இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, September 22, 2012

புதிய தொழில் முனைவோருக்கு 'டிக்' முன்னுரிமை


தமிழகத் தொழில் முதலீட்டு கழகம் (டிக்), வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கு, நடப்பு 2012-13ம் நிதியாண்டில் 100 கோடி ரூபாய் கடன் வழங்கத் திட்டமிட்டுள்ளது.நிலம், கட்டடம், இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்கு, நீண்ட கால தவணையில் கடன் வழங்கி வரும், தமிழக அரசின், 'டிக்' மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. அரிசி மற்றும் மாவு ஆலைகள், எண்ணெய் உற்பத்தி, கடல் உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் போன்ற 25க்கும் மேற்பட்ட வேளாண் பொருள் மதிப்புக்கூட்டு தொழில் துவங்குவோருக்கு, கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. மாறுபடும் வட்டி விகிதம்: ஒரு தொழில் நிறுவனத்திற்கு, குறைந்தபட்சம் 14.75 சதவீதம், அதிகபட்சம் 16.25 சதவீதம் வட்டியில், இரண்டு லட்சம் ரூபாய் முதல் 20 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் கடன்களுக்கு, மாறுபடும் வட்டி விகித முறை பின்பற்றப்படுகிறது.'டிக்' மூலம் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மொத்த கடனில், 12 சதவீதம் வேளாண் மற்றும் அது சார்ந்த தொழில்களுக்கு அளிக்கப்படுகிறது. மானிய உதவி:தமிழகத்தில் உள்ள 385 ஒன்றியங்களிலும், வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்களைத் துவங்குவோர்களுக்கு, இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்கு அதன் மொத்த முதலீட்டில், குறைந்தபட்சம் 15 சதவீதம், அதிகபட்சம் 30 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.இவை தவிர, மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் துறை சார்பில், இயந்திரம் வாங்குவதற்கும், உற்பத்திக் கூடம் கட்டுவதற்கும் (சாலை, குடிநீர் தொட்டி, சுற்றுச் சுவர் தவிர) மானியம் வழங்கப்படுகிறது. திட்டத்தின் மொத்தச் செலவில், குறைந்தபட்சம் 25 சதவீதம் என்ற அளவில் அதிகபட்சம் 50 லட்சம் ரூபாய் வரை மானியம் அளிக்கப்படுகிறது.மத்திய அரசு, 'கிரெடிட் லிங்க்ட் கேபிடல் சப்சிடி ஸ்கீம்' என்ற திட்டத்தின் கீழ், கரும்பு அறுவடை இயந்திரம் போன்ற குறிப்பிட்ட வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கு, குறைந்தபட்சம் 15 சதவீதம் என்ற அளவில், அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்குகிறது.மேற்கண்ட மானியங்கள் அனைத்தும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. இந்த மானியங்களை மத்திய, மாநில அரசுகளிடமிருந்து, பெற்றுத் தரும் முகமை அமைப்பாகவும், 'டிக்' செயல்படுகிறது. இது தவிர, மூலப்பொருட்கள், ஊதியம் உள்ளிட்ட செலவினங்களைச் சமாளித்து, தொய்வின்றி தொழிலைத் தொடர உதவும் வகையில், தொழில் முனைவோருக்கு நடைமுறை மூலதனமும் வழங்கப்படுகிறது. மாநிலத்தின் வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், உணவு பதப்படுத்துதல் தொழிலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், 100 கோடி ரூபாய் கடன் வழங்கத் திட்டமிட்டுள்ளது.சுய தொழில்:இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆண்டுதோறும், பொறியியல் மற்றும் தொழில்கல்வி பயில்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கு, வேலைக்காக பல மாவட்டங்களிலிருந்து ஏராளமான இளைஞர்கள் வருகின்றனர்.அப்படி வருபவர்கள், 'டிக்' அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், தாங்கள் சார்ந்த மாவட்டத்திலேயே, மேற்கண்ட தொழில்களைத் துவங்க, கடன் வழங்கப்படும். புதிய தொழில் முனைவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதன் மூலம், படித்த இளைஞர்கள் சுயதொழில் செய்து, சொந்தக் காலில் நிற்க வழி ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.- வீ.அரிகரசுதன் -

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites