இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, November 8, 2014

நெல்லி... மதிப்புக்கூட்டினால் மகத்தான லாபம்!விவசாயிகள் பலரும் தங்களது விளை பொருட்களை அப்படியே சந்தைக்கு அனுப்பி, விற்பனை செய்வதைத்தான் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மதிப்புக்கூட்டி விற்கும்போது, கூடுதல் லாபம் கிடைக்கும் என்று அறிந்துகொள்ளும் விவசாயிகள், மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதோடு நேரடி விற்பனை மூலமாகவும் கூடுதல் லாபம் பார்த்து வருகிறார்கள். இவர்களில் பலரை அவ்வப்போது ‘பசுமை விகடன்’ அடையாளம் காட்டி வருகிறது. இந்த வரிசையில் விழுப்புரம் மாவட்டம், திருப்பாச்சனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கத்தின் லாபக் கதை இங்கே விரிகிறது. இவர் விளைவிக்கும் நெல்லிக்காய்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்துவருகிறார்.
நெல்லியில் இருந்து தயாரித்த பொருட்களை ‘பேக்’ செய்து கொண்டிருந்த ராமலிங்கத்திடம் பேசினோம். ‘‘நான் பிறந்தது விழுப்புரத்துக்கு பக்கத்துல இருக்குற சே. அகரம். எஸ்.எஸ்.எல்.சி வரைக்கும் படிச்சேன். அதுக்குமேல படிக்க வசதி இல்லை. அதனால அப்பாகூட சேர்ந்து விவசாய வேலைகளைக் கத்துக் கிட்டேன். கல்யாணம் ஆன பிறகு, இந்த ஊர்ல (திருப்பாச்சனூர்) 8 ஏக்கர் நிலம் வாங்கி, நெல், கடலை, கரும்புனு பயிர் வெச்சேன். விவசாயப் புத்தகங்கள்ல படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டு ‘கோலியஸ்’ மாதிரியான மூலிகைப் பயிர்களையும் சாகுபடி செஞ்சேன். போதுமான விளைச்சல் இருந்தாலும், வருமானம் அவ்வளவா இல்லை. அதனால, கான்ட்ராக்ட் வேலை எடுத்து செய்யலாம்னு மொத்த நிலத்துலயும் சவுக்கு நட்டுவெச்சுட்டு, சென்னைக்குப் போயிட்டேன். பிள்ளைங்க படிச்சு வேலைக்குப் போக ஆரம்பிச்ச பிறகு, கிராமத்துக்குத் திரும்பின நான், சவுக்கு மரங்களை வெட்டி வித்துட்டு, பழையபடி விவசாயத்தை ஆரம்பிச்சுட்டேன்’’ முன்கதை சொன்ன ராமலிங்கம் தொடர்ந்தார்.
மகத்துவம் கொண்ட நெல்லி!
‘‘எங்க அப்பா சித்த வைத்தியம் பார்ப்பார். அந்த அனுபவமும், அவரோட ஞானமும் எனக்கும் கிடைச்சதால, சின்ன பிள்ளையா இருக்குறப்ப இருந்தே, மூலிகைகள் மீது ஆர்வம் அதிகம். ‘காயகல்ப மூலிகை’யில முக்கியமான மூலிகை நெல்லிக்காய். அதோட மருத்துவக் குணங்களும், விற்பனை வாய்ப்புகள் பற்றியும் நல்லா தெரிஞ்சிருந்ததால, அஞ்சு ஏக்கர்ல 15 அடி இடைவெளியில ஆயிரம் நெல்லிச் செடிகளை வெச்சேன். முழுக்க இயற்கை விவசாயம்தான் செய்றேன். புயல் பாதிப்புல ஏகப்பட்ட மரங்கள் முறிஞ்சு போச்சு. இப்போ 200 நெல்லி மரங்கள் மட்டும்தான் இருக்கு.
இந்தியா முழுக்க சுத்தி, நெல்லிக்காயை மதிப்புக்கூட்டுற முறைகளைக் கத்துக்கிட் டேன். 2012-ம் வருஷம் தஞ்சாவூர்ல இருக்குற இந்திய பயிர் பதன கழகத்துல பயிற்சி எடுத்துக்கிட்டேன். அப்பறம், 10 ஆட்களை தஞ்சாவூருக்கு அழைச்சிட்டுப் போய், அவங்களையும், நெல்லி கேண்டி, நெல்லி ரசம், நெல்லி வற்றல், ஊறுகாய் மாதிரியான பொருட்களை தயாரிக்கிற பயிற்சிகளை எடுக்க வெச்சேன். அடுத்து, ‘காயகல்பம்’ தயார் செய்ற முறையை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்பத்துல வேலை பார்த்த பேராசிரியர் பத்மாகிட்ட கத்துக்கிட்டேன். இப்போ, அதிக மூலிகை குணங்கள் கொண்ட குடகு மலை தேனைப் பயன்படுத்தி காயகல்பம் தயார் செய்றேன்.
அதோட, நெல்லிக்காய் கேண்டி, நெல்லிக்காய் ரசம் (ஒயின் போன்றது), நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் வற்றல்னு தயாரிச்சு விற்பனை செய்திட்டிக்கேன்.
ஆரம்பத்துல, விற்பனைக்காக படாதபாடு பட்டேன். அப்பறம் கடன் அடிப்படையில கொடுத்து விற்பனையைப் பழக்கினேன். கடைகள்ல வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்க ஆரம்பிச்சதும், எனக்கு கடைக்காரங்க ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. இப்ப என்னோட பொருட்களை சூப்பர் மார்க் கெட், இயற்கை அங்காடி, சர்வோதய சங்கம், காதிபவன் மாதிரியான இடங்கள்லயும் விற்பனை செய்றேன். நாம தயார் செய்யுற பொருட்கள் நச்சு இல்லாததாகவும், தரமான தாகவும், சரியான விலையோடும் இருந்தா விற்பனைக்கு பிரச்னையே இருக்காது’’ என்ற ராமலிங்கம், வருமானம் பற்றியும் பேசினார்.
‘‘200 நெல்லி மரங்கள்ல இருந்து வருஷத்துக்கு சராசரியா 20 டன் நெல்லிக்காய் கிடைக்கிறது. இந்தக் காய்கள்ல இருந்து நெல்லி கேண்டி, நெல்லி ரசம், காயகல்பம், ஊறுகாய் எல்லாம் தயாரிக்கிறேன். ஒரு டன் நெல்லிக்காய் கேண்டி தயாரிச்சு, கிலோ 400 ரூபாய்னு விற்பனை செய்றேன். இதுல 4 லட்சம் ரூபாய் கிடைக்குது. ஆயிரம் லிட்டர் நெல்லி ரசம் தயாரிச்சு, ஒரு லிட்டர் 160 ரூபாய் வீதம் விற்பனை செய்யுறதுல, 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. 250 கிலோ காயகல்பம் தயார் செய்றேன். கிலோ 450 ரூபாய்னு விற்பனை செய்யும்போது, 1 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கிது. 250 கிலோ ஊறுகாய் தயாரிச்சு, கிலோ 250 ரூபாய்னு விற்பனை செய்யும்போது, 62 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்குது. ஆகக்கூடி மொத்த வருமானம் 7 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய். இதுல, உற்பத்திச் செலவு, கடைக்காரர்களுக்கான கமிஷன் எல்லாம் போக, 2 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்குது.
20 டன் நெல்லிக்காயை குளிர்பதனப்படுத்தி நேரடியா விற்பனை செய்றது சுலபமில்லை. அப்படியே வித்தாலும் இந்த அளவுக்கு லாபம் கிடைக்காது. அதேசமயம், மதிப்புக்கூட்டல் மூலமா இப்ப கிடைக்கிற லாபம் கூடுதல்தான்னாலும், என்னைப் பொறுத்தவரை இது குறைவான லாபம்தான். இப்போதான் மதிப்புக்கூட்டல்ல ஆரம்ப நிலையில இருக்கேன். சில கடைக்காரர்களுக்கு அதிக நாள் கடன் கொடுக்க வேண்டியிருக்கு. சிலருக்கு அதிக கமிஷன் தர வேண்டியிருக்கு. இதனாலயெல்லாம் எனக்கு லாபம் குறைவா இருக்கு. இன்னும் சில வருஷங்கள்ல கண்டிப்பா கூடுதல் லாபம் எடுத்துடுவேன்” என்றார் நம்பிக்கையோடு!
 
