் சேராமலே இருப்பது தெரிந்தது. என்னதான் நாம் நிறைய தொழில்நுட்பத்தைக் கண்டு பிடிச்சாலும் அதைப் பயன்படுத்துவது விவசாயிகள்தானே. நம்ம ஊர் விவசாயிகளுக்காக ஏதாவது பண்ணனும்னு தோணுச்சு. சரி... அரசு வேலை எல்லாம் வேணாம்னு இந்த மையத்தைத் தொடங்கிட்டேன்.
இந்த மையத்தோட முக்கிய பணிகள், அரசின் புதிய திட்டங்களை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்துவதுதான். கடன் வேணும்னா நாங்களே கடன் வாங்கித்தர்றோம்; புதுசா அறிமுகப்படுத்துற பயிர்களை எப்படிப் பயிற்றுவிப்பதுனு பயிற்சி தருவது,  விவசாயத்துக்குத் தேவையான எந்திரங்களைத் தருவது என்பதோடு விளைந்த தானியங்களை நாங்களே மார்கெட்டிங்கும் பண்ணித்தர்றோம். இது மட்டும் இல்லாம 20 பேர்கொண்ட விவசாயக் குழுக்களை உருவாக்கி மாதாமாதம் அவங்களே 200, 300 ரூபாய்னு போட்டு சேமிப்பாங்க. இப்படி ஐந்து மாதம் சேமித்த பணத்தைக் குழுவுல இருக்கிறவங்களுக்குக் கடன் தேவை பட்டுச்சுன்னா தருவாங்க. இதனால, கந்து வட்டிக்காரங்ககிட்ட கை ஏந்தவேண்டிய அவசியம் இல்லை பாருங்க.
புதுவை கடலோர கிராமத்தைச் சேர்ந்த 3,000 விவசாயிகள் எங்களிடம் உறுப்பினராக இருக்காங்க. நபார்டு வங்கி மூலமாக விவசாயிகளுக்கு ஏராளமான கடன்கள் கிடைக்குது. ஆனா, விவசாயிகளுக்கு யாரிடம் கடன் கேட்பது, என்ன சொல்வாங்களோனு பயம் இருக்கும் இப்போ யாருக்கும் எந்தப் பயமும் இல்லாம பேசுறாங்க. விவசாயிகளுக்காகவே ஒருங்கிணைந்த பண்ணையை உருவாக்கி இருக்கிறோம். இந்தப் பண்ணையில் மண்புழு உரம் தயாரிப்பு, காளான் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, இயற்கை கீரைகள்னு நிறைய திட்டங்கள் இருக்கு. இங்கே வந்து விவசாயிகள் கற்றுக்கொண்டு அவங்க இடத்துல பயிர் செய்வாங்க. இதுக்கெல்லாம் அதிகச் செலவும் இருக்காது. நெல், கரும்பு போன்ற அதிகச் செலவு செய்யவேண்டிய பயிர்களை வளர்க்கமுடியாத ஏழை விவசாயிகள் இது போன்ற சுயத்தொழிலில் ஈடுபடலாம்.
வேளாண்மை படிச்சிட்டு வேலை இல்லாமல் இருக்கும் மாணவர்களுக்கு எங்கள் மையம் மூலமாக இரண்டு மாதம் வேளாண்மை தொழிற்பயிற்சி தர்றோம். இந்தப் பயிற்சிக்கு அப்புறம் மாணவர்கள் விவசாயிகளுக்கு உதவியாக இருப்பாங்க. மாணவர்களுக்கு ஊதியமும் கிடைக்கும். சுய தொழில் தொடங்குறவங்களும் தொடங்கலாம்'' என்று நம்பிக்கையோடு முடித்தார்.
இவர்போல மனிதர்கள் ஊருக்கு ஒருவர் இருந்துவிட்டால் இந்தியாவே பசுமைக்காடாக மாறி விடும்!
- ஆ.நந்தகுமார்

CONTACT

CENTRE FOR ENVIRONMENT AND AGRICULTURAL DEVELOPMENT(CEAD)
91, NALLAVADU ROAD,
THAVALAKUPPAM,
ABISEGAPAKKAM POST,
PONDICHERRY - 605007

PHONE: 0413 2618713
MOBILE: 9894313435

email: cead03@yahoo.co.in

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites