இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, November 8, 2014

வளர்ப்பு மீன்கள்

8 மாதங்கள்... ' 1,50,000
வளமான வருமானம் கொடுக்கும் வளர்ப்பு மீன்கள்!
கு. ராமகிருஷ்ணன் படங்கள்: கே. குணசீலன்

 தஞ்சாவூர், திருவாரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீன்களுக்குப் பிரபலமான பகுதி, வடுவூர். இந்தப்பகுதி மீன்களின் பிரத்யேக சுவைக்கு  ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. ‘அப்படி என்ன இந்தப்பகுதி மீனுக்கு தனிச்சிறப்பு’ என்ற கேள்வி எழ... அந்தப்பகுதிகளில் ஒரு வலம் வந்தோம். தஞ்சாவூர்-திருவாரூர் எல்லையோரத்தில் அமைந் துள்ள வடுவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வடுவூர் தென்பாதி, வடுவூர் வடபாதி, புள்ளவராயன் குடிகாடு, சாத்த னூர், எடமேலையூர் உள்ளிட்ட கிராமங்களில்... தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத அளவுக்கு ஏராளமான உள்நாட்டு மீன் வளர்ப்புக் குளங்கள் இருக்கின்றன. அவற்றைப் பார்த்து பிரமித்தவாறே, சுற்றிப் பார்த்த நம்மிடம், இந்தப் பகுதியின் மீன் வளர்ப்புப் பற்றி நன்கு அறிந்திருக்கும் முன்னோடி விவசாயி தாமரைச்செல்வனை நமக்கு அறிமுகப்படுத்தி்னர் சிலர். மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்த தாமரைச்செல்வன்,
இயற்கை கொடுத்த வரம்!
‘‘எங்க பகுதி மண்ணும் தண்ணியும் ரொம்ப வள மானது. மீன்களோட வளர்ச் சிக்குத் தேவையான தாவர நுண்ணுயிரிகளும், விலங்கு நுண்ணுயிரிகளும் இங்க இயல்பாகவே விரவிக் கிடக் குது. அதுமட்டுமில்லாம, எங்க பகுதியில வண்டல் மண் பொருக்குகளுக்கும் பஞ்சமில்லை. இது மீன் வளர்ப்புக்கு ரொம்ப அவசியம். இதை குளத்துல போட்டுட்டா பூமிக்குள்ள தண்ணி இஞ்சாது(போகாது). இங்க இருக்குற வடுவூர் ஏரி மூலமாத்தான் இத்தனை நன்மைகள் எங்களுக்குக் கிடைக்குது.
இந்த ஏரியோட மொத்த பரப்பு 316 ஏக்கர். ஆஸ்திரேலியா, ஈரான், ஈக்வடார்னு ஏகப்பட்ட நாடுகள்ல இருந்து ஒவ்வொரு சீசனுக்கும் லட்சக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் இங்க வருது. கூழைக்கெடா, உள்ளான், வெண்கொக்கு, நாரை, சிரவி, மடையான், நீர்காகம், குருவோனம்னு பல வகையான பறவைகள் இருக்கு. காவிரியில தண்ணீர் வந்து, ஏரி நிறையும்போது பாத்தா.... ஏரியோட மேல்பகுதி முழுக்க பறவைகளாத்தான் இருக்கும். இதோட எச்சங்கள்லாம் ஏரியில விழுந்து, பாசி மாதிரி ஏகப்பட்ட நீர்நிலைத் தாவரங்கள் இதுல நிறைய இருக்கும்.
இந்த ஏரி நிறையிறப்போ, இந்த வளமான தண்ணீர் சுத்து வட்டாரத்துல உள்ள குளங்கள்ல நிறையுது. அதனாலதான் அந்த தண்ணியில வளர்ற மீன்களுக்கு தனிச்சுவை கிடைக்குது” என்று மீன்களின் சுவைக்கு காரணம் சொன்ன தாமரைச்செல்வன், தொடர்ந்தார்.
பறவைகள் சரணாலயம்!
வடுவூர் ஏரி பறவைகள் சரணாலயமா அறிவிக்கப்பட்டு, 25 வருஷமா வனத்துறையோட கட்டுப்பாட்டுல இருக்கு. அதுக்கு முன்னாடி எங்க ஊரோட கட்டுப்பாட்டுல  இருந்தப்ப, ஏரியில இருந்து வண்டல் எடுத்து, நிலத்துல போட்டுக்குவோம். முன்ன ஏரியில எப்பவும் தண்ணி நிறைய இருக்கும். அதனால, அயிரை, விலாங்கு, கெளுத்தி, உளுவை, குரவை, ஆறா, பனையேறி, வாலைனு ஏகப்பட்ட  நாட்டு மீன்கள் ஏரியில இருக்கும். ஏரி நிறைஞ்சு வர்ற தண்ணியில அடிச்சுட்டு, வர்ற மீன்கள் சுத்தி இருக்குற குளங்களுக்கு வரும்.
ஏரி, குளங்கள்ல இருக்குற மீன்களை ஏலம் விட்டு, கிடைக்கக்கூடிய வருமானத்தை ஊரோட வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்குவோம். ஏரிக் கரையிலேயே. மீன் விற்பனை களை கட்டும். வெளி மாவட்டங்கள்ல இருந்தெல்லாம் வந்து வாங்கிட்டுப் போவாங்க.
ரசாயனக் கலப்பு இல்லாததால், தனிச்சுவை!
இப்போ, ஏரியில வண்டல் எடுக்க விடுறதில்லை. அதனால, ரொம்ப நாளா தூர் வாரப்படாததால, ஆழம் குறைஞ்சு போய், நாட்டு மீன்கள் இல்லாமப் போயிடுச்சு. அதனால, ஏரியில இருந்து சுத்து வட்டார குளங்களுக்கு தண்ணி மூலமா வர்ற மீன் வரத்தும் குறைஞ்சிடுச்சு.
குளங்களை ஏலம் எடுக்குறவங்க, கட்லா, புல் கெண்டை, ரோகு, மிர்கால், சிசி, போட்லானு மீன்குஞ்சுகளை விட்டு வளர்க்க ஆரம்பிச்சாங்க. 2000-ம் வருஷத்துக்குப் பிறகு, விவசாயத்துலயும் உழைப்புக்கு ஏத்த லாபம் கிடைக்காத சூழல் உருவாச்சு. உத்தரவாதமான வருமானம் கிடைக்கிறதால, நிறைய பேர் மீன் வளர்ப்புல இறங்கிட்டாங்க.
தமிழக அரசும் இதை ஊக்கப்படுத்துச்சு. இப்பவும் குளங்களுக்கு வர்ற ஏரி தண்ணீரைத் தான் பயன்படுத்துறோம். தண்ணி வரத்து கம்மியானாத்தான் போர்வெல் தண்ணீரைப் பயன்படுத்துவோம். இங்க யாருமே மீன் குளங்கள்ல ரசாயன உரங்களைப் பயன்படுதுற தில்லை. அதனாலதான் இந்தப்பகுதி மீன் அவ்வளவு ருசியா இருக்கு என்றார்.
ஏக்கருக்கு 3 ஆயிரம் குஞ்சுகள்!
அடுத்து, பல ஆண்டுகளாக மீன் வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் கோபாலகிருஷ்ணனைச் சந்தித்தோம். ‘‘நான் 4 ஏக்கர்ல குளம் அமைச்சு மீன் வளர்க்கிறேன். வளர்ப்பு மீன்களுக்கு ஏரி மீனால பாதிப்பு வந்துடக்கூடாதுங்கிறதுக்காக, ஏரி தண்ணீரை குளத்துக்கு விடும்போது, வலை கட்டிதான் விடுவோம்.
மீன்களுக்குத் தேவையான உணவு, இயற்கையாகவே தாராளமாகக் கிடைக்குது. அதில்லாம மாசத்துக்கு ஒரு தடவை மட்டும்தான் குளத்துல சாணம் கரைச்சு விடுவோம். அதனால, தீவனச்செலவு ரொம்ப குறைவாத்தான் இருக்கு.
எங்க பகுதியில ரோகு ரக மீனுக்கு விற்பனை வாய்ப்பு அதிகம் இருக்குறதால, இந்த மீனை அதிகமா வளர்ப்பாங்க. ஒரு ஏக்கர் குளத்துக்கு 3 ஆயிரம் மீன் குஞ்சுகள்னு எல்லா ரகங்கள்லயும் கலந்து விடுவோம்.
எட்டு மாசத்துல மீன்கள் நல்லா வளந்துடும். ஒரு மீன், 350 கிராம்ல இருந்து, 1 கிலோ வரை எடை வரும். சராசரியா பாத்தா... ஒரு மீன் 700 கிராம் அளவுக்கு இருக்கும். 3 ஆயிரம் குஞ்சுகள்ல 2 ஆயிரத்து 250 மீன்கள்தான் தேறி வரும். அந்த வகையில பாத்தா, 1,500 கிலோவுக்குக் குறையாம மகசூல் கிடைக்கும். கிலோ 150 ரூபாய்னு விற்பனையாகுது.
இதன் மூலமா, வருஷத்துக்கு ரெண்டே கால் லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்.
தீவனம், வேலையாள் கூலினு எல்லாம் சேர்த்து, ஒரு ஏக்கர் குளத்துக்கு 75 ஆயிரம் ரூபாய் செலவு போக, வருஷத்துக்கு ஒன்றரை லட்ச ரூபாய் அளவுக்கு லாபம் கிடைக்கும்’’ என்று சொன்னார்.

இப்படித்தான் வளர்க்கணும்!
மீன் வளர்ப்பு முறை பற்றி, கோபால கிருஷ்ணன் சொன்ன தகவல்கள் இங்கே... குளத்தின் ஆழம் 6 அடி இருக்க வேண்டும். இதில் நன்கு உழவு ஓட்டி, ஏக்கருக்கு 300 கிலோ கல் சுண்ணாம்பு போட்டு, 4 அடி உயரத்துக்கு தண்ணீர் நிறுத்தி, 2 டன் சாணத்தைக் கரைத்துவிட வேண்டும். ஒரு வாரம் கழித்து, ஓர் அங்குலம் அளவுக்கு வளர்ந்த மீன் குஞ்சுகளை, குளத்தில் விடவேண்டும். ஒரு ஏக்கரில், 3 ஆயிரம் குஞ்சுகளை வளர்க்கலாம். 1,500 ரோகு, 600 மிர்கால், 300 கட்லா, 200 புல் கெண்டை, 100 போட்லா, 100 சிசி மீன் குஞ்சுகள் என்கிற விகிதத்தில், குஞ்சுகளை விட வேண்டும். ஒரு மாதம் வரை, தினமும் 3 கிலோ அளவுக்கு தீவனம் போட வேண்டும் (எண்ணெய் எடுத்த தவிடு 50%, கடலை பிண்ணாக்கு, சோளமாவு தலா 25% ஆகியவை கலந்த தீவனம்). 2-ம் மாதம் மீன்களின் சராசரி எடையில், 8% அளவுக்கு தினமும் இதே தீவனத்தைக் கொடுக்க வேண்டும். 3-ம் மாதம் 7%, 4-ம் மாதம் 6%, 5-ம் மாதம் 5%, 6-ம் மாதம் 4%, 7-ம் மாதம் 3% என்ற விகிதத்தில் தீவனத்தைக் குறைத்துக்கொண்டே வர வேண்டும்.
மாதம் ஒரு முறை 100 கிலோ சாணமும், 200 கிலோ கல் சுண்ணாம்பும் கரைக்க வேண்டும். கல் சுண்ணாம்பு, கிருமிநாசினியாகச் செயல்படும். 8 மாதங்களில் மீன்கள் வளர்ந்து விடும்.”

சாலையோரக் கடைகளில் உயிர் மீன்கள்!
மீன் விற்பனையில் புது யுக்தி...
காலைவேளையில் தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி பயணிப்பவர்கள், சாலையோர மீன் விற்பனையை கண்டிப்பாக கவனித்திருப்பார்கள். குறிப்பாக, நெய்வாசல், வடுவூர், நெடுவாக்கோட்டை கிராமங்களில் சாலையோரங்களில், அதி காலை நேரங்களில் மீன் வியாபாரம் படு ஜோராக நடக்கிறது. வழக்கமாக, சாலையோர மீன் கடைகளில் இறந்த மீன்கள்தான் விற்பனைக்கு இருக்கும். ஆனால், இப்பகுதிகளில் மரத்தடியில் குழிபறித்து தண்ணீர் நிரப்பி உயிர் மீன்களை விற்பனை செய்கிறார்கள். தமிழகத்தில் எங்குமே இல்லாத அளவுக்கு புதுமையாக மீன் விற்பனை நடக்கும் இந்தப்பகுதியை ஒரு வலம் வந்தோம். 
அரையடி ஆழம், 5 அடி நீளம், மூன்றரையடி அகலத்துக்கு பள்ளம் பறித்து, அதில் ‘பாலிதீன் ஷீட்’ மூலம் சிறிய குளம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, மீன்களை விட்டிருக்கிறார்கள். நாம் தேர்ந்தெடுக்கும் மீனை எடைபோட்டு, விற்பனையாளர்களே சுத்தம் செய்து கொடுத்து விடுகிறார்கள். நியாயமான விலை, உயிர் மீன்கள் என்பதால், மீன்களை வாங்க கூட்டம் அலைமோதுகிறது.
மீன் விற்பனை செய்துவரும் திருமேனி என்பவரிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘‘இந்த ஏரியாவுல நிறைய விவசாயிகள் மீன் வளர்க்குறாங்க. அவங்ககிட்ட இருந்து வாங்கிக்கிட்டு வந்துதான், இங்க விற்பனை செய்றோம். பத்து, பதினைஞ்சு வருஷத்துக்கு முன்ன விவசாயிகள் சின்னஅளவுல குட்டை எடுத்து மீன் வளப்பாங்க. அப்போ, அவங்களே கடைபோட்டு விற்பனை செய்வாங்க. ஆனா, இப்போ விவசாயத்தை விட, இதுல நல்ல வருமானங்கிறதால ஏக்கர் கணக்குல குளங்களை வெட்டி மீன் வளர்க்குறதால உற்பத்தி அதிகமாயிடுச்சு. அதனால, அவங்க நேரடியா விக்கிறதில்லை. எங்களை மாதிரி வியாபாரிகளுக்குக் கொடுத்துடறாங்க. நாங்களே குளத்துல மீனைப் பிடிச்சுட்டு வந்து, உயிரோட இங்க விற்பனை செய்றோம். சில விவசாயிகள் மட்டும்தான் நேரடியா விற்பனை செய்றாங்க’’ என்றார்.
நேரடி மீன் விற்பனையில் ஈடுபட்டுள்ள விவசாயி பிரபாகரனிடம் பேசியபோது, ‘‘நான் 66 சென்ட் அளவுல குளம் அமைச்சி, மீன் வளர்த்துக் கிட்டு இருக்கேன். ஆறு மாசத்துக்கு ஒரு தடவை, ஒரு டன் அளவுக்கு மீன் கிடைக்கும். இதை ஒரே நாள்ல பிடிக்கறதில்லை. நல்லா வளந்ததும் தினமும் கொஞ்சம் கொஞ்சமா பிடிச்சு நேரடியா விற்பனை செஞ்சிக்கிட்டு இருக்கேன். கிட்டத்தட்ட ஒரு மாசம் இப்படி விற்பனை செய்வேன். அதுக்கப்பறம் குளத்துல புதுசா குஞ்சுகளை விடுவேன். ஞாயிற்றுக்கிழமைகள்ல 100 கிலோ அளவுக்கு விற்பனை ஆகும். மற்ற நாட்கள்ல தினமும் 50 கிலோல இருந்து 60 கிலோ விற்பனை ஆகும். ஒரு கிலோ 180 ரூபாய்னு விற்பனை செய்றேன். வியாபாரிகளுக்குக் கொடுத்தா கிலோவுக்கு, 150 ரூபாய்தான் கிடைக்கும்’’ என்ற பிரபாகரன்,
“பொதுவா மீன்கள் கருப்பு நிறத்துலதான் இருக்கும். அதனால, பார்க்குறதுக்கு பார்வையா இருக்கணுங்கிறதுக்ககத்தான் வெள்ளை கலர் ‘ஃபிளக்ஸ் ஷீட்’ உபயோகப்படுத்துறோம். இதுல மீன்கள் நீந்துறப்போ ‘பளிச்’னு தெரியும். இந்த ஃபிளக்ஸை மடக்கி, கையோடு எடுத்துட்டும் போயிடலாம். பிரிண்ட் செய்யப்படாத இந்த ஷீட், ஒரு கிலோ 110 ரூபாய்தான். இதுமாதிரி ரெண்டு ஷீட்டை ஒண்ணுமேல ஒண்ணா போட்டுட்டா... கல் குத்திஒட்டை விழாது. 6 மாசம் வரைக்கும் இது தாங்கும். முன்னாடி தகர ‘ட்ரே’ பயன்படுத்துவோம். அது, சீக்கிரம் ஒட்டை விழுந்துடும்.
தூக்கிட்டு வர்றது சிரமம். இங்க கடைகள் போட, யாருக்கும் வாடகை தர வேண்டியதில்லை. ஊராட்சி பொதுக்குழாய்கள்லயே தண்ணி பிடிச்சுக்குவோம். பெரும்பாலும், இயற்கை முறையில மீன்களை வளர்க்குறதால நல்ல ருசி இருக்கும். அதனால, நிறைய வாடிக்கையாளர்கள் இருக்குறாங்க. கடை போட்ட ரெண்டு மணி நேரத்துக்குள்ள வித்து தீந்துடும். விற்பனை முடிஞ்சதும் கழிவுகளை நாங்களே எடுத்துட்டுப் போய் உரக்குழியில போட்டு மூடிடுவோம். இடத்தை நல்லா சுத்தம் செஞ்சிடுவோம். அதனால, இந்த இடமும் மாசுபடுறதில்லை” என்று தொழில்நுணுக்கங்களும் சொன்னார்.
தொடர்புக்கு, பிரபாகரன், செல்போன்: 97861-43214

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites