இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, November 8, 2014

ஆண்டுக்கு ரூ. 2,00,000 ஜோரான வருமானம் தரும் ஜோடிப்புறா!


'வசந்தமுல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே’, 'பக்பக்பக் மாடப்புறா...’ இப்படியாக அன்று தொட்டு இன்றுவரை புறாவைப் பாடாத கவிஞர்கள் இல்லை. மணிப்புறா, மாடப்புறா, கோயில் புறா என்று அவற்றில் பல ரகங்கள் உண்டு. பெரும்பாலும், புறாக்களை அழகுக்காகத்தான் வீட்டில் வளர்க்கிறார்கள். ஆனால், ''அழகுக்காக மட்டுமில்லை... ஆதாயத்துக்காகவும் புறா வளர்க்கலாம்'' என்கிறார், திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம் புத்தரிச்சல் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி ஆர்.கே. மைதீஷ்குமார்.
பணம் கொட்டும் பரம்பரைத் தொழில்!
'பக்...பக்...பக்...' என்று மைதீஷ்குமார் குரல்கொடுக்க, கூண்டுக்குள் இருந்து வெளிப்பட்ட புறாக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, அவர் வீசிய தீனியைக் கொத்திக்கொண்டிருந்த காட்சி ரம்யமாக இருந்தது.
''எங்களுக்கு இங்க 20 ஏக்கர் நிலம் இருக்கு. பண்ணை வீட்டுலதான் குடியிருக்கோம். 10 ஏக்கர்ல தென்னையும், மூணு ஏக்கர்ல நெல்லியும் போட்டிருக்கோம். மீதமுள்ள நிலத்துல வெங்காயம், மிளகாய், கத்திரி, கொத்தமல்லினு தண்ணீர் வசதிக்குத் தகுந்தாப்பல மாத்தி மாத்தி வெள்ளாமை வெச்சுடுவோம். எல்லாமே கிணத்துப்பாசனம்தான்.
நான் படிச்சு முடிச்சதும், திருப்பூர்ல ஒரு பனியன் கம்பெனியில வேலை பார்த்தேன். எங்க தோட்டத்துல 10 ஜோடிப் புறாக்களை மரக்கூண்டு வெச்சு அப்பா வளர்த்துட்டு இருந்தார். சின்னவயசுல இருந்தே அதைப் பார்த்து பழகினதால, எனக்கும் புறா வளர்ப்புல ஈடுபாடு வந்துடுச்சு. எங்க தோட்டத்துல புறா இருக்கிற விஷயம் தெரிஞ்சு, நிறையபேரு அதை வாங்கிட்டுப் போவாங்க. அதுக்கு ஒரு மார்க்கெட் இருக்கிறது தெரிஞ்சதும், 'இதையே பண்ணையா மாத்தினா என்ன?’னு யோசிச்சேன். வீட்ல சொன்னதும், பரம்பரையா வீட்ல வளர்ந்துட்டு வந்த 10 ஜோடிப்புறாக்களை என்கிட்ட கொடுத்திட்டாங்க. படிப்படியா பெருக்கி, இப்ப 250 ஜோடிகள் கையில இருக்கு. வெள்ளை, சாம்பல், நீலம், அடர் ஊதானு பல நிறங்கள்ல புறாக்கள் இருக்கு. இந்த 250 ஜோடிகளை தாய்ப்பறவைகளா வெச்சு, கிடைக்கிற குஞ்சுகளை விற்பனை செய்றேன்' என்ற மைதீஷ்குமார், நிழல்வலைத் திடலின் கதவைத் திறந்துவிட ஒன்றன்பின் ஒன்றாக வானில் சிறகடிக்கத் தொடங்கின, புறாக்கள். அவை கண்ணை விட்டு மறையும் வரை, அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தவர் மீண்டும் பேச ஆரம்பித்தார்.
கூண்டுக்குள் வளர்க்க முடியாது!
'இதெல்லாம், நாட்டுப்புறா வகையைச் சேர்ந்தவை. அதனால, கூண்டுல அடைச்சு வளர்க்க முடியாது. சுதந்திரமா பறந்து ரொம்ப தூரம் போய், மேஞ்சுட்டு வர்றதுதான் இதுகளுக்குப் பிடிக்கும். அதன் இயல்பும் அதுதான். நாம அதை மாத்த முயற்சி பண்ணக்கூடாது.
புறாக்கள் தங்குறதுக்காக, 60 அடி நீளம், 10 அடி அகலம் 20 அடி உயரத்துல ஓட்டு வீடு அமைச்சிருக்கேன். உள்ளே இருக்கிற இரண்டு சுவர்கள்லயும், ஹாலோ பிரிக்ஸ் மூலமா இரண்டு புறாக்கள் தங்குவதற்கு, ஏத்த மாதிரி 1,100 சின்னச்சின்ன அறைகளை அமைச்சு... அதுக்குள்ள மெது மணலைக் கொட்டி வெச்சிருக்கேன். எங்கிட்ட, இப்ப இருக்கிற புறாக்களுக்கு 250 அறைகள் மட்டுமே போதுமானதா இருந்தாலும், எதிர்காலத்தை மனசுல வெச்சு, அறைகளை அதிகப்படுத்தியிருக்கேன்.
புறாக்களோட வீட்டு மேல, ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள சின்டெக்ஸ் டேங்க் வெச்சு, 24 மணி நேரமும் புறாக்களுக்கு தண்ணி கிடைக்கிற மாதிரி, ஏற்பாடு பண்ணிருக்கேன். வளரும் குஞ்சுகள் மட்டும்தான் எப்பவும் அறைக்குள்ள இருக்கும். பெரிய புறாக்கள் பகல் நேரத்துல வெளியில போயிடும். புறாவுக்கான கூண்டு வீட்டைச் சுத்தி நிழல் வலை கட்டி வெச்சிருக்கேன்.
பராமரிப்புக் குறைவு!
புறாக்களுக்கு தினமும் ஒருவேளை மட்டும் கொஞ்சமா தீனி போட்டா போதுமானது. காலை 6 மணிக்குத் திறந்துவிட்டா, 25 கிலோ மீட்டர் சுற்றளவுக்குப் பறந்து திரிஞ்சு இரை எடுக்கும். சிலசமயங்கள்ல 40 கிலோ மீட்டர் வரைக்கும்கூட போகும். காலை பத்து மணிக்கு எல்லா புறாவும் வீட்டுக்குத் திரும்பிடும். நாட்டு ரக ஜோடிப்புறாக்கள் சுத்த சைவம். நிலத்திலுள்ள புல், பூண்டு, சிறுதானியங்கள், களிமண் உருண்டைகளை உணவா எடுத்துக்கும். ஈரக்களிமண்ணை அலகாலேயே சின்ன உருண்டைகளாக உருட்டி சாப்பிட்டுக்கும். இரை எடுத்துட்டு வந்ததும், எல்லா புறாக்களும் தொட்டிகள்ல உள்ள தண்ணியைக் குடிக்கும். கலங்கி அழுக்கா இருக்குற தண்ணியை, பெரும்பாலும் இதுங்க குடிக்கிறதில்லை. அதனால சுத்தமான தண்ணி அவசியம். ஒரு நாளைக்கு நாலு தடவையாவது புறாக்கள் தண்ணீர் குடிக்கும். திரும்பவும், சாயங்காலம் 3 மணிக்கு புறா வீட்டைத் திறந்து சுத்தி அடைச்சிருக்குற நிழல் வலைக்குள்ள விட்டு தானியங்களைத் தூவுனா சாப்பிட்டு, தண்ணி குடிச்சுட்டு இருட்டுற நேரத்துல, அறைகளுக்குள்ள அடைஞ்சிடும். 250 ஜோடிகளுக்கு ஒரு நாளைக்கு 15 கிலோ தானியமும், 10 லிட்டர் தண்ணியும் தேவைப்படுது'' என்ற மைதீஷ்குமார், விற்பனை வாய்ப்புப் பற்றி சொன்னார்.
விற்பனையில் பிரச்னையில்லை!
''தாய்ப்புறா 8 வருஷம் வரைக்கும் முட்டை வைக்கும். அதுக்குப் பிறகு, தாய்ப்புறாவை மாத்திடணும். அப்பதான் முட்டை உற்பத்தி குறையாம இருக்கும். ஒரு ஜோடிப்புறா மூலமா, வருஷத்துக்கு 14 முட்டைகள் கிடைக்கும். இதுல சேதாரம் போக, சராசரியா
10 முட்டைகள் தேறும். பொறிக்கற குஞ்சுகள் பறக்க ஆரம்பிக்கிற நிலை வரைக்கும், வளத்து வித்துடணும். நம்மகிட்ட பழகிட்டா... எவ்வளவு தூரம் கொண்டு போய் விட்டாலும், திரும்ப நம்மகிட்டயே வந்துடும். அதனால, பறக்குறதுக்கு முன்னயே கண்டிப்பா வித்துடணும்.
கோயம்புத்தூர், பெங்களூரு, கேரளாவுல இருந்து வியாபாரிகள் தேடிவந்து புறாக்குஞ்சுகளை வாங்கிட்டுப் போறாங்க. புறா இறைச்சியை நிறைய நோய்களுக்கு மருந்தா சாப்பிடுற பழக்கம் இருக்கிறதால, எப்பவும் நல்ல கிராக்கி இருக்கு.
இப்போதைக்கு ஒரு ஜோடி, 250 ரூபாய்ல இருந்து 300 ரூபாய் வரை விற்பனையாகுது. 250 ஜோடி தாய்ப்புறாக்கள்ல இருந்து வருஷத்துக்கு சராசரியா 1,200 ஜோடி குஞ்சுகள் கிடைக்குது. விற்பனை செய்றது மூலமா வருஷத்துக்கு 3 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்குது. தீவனம், வேலையாள் செலவு எல்லாம் போக வருஷத்துக்கு 2 லட்ச ரூபாய் லாபமா கிடைக்குது.  
 2 லட்சம் நிச்சயம்!  10 லட்சம் லட்சியம்!
இடவசதி இல்லாதவங்க புறக்கடையிலகூட புறாவை வளக்கலாம். அதிக முதலீடு தேவையில்ல. நாம வளக்கப்போற புறாக்களோட எண்ணிக்கைக்கு ஏத்த மாதிரி கூண்டு அமைக்கறது மட்டும்தான் செலவு. பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ செய்யறதுக்கு ஏற்ற தொழில் இது. இப்போதைக்கு
2 லட்ச ரூபாய் லாபம் கிடைக்குது. படிப்படியா ஆயிரம் ஜோடி தாய்ப்புறாக்களை உருவாக்கி, வருஷத்துக்கு 10  லட்ச ரூபாய் லாபம் எடுக்கணும்கிறதுதான் என் லட்சியம்'' என்று சொல்லி விடை கொடுத்தார்.
தொடர்புக்கு,
ஆர்.கே. மைதீஷ்குமார்,
செல்போன்: 98431-80009

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites