பெண்கள் ஒரு அடி முன்னேறினால் அந்த நாடு 10 அடிகள் முன்னேறும் என்றார் காந்தியடிகள். கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்று பாடினார் நாமக்கல் வெ.ராமலிங்கம் பிள்ளை. இந்த 2 தலைவர்களின் கருத்துக் களுக்கு உதாரணமாக விளங்குகிறார் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பெண் ரமணி. பல்வேறு கைத்தொழில்களை கற்றுக்கொண்டு தானும் முன்னேறிய துடன், மற்ற பெண்களும் முன்னேற பயிற்சி அளித்து வருகிறார் ரமணி.
.
அவரை சந்தித்த போது தன்னுடைய பின்னணி பற்றியும், தனக்கு கைத்தொழில்கள் மீது நாட்டம் ஏற்பட்டது பற்றியும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அவை வருமாறு:
படிக்கும் போதே கூடைபின்னுதல், தையல் போன்ற வேலைகளில் எனக்கு நாட்டம் அதிகம். திருமணம் ஆனபிறகு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டில் இருக்கும் நேரத்தில் ஆஷாத் நிஷா பயிற்சி நிலையத்தில் 6 மாதம் புடவைகளுக்கு எம்ப்ராய்டரி போடும் பயிற்சி பெற்றேன்.
10ம் வகுப்புவரை படித்துள்ளதால், மக்கள் கல்வி நிறுவனத்திலும், ஜெ.எஸ்.எஸ். அலுவலகத்திலும் பயிற்சியில் ஈடுபட்டு கைத் தொழிலை முறைப்படி கற்றுக் கொண்டேன். பின்னர் ஜெ எஸ் எஸ் பயிற்சி நிலையம் மூலமாக அங்குவரும் பெண்களுக்கு 6மாதம் பயிற்சி கொடுத்தேன். அதற்கு நிறுவனத்தின் சார்பில் மாதம் சம்பளம் அளித்தார்கள்.பின்னர் தனியாக பெண்களுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன்.
சேலைகளுக்கு கல் பதித்தல், ஜமிக்கி தைத்தல், பூ வேலைப்பாடுகள், ஜெர்தோஷி போடுதல், எம்ப்ராய்டரி போடுதல், கல் பதித்த நகைகள், கிறிஸ்டல், மணி மற்றும் பானையில் ஓவிய வேலைப்பாடு, ஆர்க்கென்டீஸ், ஸ்டோக்கின்ஸ் பேப்பர் கிளாத், கோல்டு மரம், வாசல் தோரணங்கள், பொம்மைகள், செண்ட், ரூம் ஸ்பிரே உட்பட அனைத்துவித பயிற்சிகளையும் கொடுக்கிறேன்.
குறைந்த விலையில் வாங்கி வீட்டிற்கு தேவையான பொருட்களை தயார் செய்தும் வருகிறேன்.
பேஷன் டிசைனில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் பிளைன் சேலைகளை வாங்கி வாடிக்கை யாளர்கள் கூறும் டிசைன்களை செய்து கொடுத்து வருகிறேன். கல்லூரி மாணவிகளின் ரசனைக் கேற்ப பல மாடல்கள் போட்டு கொடுப்பதால் வாடிக்கையாளர்கள் வட்டம் அதிகரித்துகொண்டே இருக்கிறது அது பெருமையாக இருக்கிறது.
வாசலில் அழகான ஊஞ்சல் செய்து அதில் சாமி சிலைகள் மற்றும் நமக்கும் பிடித்த பொம்மைகளை வைத்து விட்டால் ஊஞ்சலாடும் காட்சி மிக ஆழகாக இருக்கும். இப்படி வித்தியாசமான முறையில் மக்கள் விரும்பும்படி தயார் செய்து கொடுப்பதால், வீட்டில் இருந்து கொண்டே சம்பாதிக்க முடிகிறது. அதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
பெண்கள் விரும்புவதற்கேற்ப நகைகள், வளையல்கள், மோதிரம் போன்ற ஆபரணங்கள் புதிய மாடல்களில் வருகிறதோ அந்த மாடல்களில் டிசைன் செய்து கொடுப்பேன். வீட்டிலும், வெளியிலும் சென்று கைத்தொழில் கற்றுக்கொள்ள விருப்பப் படும் பெண்களுக்கு 10 பேர் கொண்ட குழுவாக சேர்த்துஒரு குழுவுக்கு இரண்டு மணி நேரம் பயிற்சி. அது முடிந்தவுடன் மற்றொரு குழுவுக்கு பயிற்சி. இதுபோன்று ஒரு நாளைக்கு ஆறு மணிநேரம் பயிற்சி கொடுக்கிறேன்.
500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இதுவரை பயிற்சி அளித்துள்ளேன். பிளாஸ்டிக் பொருட்களின் வேலைப் பாடுகள், தையல், பொம்மை ஊஞ்சல், செல்போன் கவர் போன்ற அனைத்து விதமான டிசைனும் செய்வேன்.
தஞ்சாவூர் ஓவியம், பானையில் ஓவியம், பாட்டிலில் ஓவியம், சாமி படங்களுக்கு கல் பதித்து லைட் செட்செய்வது, பெண்களுக்கு அழகு கலை செய்வது, திருமண மண்டபங்களில் மணமக்களுக்கு மணவறை அலங்காரம் செய்வது உள்பட வீட்டை அலங்கரிக்கும் அனைத்து விதமான தோரணங் களையும் செய்வேன். இதேபோன்று பால், இஞ்சி, இனிப்பு கோகோ போன்ற சாக்லெட்டுகள் செய்வது, ஊறுக்காய், பெனாயில், ஊதுபத்தி, சாம்பிராணி, சபீனா செய்வது எப்படி என்பது குறித்து பயிற்சியும் கொடுத்து வருகிறேன்.
வீட்டில் இருந்து கொண்டே மாதம் ரூ.5 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக் கிறேன். என் கணவரும், என் பிள்ளைகளும் எனக்கு உதவியாக இருப்பதால் என்னால் இத்தொழிலில் முழு மூச்சுடன் ஈடுபட முடிகிறது.
கைத்தொழிலை கற்றுக்கொண்டால் குறைந்த முதலீட்டில் நிறைந்த வருவாயை அடையலாம். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ஆட்டோ ஓட்ட கற்றுக் கொண்டேன். பெண்களுக்கென்று தனியாக அனைத்து விதமான கைத்தொழில் பயிற்சி நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து குறைந்த கட்டணத்தில் நடத்த வேண்டும் என்பது எனது ஆசை.
ஒவ்வொரு பெண்களும் கைத் தொழிலை கற்றுக்கொண்டால் அவர் களின் பிள்ளைகள் அனைத்து துறை களிலும் சிறந்து விளங்குவார்கள் என்று கூறும் ரமணியின் கருத்து இக்காலத்துக்கு ஏற்ற கருத்தாகும் என்பதில் ஐயமில்லை.
0 comments:
Post a Comment