தொடர்புக்கு, ராமலிங்கம்,
செல்போன்: 94435-37692.

நெல்லிக்காய் மதிப்புக்கூட்டல் பயிற்சி!
நெல்லிக்காயில் மதிப்புக் கூட்டல் பயிற்சி பற்றி பேசிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் வரதராஜன், ‘‘எங்கள் மையத்தின் மூலம் நெல்லி பானங்கள், நெல்லி ஜாம், ஜெல்லி, கேண்டி மிட்டாய், பொடி மற்றும் துருவல் போன்ற மதிப்புக்கூட்டல் பொருட்களைத் தயாரிப்பு செய்வதற்கு இரண்டு நாட்கள் பயிற்சி கொடுத்து  வருகிறோம். பயிற்சிக்கான கட்டணம் ஆயிரம் ரூபாய். விருப்்பம் உள்ளவர்கள், எங்கள் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.
தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், கோயம்புத்தூர். தொலைபேசி: 0422-6611340, 6611268

அதிக நாட்கள் கெடாமல், பாதுகாக்கும் பிரமிட்!
மதிப்புக்கூட்டிய பொருட்களை பிரமிடு போன்ற அறைகளில்தான் ராமலிங்கம் சேமிக்கிறார். சாதாரணமான அறைகளில் மதிப்புக்கூட்டிய பொருட்களைச் சேமித்து வைக்கும்போது, விரைவாக கெட்டுப்போக வாய்ப்புகள் உள்ளன. ஆனால், பிரமிடு அமைப்போடு இருக்கும் அறையில் சேமிக்கும்போது, வெப்பநிலை குறைவாக இருப்பதுடன் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கிறதாம்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites