இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, November 8, 2014

உயிர்வேலிக்கு உத்தரவாதம்...வருமானத்துக்கு ஆதாரம்

களாக்காய்...'நாளை கிடைக்கப்போகும் பலாக்காயைவிட இன்று கிடைக்கும் களாக்காய் சிறந்தது’ என்பது, முதுமொழி. இதை உண்மை என்று நிரூபித்து வருகிறார், விழுப்புரம் மாவட்டம், ரெட்டணை கிராமத்தைச் சேர்ந்த லஷ்மிநாராயணன். ''நிலத்துக்கு வேலியாக இருந்து, உண்பதற்கு காய்களையும் கொடுக்கும் களாக்காயை வணிகரீதியாக வளர்த்தால், அதிக செலவில்லாமல் நல்ல வருமானம் பார்க்கலாம்'' என்பதற்கு தன்னுடைய தோட்டத்தை உதாரணமாக்கி வைத்திருக்கிறார், லஷ்மிநாராயணன்.
தோட்டம் தேடிப்போன நம்மை அன்போடு வரவேற்ற லஷ்மிநாராயணன், கடகடவென பேச ஆரம்பித்தார். ''10-ம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கேன். 26 வருஷமா விவசாயம் பார்க்குறேன். குடும்பத்துக்குச் சொந்தமா 22 ஏக்கர் நிலம் இருந்துச்சு. வழக்கமா நெல், மணிலா, கரும்பு மாதிரியான பயிர்களை வெப்பேன். கிடைச்ச வருமானத்துல பக்கத்துல இருந்த நிலங்களை வாங்கி சேர்த்ததுல, இப்ப 27 ஏக்கர் நிலம் இருக்கு. 15 வருஷத்துக்கு முன்ன வேலையாட்கள் பிரச்னை, தண்ணீர் பிரச்னைனு வந்ததும், பெரும்பகுதி நிலத்துல சப்போட்டா, கொய்யா, மா இப்படி பழ மரங்களை நட்டுட்டேன். சப்போட்டாவும், மாவும் வருஷத்துக்கு ஒரு தடவை மட்டும் மகசூல் கொடுக்குறதால பராமரிப்பு செய்றது சுலபமா இருந்தது. கொய்யா மரங்களைப் பொறுத்தவரை அதிகமான பராமரிப்புத் தேவைப்பட்டாலும், நல்ல விலை கிடைக்கிறதால, தொடர்ச்சியா சாகுபடி செய்றேன்.
திருட்டைத் தடுத்த களாக்காய் செடிகள்!
16 ஏக்கர்ல கொய்யா, ஒரு ஏக்கர்ல சப்போட்டா, 5 ஏக்கர்ல மா, ஒரு ஏக்கர்ல சவுக்கு, 4 ஏக்கர்ல செங்கல் சூளை, எடைமேடையும் இருக்கு. நிலம் முழுக்க ரோட்டு ஓரத்துலயே இருக்குறதால ஆரம்பத்துல கம்பிவேலி போட்டேன். அதுக்கு அதிக செலவு ஆச்சு. ஆனாலும், ஆடு, மாடுகளை மட்டும்தான் கட்டுப்படுத்த முடிஞ்சுது. திருட்டைக் கட்டுப்படுத்த முடியல. நண்பர்கள்கிட்ட ஆலோசனை கேட்டப்போதான், 'களாக்காய் செடிகளை வேலியா வளர்த்தா... யாரும் உள்ள வர முடியாது'னு சொன்னார். உடனே செங்கத்துல இருந்து அஞ்சு படி (சுமார் 10 கிலோ) களாக்காய் பழம் வாங்கிட்டு வந்து விதை எடுத்து, காய வெச்சு முளைக்க வைச்சேன். அதெல்லாம் சரியா முளைக்கல. ஒரு தடவை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு போயிருந்தப்போ, ஆந்திராவுல இருந்து ஒரு வியாபாரி களாப் பழங்களைக் கொண்டு வந்திருந்தார். அவர்கிட்ட பேசினப்பதான் தெரிஞ்சுது, களாக்காய் விதைகளைக் காய வெச்சா முளைக்காதுங்குற விஷயம். நாத்துவிட்டு முளைக்க வைக்கிற தொழில்நுட்பத்தை அவர்தான் சொல்லிக்கொடுத்தார். அவர்கிட்டயே 25 கிலோ பழம் வாங்கிட்டு வந்து, அவர் சொன்ன முறையில நாத்து தயாரிச்சு, தேவையான இடங்கள்ல மட்டும் முக்கோண முறையில நட்டு விட்டேன். எல்லா செடிகளும் நல்ல முறையில வேர் பிடிச்சு வளர்ந்திடுச்சு. 12 ஏக்கர் நிலத்துல, சுமார் ஆயிரம் மீட்டர் அளவுக்குத் தேவைக்கு ஏத்த மாதிரி வேலியா நட்டு விட்டிருக்கேன்'' என்று சொல்லி வியப்பைக் கூட்டினார் லஷ்மிநாராயணன், தொடர்ந்தார்.
ஒரு வருடத்தில் வேலி!
''நட்ட ஒரு வருஷத்துல நல்ல வேலியா மாறிடுது. ஆடு, மாடுகள், மனிதர்கள் யாரும் உள்ள நுழைய முடியாது. நமக்குத் தேவையான உயரத்துக்கு வளரவிட்டு கவாத்து பண்ணிக்க லாம். கவாத்து செய்யாட்டியும் பிரச்னை இல்லை. மூணு வருஷத்துல காய் காய்க்க ஆரம்பிச்சிடும். ஒவ்வொரு வருஷமும் மே மாசம் பூவெடுத்து, ஆகஸ்ட் மாசத்துல இருந்து அக்டோபர் மாசம் வரை, காய் அறுவடை செய்யலாம். 1,000 மீட்டர் நீளத்துக்கு வெச் சிருக்கிற செடிகள்ல இருந்து, 1,000 கிலோ காய் கிடைக்கும். வேலியோரமா இருக்கறதால, ரோட்டுல போறவங்களும் பறிச்சுடறாங்க. எல்லாம் போக, வருஷத்துக்கு 200 கிலோ காய் கிடைக்குது. போன வருஷம் 100 கிலோ காயை, கிலோ அம்பது ரூபாய்னு விற்பனை செஞ்சேன். இந்த வருஷம் பழுக்க விட்டு நாத்து விட்டு, மீதி இடங்கள்ல நடலாம்னு இருக்கேன். இதுல மகசூல் கிடைக்கிறதைவிட, கம்பி வேலிக்கு பதிலா அதிக செலவில்லாத மாற்றா இருக்குறதுதான் விஷயமே!'' என்று சந்தோஷ மாகச் சொன்னார்!
தொடர்புக்கு,
லஷ்மிநாராயணன்,
செல்போன்: 94888-63995

காட்டுப்பழங்களில் இருந்து செடிகள்!
 களாக்காய் சாகுபடி செய்யும் விதம் பற்றி லஷ்மிநாராயணன் தந்த தகவல்கள், இங்கே பாடமாக-
'குத்துச்செடி என்றழைக்கப்படும் வகையைச் சேர்ந்ததுதான் களாக்காய். இதன் குறைந்தபட்ச ஆயுள் 25 ஆண்டுகள். காட்டில் கிடைக்கும் பழங்கள் அல்லது சந்தையில் கிடைக்கும் பழங்களின் விதைகளை பயன்படுத்தலாம். சந்தைகளில் விற்பனை செய்யப்படும் களாக்காய் பழங்களை வாங்கி, இரண்டு நாட்கள் வைத்திருந் தால், லேசாக அழுகிய நிலைக்கு மாறிவிடும். பிறகு, வாய் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் பழங்களைப் பிசைந்து விட்டால்... விதைகள் அடியில் தங்கிவிடும். அவற்றைச் சேகரித்து, சாம்பல் தூளில் கலந்து வைத்துக் கொள்ளவேண்டும்.
18 அடி நீளம், 8 அடி அகலம் என்ற அளவு நிலத்தில் மண்வெட்டியால் கொத்திக் களைகளை நீக்கி... மண்ணைப் பொலப்பொலப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும். இதன் மீது
50 கிலோ எருவைத் தூவிவிட்டு, ஓர் அங்குல இடைவெளியில், ஒவ்வொரு விதையையும் தனித்தனியாக விதைக்க வேண்டும். விதைத்த நாளிலிருந்து ஒரு மாதம் வரை, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்துவிட வேண்டும். அதற்குமேல், செடி வாடினால் மட்டும் தண்ணீர் கொடுத்தால் போதுமானது. நாற்றுகளில் பூச்சித்தாக்குதல் தென்பட்டால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 50 மில்லி வேப்பெண்ணெய் கலந்து தெளிக்கலாம். நான்கு முதல் ஐந்து மாதங்களில் நாற்று, ஒன்றரை அடி உயரத்துக்கு வளர்ந்து நடவுக்குத் தயாராகி விடும்.
100 மீட்டருக்கு 2 ஆயிரம் செடிகள்!
மழைக்காலமான அக்டோபர்-நவம்பர் மாதங்களில், நடவு செய்யலாம். ஓர் அடி இடைவெளியில் முக்கோண முறையில் கடப்பாரையால் குழி இட்டு, செடியை நட்டுவிட்டால் போதுமானது. 100 மீட்டர் நீளத்துக்கு நடவு செய்வதற்கு, இரண்டு கிலோ பழத்தில் உற்பத்தி செய்த 2 ஆயிரம் செடிகள் போதுமானவை. நடவு செய்த 6 மாதங்கள் வரையில், மண்ணின் ஈரத்தைப் பொறுத்து, 5 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதற்குமேல் தனியாக தண்ணீர் கொடுக்கத் தேவையில்லை. மற்ற செடிகளுக்குப் பாயும்போது, கிடைக்கும் தண்ணீரை களாக்காய் செடிகள் எடுத்துக்கொள்ளும். நடவு செய்த ஆறு மாதங்களுக்கு, இவற்றை வெள்ளாடுகள் கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
6-ம் மாதத்தில் செடி இரண்டரை அடிக்கு மேல் வளர்ந்து விடுவதால், பராமரிப்புத் தேவையிருக்காது. பூச்சி, நோய் தாக்குதல் இருக்காது. தனியாக இதற்கு எந்தவிதமான இடுபொருட்களும் கொடுக்கத் தேவையில்லை.'
 செர்ரி தயாரிக்க, களாக்காய்!
களாக்காய் பற்றி பெரியகுளம் தோட்டகலைக் கல்லூரி, பழப்பயிர்கள் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் பாலகிருஷ்ணனிடம் பேசினோம். ''களாக்காய் ஆங்கிலத்தில் 'கரோன்டா' (ளீணீக்ஷீஷீஸீபீணீ) என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட களாக்காய் செடிகளின் அறிவியல் பெயர், 'கரிஸ்ஸா கரன்டாஸ்' (சிணீக்ஷீவீssணீ நீணீக்ஷீணீஸீபீணீs). வெப்பமண்டலப் பகுதிகளில் வளரக்கூடிய இந்தச் செடிகள், இந்தியா முழுவதும் பல பகுதிகளில் காட்டுச்செடியாக மட்டுமே உள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கோவிந்த பல்லபந்து வேளாண்மைப் பல்கலைக்கழகம், களாக்காயில் புதிய ரகத்தை உருவாக்கி இருக்கிறது. இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் வறட்சியான பகுதிகளில் சாகுபடி செய்யும் பயிராக இதை அறிவித்துள்ளது. இவற்றின் காய் மற்றும் பழங்கள் புளிப்புச் சுவையுடன் இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுகின்றனர்.
காய்கள், ஊறுகாய் தயாரிக்கப் பயன்படுகின்றன. விதை நீக்கம் செய்யப்பட்ட களாக்காயை நிறமேற்றி, சர்க்கரை பாகில் ஊற வைத்து பேக்கரிகளுக்குத் தேவையான 'செர்ரி’ தயாரிக்கிறார்கள். இவற்றின் நாற்றுகளை விதை மற்றும் கட்டிங் மூலம் உற்பத்தி செய்யலாம். எங்கள் கல்லூரியை அணுகினால், தேவையின் பெயரில், நாற்றுகளை உற்பத்தி செய்து கொடுப்போம்'' என்று சொன்னார்.
தொடர்புக்கு:
தலைவர் மற்றும் பேராசிரியர்,
பழப்பயிர் துறை, பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி.
தொலைபேசி: 04546-231726/233225.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites