இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, September 24, 2012

சிப்ஸ் தயாரிப்பில் சிறப்பான வாழ்க்கை

சிம்பிளான உணவுதான்! ஆனாலும், சாதாரண ரசம் சாதத்தையும் அறுசுவையாக்குவதில் இருந்து, அறுசுவை விருந்தில் தவிர்க்க முடியாத இடம் பெறுவது வரை சிப்ஸின் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். சாப்பிடவே அடம் பிடிக்கிற பிள்ளைகளுக்கும், சிப்ஸ் இருந்தால், இரண்டு வாய் அதிகமாகவே இறங்குவதை மறுப்பதற்கில்லை. இப்படி எல்லா வயதினருக்கும் எல்லாக் காலத்திலும் பிடித்த உணவாக இருக்கும் சிப்ஸை கடைகளில் வாங்குவது எந்தளவு ஆரோக்கியமானது? திரும்பத் திரும்ப உபயோகிக்கிற எண்ணெய், கிழங்கின் தரம், செய்கிற சூழல் என எல்லாவற்றிலும் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் இல்லை. ‘வீட்லயே செய்யலாம்தான்... ஆனா கடைகள்ல வாங்கற மாதிரி டேஸ்ட்டும் கலரும் கிடைக்கிறதில்லையே...’ என்பது அம்மாக்கள் சொல்லும் நியாயமான காரணம். ‘‘நான் சொல்ற மாதிரி செய்து பாருங்க. அப்புறம் கடையில விக்கிற சிப்ஸ் வேணாம்னு சொல்ற அளவுக்கு நீங்க சிப்ஸ் எக்ஸ்பர்ட் ஆயிடுவீங்க’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த காவேரி!

‘‘முயற்சி செய்து பார்க்கிற வரைக்கும், எனக்கும் சிப்ஸ் செய்யறதுங்கிறது கம்ப சூத்திரம் மாதிரிதான் இருந்தது. யதேச்சையா ஒருநாள் வீட்டுல உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்து பார்த்தேன். நல்லா வந்தது. அப்புறம் மறுபடி செய்து, அக்கம்பக்கத்துல சாம்பிள் கொடுத்தேன். கடையில வாங்கும் சிப்ஸைவிட நல்லா இருக்கிறதா சொல்லி, ஆர்டர் கொடுத்தாங்க. நான் மகளிர் சுயஉதவிக் குழுவுல இருக்கிறதால, குழு உறுப்பினர்கள் தொடர்ந்து ஆர்டர் கொடுப்பாங்க. அது தவிர, அக்கம் பக்கத்து வீடுகள், சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்கன்னு எல்லோரும் எப்பவும் என்கிட்ட மட்டும்தான் சிப்ஸ் வாங்குவாங்க. சுத்தமான எண்ணெய், நல்ல கிழங்கு இந்த ரெண்டுதான் தரம் மற்றும் சுவையோட ரகசியம்’’ என்கிற காவேரி, உருளைக்கிழங்கு தவிர, மரவள்ளிக்கிழங்கு, நேந்திரங்காய், வாழைக்காய் சிப்ஸ் செய்வதிலும் நிபுணி! சிப்ஸ் பிசினஸால் வாழ்க்கை சிறப்படைந்ததில் இவருக்கு அளவில்லாத பெருமை! (தொடர்புக்கு: 97907 50573)

இது இப்படித்தான்!

மூலப் பொருள்கள்
உருளைக்கிழங்கு, வாழைக்காய், நேந்திரங்காய், மரவள்ளிக்கிழங்கு, எண்ணெய், மிளகாய் தூள், உப்பு, தண்ணீர், சிப்ஸ் சீவும் கட்டை, பெரிய கடாய், அடுப்பு, பேக்கிங் செய்ய கவர்கள், சீலிங் மெஷின் மற்றும் எடை மெஷின்.

எங்கே வாங்கலாம்?
உருளைக்கிழங்கைப் பொறுத்த வரை சாதாரண கிழங்கில் சிப்ஸ் சரியாக வராது. சிப்ஸ் கிழங்கு என்று கேட்டு வாங்க வேண்டும். வெள்ளை வெளேர் என அழுத்தமாக இருக்கும். எல்லா கடைகளிலும் அது கிடைக்காது. கோயம்பேடு மாதிரியான மொத்த விலை விற்பனை நிலையங்களில் தேர்வு செய்து வாங்கலாம். நேந்திரங்காய், வாழைக்காய், மரவள்ளிக் கிழங்கு வகையறாக்களையும் ஃபிரெஷ்ஷாக தேர்வு செய்ய வேண்டும்.  கடாய், சிப்ஸ் கட்டை, சீலிங் மற்றும் எடை மெஷின்களை பாத்திரக்கடைகளில் வாங்கலாம்.

முதலீடு

கிழங்கு, காய், எண்ணெய் உள்ளிட்ட மளிகை சாமான்கள் வாங்க ஆயிரம் ரூபாய் தேவை. கடாய், சிப்ஸ் கட்டை மற்றும் கவர்களுக்கு 350 ரூபாய். எடை மெஷின் 500 ரூபாயிலிருந்து கிடைக்கும். சீலிங் மெஷினுக்கு 750 ரூபாய். 

இட வசதி?

வெளிச்சமான, சுத்தமான இடம் தேவை. சில வகை சிப்ஸ்களை சீவி காய வைக்க வேண்டியிருக்கும். அந்த இடம் ஈரப்பதம் இல்லாமல், அதே நேரம் சுத்தமானதாக இருக்க வேண்டியது அவசியம். ஆரம்ப நிலையில் அடுப்படியிலேயே வைத்து சமாளிக்கலாம்.

மாத வருமானம்?
1 கிலோ கிழங்கில் 350 முதல் 400 கிராம் சிப்ஸ் வரும். அதில் வேஸ்ட்டேஜை தவிர்க்க முடியாது. 1 நாளைக்கு 10 கிலோ வரை செய்யலாம். ஒரு பாக்கெட் (100 கிராம்) 25 ரூபாய்க்கு கொடுக்கலாம். அதில் 5 ரூபாய் லாபம் நிற்கும்.

மார்க்கெட்டிங்?

உங்களுடைய முதல் இலக்கு அக்கம்பக்கத்து வீடுகள், பள்ளிக்கூடங்கள் என உங்களுக்குத் தெரிந்த, அறிமுகமான, உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள நபர்களாக இருக்கட்டும். பிறகு கேட்டரிங் கான்டிராக்டர்களை பிடித்து, சிப்ஸுக்கு மட்டும் ஆர்டர் எடுக்கலாம். மெல்ல மெல்ல கடைகளுக்கும் சப்ளை செய்யலாம். இந்த பிசினஸில் நிறைய நேரம் மெனக்கெட வேண்டிய அவசியமில்லை. ஆர்டர் வர வர, அவ்வப்போது ஃபிரெஷ்ஷாக செய்து கொடுக்கலாம்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites