இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, September 16, 2012

கைத்தறி

ம் நாட்டின் பாரம்பரியத் தொழில்களில் விவசாயத்துக்கு அடுத்தபடியாகக் கருதப்படுவது கைத்தறி நெசவுத் தொழில். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ஐந்து லட்சம் குடும்பங்கள் கைத்தறி நெசவுத் தொழிலை வாழ்வின் ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன. விவசாயத்தைத் தொடர்ந்து தற்போது கைத்தறி நெசவுத் தொழிலும் அழியும் நிலையில் இருப்பதாகக் கவலை தெரிவிக்கிறார்கள் நெசவாளர்கள். ஏன் இந்த நிலமை?
எந்தத் தொழிலாக இருந்தாலும் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைத்தாலே தொழிலாளர்களின் மனமும் வயிறும் நிரம்பிவிடும். எல்லா சிறு தொழில்களிலும் இருப்பதைப் போலவே கைத்தறி நெசவாளர்களுக்கான கூலியைக் கைத்தறி முதலாளிகளே நிர்ணயிப்பதுதான் பிரச்னையின் அடிநாதம். இந்தப் பிரச்னைகுறித்து கைத்தறி நெசவாளியான சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே செம்மாண்டப்பட்டியைச் சேர்ந்த ரத்னவேலிடம் பேசினோம்.
''நான் 20 வருஷங்களாகக் கைத்தறி நெசவாளியாக இருக்கேன். இதுவரைக்கும் எங்களுக்கான கூலியை, எங்களோட முதலாளிங்கதான் நிர்ணயம் பண்றாங்க. தோராயமா ஒரு சேலைக்கு அதன் ரகத்தைப் பொறுத்து 500 முதல் 2,000 ரூபாய் வரைக்கும் முதலாளிகள் லாபம் பார்க்கிறாங்க. ஆனால், சேலையின் விற்பனை விலையில பத்து சதவிகிதம்கூட எங்களுக்கான கூலியாக முதலாளிகள் தர்றது இல்லை. காரணம் கேட்டால், தொழில் நஷ்டத்துல ஓடுதுனு சொல்றாங்க. நஷ்டத்துல ஓடுற தொழிலைப் பல வருஷங்களாக ஏன் அவங்க செய்றாங்க? தீபாவளிக்கு மட்டும் எங்களுக்கு போனஸ் கொடுப்பாங்க. அதுவும் மூன்று முதல் ஐந்து சதவிகிதம் வரை மட்டுமே. 17 வருஷங்களுக்கு முன்னாடி போட்ட ஒப்பந்தப்படிதான் இப்பவும் கூலி கிடைக்குது. அன்னைக்கு விலைவாசிக்கும் இன்னைக்கு விலைவாசிக்கும் வித்தியாசம் என்னனு முதலாளிகளுக்குத் தெரியாதா?'' என்று கேட்கிறார் வருத்தத்துடன்.
வேறு எந்தத் தொழிலிலும் இல்லாத அளவுக்கு இந்தத் தொழிலில் முதலாளிகளின் ஆதிக்கம் அதிகம். நெசவாளிகளின் கூலியைச் சுரண்டுதல், நஷ்டத்தைத் தொழிலாளிகளின் தலையில் சுமத்துபவர்கள், லாபத்தை மட்டும் தங்கள் கைகளிலேயே வைத்துக்கொள்கிறார்கள்.  இவை எல்லாம் முதலாளிகள் மீது நெசவாளித் தொழிலாளர்கள் கூறும் குற்றச்சாட்டுகள்.
நம்மிடம் பேசிய இன்னொரு நெசவாளி, ''இவங்க அடிக்கிற இன்னொரு கொள்ளை, பட்டு நூல் பதுக்கல்.  பட்டு உற்பத்தி எப்போது எல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போது முதலாளிகள் பட்டு நூலைச் சந்தைகளில் மொத்தமாக வாங்கி, பதுக்கி வைத்துக்கொள்கின்றனர். பிறகு, எப்போது பட்டு நூலுக்குத் தட்டுப்பாடு அதிகரிக்கிறதோ அந்தச் சமயத்தில் கள்ள மார்க்கெட்டில் அநியாய விலைக்கு விற்கிறார்கள். இதற்குச்  சில ஜவுளிக் கடைக்காரர்களும்  உடந்தையாக இருப்பதுதான் கொடுமை'' என்றார்.
விசைத்தறி வில்லன்
கைத்தறி நெசவின் நேரடி வில்லன் விசைத்தறி. ஜெட் லூம்ஸ் மற்றும் ஏர் லூம்ஸ் என இந்த விசைத் தறிகளில் பல வகைகள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. ஆரம்பத்தில் லுங்கிகள் மற்றும் துண்டுகளை உற்பத்தி செய்ய மட்டுமே விசைத்தறிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், இன்று எல்லாமே தலைகீழாக நடக்கிறது. ஆட்கள் எண்ணிக்கையும் பொருள் செலவும் கைத்தறியைவிட விசைத்தறிகளில் குறைவு என்பதால், விசைத்தறிகளில் பட்டுச் சேலைகளை உருவாக்குவதையே முதலாளிகள் விரும்புகின்றனர். ஆனால், விசைத்தறிகளில் பட்டுச் சேலைகளைத் தயாரிக்கக் கூடாது என்பது அரசின் விதிமுறை. 
''அரசு விதிமுறையை மீறி விசைத்தறிகளில் பட்டுச் சேலைகளை உற்பத்தி செய்தால் அந்தத் தறிகளுக்கு ரெய்டு நடத்தி சீல் வைப்பதாக அவ்வப்போது அரசு அதிகாரிகள் அறிக்கை விடுவார்கள். ரெய்டும் நடத்துவார்கள். ஆனால், யார் மீதும் பெரிதாக நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். இதுவரை இந்த விஷயத்தில் இவர்கள் நடவடிக்கை எடுத்த முதலாளிகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணி விடலாம். அதிகாரிகள் ரெய்டுக்கு வரும்போதும், மாத மாமூல், வார மாமூல், தீபாவளி, பொங்கல் போனஸ் என்று வகையாகக் கவனிக்கிறார்கள் விசைத்தறி முதலாளிகள். சேலம் மாவட்டத்தின் பல ஊர்களிலும் பட்டுச் சேலைகளை மட்டுமே உற்பத்தி செய்யும் ஏராளமான விசைத்தறிகள் இயங்கி வருவதே இதற்குச் சான்று. ஒரு கைத்தறி நெசவாளி ஐந்து நாட்களில் நெய்ய வேண்டிய சேலையை விசைத்தறியில் ஒரே நாளில் நெய்திடலாம்'' என்கிறார் சேலத்தைச் சேர்ந்த கைத்தறியாளர் சண்முகம்.
சரிவரச் சென்று அடையாத சலுகைகள்
* எதிர்பாராத விபத்தின் காரணமாகத் தொழிலாளி இறந்துபோனால் தொழிலாளியின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு.
* மரணம் இயற்கையாக நிகழ்ந்தால் தொழிலாளியின் குடும்பத்துக்கு  15,000 ரூபாய்.
* தொழிலாளிகளின் பிள்ளைகள் படிப்புச்செலவுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை.
* பிரசவத்துக்கு 6,000 ரூபாய்.
* இவற்றைத் தவிர மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இன்ஷுரன்ஸ் திட்டம் போன்ற சலுகைகளும் உண்டு.
ஆனால், நகரப் பகுதிகளைச் சுற்றியுள்ள நெசவாளர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகைகள் ஓரளவேனும் சென்று அடைகின்றன. கிராமங்களைச் சேர்ந்த நெசவாளிகள் இந்தச் சலுகைகளைப் பற்றி எதுவும்  அறியாமலே இருக்கின்றார்கள். கைத்தறித் தொழிலாளிகள் சொந்தமாகக் கைத்தறி அமைக்க நினைத்தாலும் அதற்கென சரியான கடன் வசதிகளை எந்த அரசும் இதுவரை ஏற்படுத்தித் தரவில்லை. ''சலுகைகள் ஏன் எல்லா நெசவாளிகளையும் சென்று அடையவில்லை?'' என்று அதிகாரிகளிடம் கேட்டால், ''எங்கள் துறையில் ஆள் பற்றாக்குறை'' என்று  மெத்தனமாகப் பதில் சொல்கிறது தொழிலாளர் நல வாரியம்.
இந்தப் போக்கால், பல கைத்தறித் தொழிலாளிகள் கந்துவட்டிக் கொடுமையில் வீழ்ந்து கிடப்பதே மிச்சம். அடையாள அட்டைகள் இல்லாத நெசவாளர்களும் அதிகம். அரசின் சலுகைகள் குறித்த சரியான தகவல்களை ஊராட்சிகளும்  செய்தித் துறையும் தொழிலாளர்களிடம் ஒழுங்காகக்கொண்டு சேர்த்து இருந்தால், குறைந்தபட்சம் கந்து வட்டிக் கொடுமையில் இருந்தாவது நெசவாளர்கள் தப்பித்து இருப்பார்கள்.
ஜவுளிக் கடைகளின் தில்லுமுல்லு
விசைத்தறி என்பது பட்டுச் சேலைகளை உற்பத்தி செய்யும் கைத்தறி நெசவாளர்களை மறைமுகமாகவும் பட்டுச் சேலைகள் வாங்கும் மக்களை நேரடியாகவும் பாதிக்கும் விஷயம். தோராயமாகக் கைத்தறியில் நெய்யப்பட்ட சுத்தப் பட்டுச் சேலை எட்டு ஆண்டுகள் வரைக்கும் வீணாகாது   என்றால் விசைத்தறியில் நெய்த பட்டுச் சேலை நான்கு ஆண்டுகள் வரை மட்டுமே தாங்கும். இந்த விஷயத்தை மறைப்பதில் இருந்தே, ஜவுளிக்கடைகளின் தில்லுமுல்லு ஆரம்பம் ஆகிறது.
    இதுகுறித்துப் பேசிய கைத்தறி நெசவாளர் ஒருவர், '' பெரும்பாலும் விசைத்தறியில் நெய்த பட்டுச் சேலைகளைத்தான் ஜவுளிக்கடை முதலாளிகள் வாங்குகின்றனர். காரணம், கைத்தறிப் பட்டுச் சேலைகளை விட விசைத்தறி சேலைகளின் விலை மிகவும் குறைவு. குறைவான விலைக்கு விசைத்தறி சேலைகளை வாங்கி, கைத்தறி சேலை என்று ஏமாற்றி மக்களிடம் அதிக விலைக்குப் பட்டுச் சேலைகளை விற்றுவிடும் ஜவுளிக் கடைகளே இன்று அதிகம்.  மார்க்கெட்டில் ஜவுளிக் கடைக்காரர்கள் பட்டுச் சேலைகளை வாங்கும் விலைக்கும் மக்களிடம் விற்கும் விலைக்கும் உள்ள வித்தியாசம் பத்து மடங்குக்கும் அதிகம். விசைத்தறிச் சேலைக்கும் கைத்தறிச் சேலைக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம். இதைக் கடைக்காரர்கள் தங்கள் லாபத்துக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். மாதாமாதம் ஜவுளிக்கடைகளில் சேலையின்தரம்பற்றி காதி கிராஃப்ட் அதிகாரிகள் நடத்தும் பரிசோதனையை அரசு  தீவிரமாக்கினால் மட்டுமே இதனைத்  தடுக்க முடியும்'' என்று எச்சரிக்கிறார் அவர்.
என்னதான் தீர்வு?
மாநில கைத்தறிச் சங்கச் செயலாளர்களில் ஒருவரான ஆறுமுகத்திடம் இந்தப் பிரச்னைகளுக்கான தீர்வு குறித்துக் கேட்டேன். '' சேலைகளின் ரகத்துக்கு ஏற்ப எங்களுக்கான கூலியை அரசே நிர்ணயிக்க வேண்டும். அல்லது கூலி உயர்வினைக் கொண்டுவர வேண்டும். அரசு கட்டுப்பாட்டை மீறி விசைத்தறிகளில் பட்டுச்சேலைகளை நெய்பவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லா கைத்தறி நெசவாளர்களும் பயன்பெறும் வகையிலான  சலுகைகள் அமைய அரசு வழி செய்ய வேண்டும். இதுவே எங்களுக்குப் போதும்.
வள்ளுவர் காலத்தில் இருந்து  நம்முடைய பாரம்பரியத் தொழில் கைத்தறி. ஏற்றுமதியிலும் அரசுக்கு அதிகமான வருவாய் கொடுக்கும் தொழில் இது. இப்போது அழிந்துகொண்டு இருப்பது எங்கள் தொழில் மட்டும் அல்ல... நம்முடைய பாரம்பரியமும்கூட. இதை அரசு உணர வேண்டும்'' என்றார் தீர்க்கமாக.
கைத்தறிக்குக் கை கொடுக்கு்மா அரசு?!

2 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites