இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, September 16, 2014

நீங்கள் பொறுப்பான பெற்றோரா?


குழந்தை வளர்ப்பு என்பது கடமை அல்ல, அது ஒரு கலை. '’உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல. அவர்கள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள், அவ்வளவுதான்' என்றார் கலீல் ஜிப்ரான். ஒருபுறம் தங்கள் நிறைவேறாத கனவுகளைக் குழந்தைகள் மூலம் திணிக்கும் 'ரிங் மாஸ்டர்’ பெற்றோர்கள், இன்னொருபுறம் தொழில்நுட்ப வளர்ச்சியுடனே சேர்ந்து வளரும் குழந்தைகள் இவற்றுக்கு இடையில்தான் இருக்கிறது குழந்தை வளர்ப்பு என்னும் கலை.
இதனைக் கருத்தில்கொண்டே, அன்மையில் சென்னை சர்ச் பார்க் பள்ளிக் குழுமத்தைச் சேர்ந்த சேக்ரட் ஹார்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம், கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலரையும் அழைத்து, குழந்தை வளர்ப்புக்கான பயிற்சிப் பட்டறையை நடத்தியது. இதில், கலந்துகொண்ட நிபுணர்களின் கருத்துக்கள், பெற்றோர்களுக்குப் பல வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது.
குழந்தை ரோபோ அல்ல!
சகோதரி லிஸிட்டா, முதல்வர், சேக்ரட் ஹார்ட் பள்ளி.
'குழந்தை வளர்ப்பு ஒரு சவால். அந்தச் சவாலை வெற்றிகரமாகச் சமாளிக்க, ஒவ்வொரு பெற்றோரும் சில விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்; சில தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு பெற்றோர்  கொடுக்கக்கூடிய பெரிய சொத்தே, தினமும் அவர்களுக்காக ஒதுக்கும் நேரம்தான்். மொபைல்போன், டி.வி, லேப்டாப், வீடியோகேம்ஸ் போன்ற மின்னணுச் சாதனங்கள், குழந்தைகளைச் சமூகத்திடமிருந்து பிரிக்கிறது. மற்றவர்களை, அவர்கள் கோணத்தில் இருந்து புரிந்துகொள்ளும் தன்மை (empathy) குறைகிறது. இணையத்தில் கிடைக்கும் அளவுக்கு அதிகமான தகவல்களும் எதற்கும் கிடைக்கும் உடனடித் தீர்வு’ம் ஆபத்தானவைதான்.  
அதிக மார்க் எடுக்கணும்’, அதிகமா சம்பாதிக்கணும்’ என்று சொல்லிச் சொல்லி, குழந்தைகளிடமிருந்து ரோபோ’க்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நாம் எதிர்காலச் சமூகத்துக்கு ஆற்றல்மிக்க குழந்தைகளை உருவாக்கித்தர வேண்டுமே தவிர, எந்திரத்தனமான ரோபோக்களை அல்ல!'
தோழமை மிக்க தொடர்பு தேவை!
டாக்டர் ஜான்சி சார்லஸ், பதிவாளர், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்.
'' பெற்றோர்களாக இருப்பது’ என்பது வேறு, பயனுள்ள பெற்றோர்களாக இருப்பது’ (effective parenting) என்பது வேறு. ஒரு குழந்தையின் உடல், மனநிலைகளில் நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்துபவர்கள்தான் பெற்றோர்.குழந்தையின் முதல் கற்றல், பெற்றோர்களிடம் இருந்துதான் தொடங்குகிறது. பெற்றோர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் குழந்தைகள் கூர்ந்து கவனிக்கின்றனர். பெற்றோரின் உடை, உணவு, பேச்சு, நடத்தை என எல்லாவற்றையுமே குழந்தைகள் இமிடேட்’ செய்கின்றனர். அதனால் நம் பேச்சில், செயலில் மிகுந்த கவனம் தேவை. குழந்தை எப்படி வர வேண்டும் என்று விரும்புகிறோமோ பெற்றோரும் அப்படியே முன்மாதிரியாக இருக்கவேண்டும்.
பள்ளியில் இருந்து திரும்பும் குழந்தைக்கு, பெற்றோரிடம் பகிர்ந்துகொள்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கும். குழந்தை சொல்லுவதைப் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டு, அதற்கு 80 சதவிகிதம் பதில் அளிக்க முயற்சிக்க வேண்டும். அது பேச ஆரம்பிப்பதற்கு முன்பே நடுவில் குறுக்கிட்டு உரையாடலைத் தடுக்கக் கூடாது. அப்படி குறுக்கிட்டால், குழந்தை நம்மிடம் எதையுமே சொல்லாது.
குழந்தைகளை மட்டம் தட்டிக்கொண்டே இருந்தால், மனதளவில் அவர்கள் முடங்கிவிடுவார்கள். எப்போதும் உற்சாக வார்த்தைகளைச் சொல்லி, அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் வீட்டில், ஒரு குழந்தையை மட்டும் எப்போதும் உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசிக்கொண்டிருப்பது மிகமிகத் தவறு. புகழ்ச்சியும், இகழ்ச்சியும் அந்தக் குழந்தையை மட்டும் அல்லாமல், மற்ற குழந்தைகளையும் மனத்தளவில் பாதிக்கும். இவற்றை எல்லாம் கடைப்பிடித்தால், ஒவ்வொரு பெற்றோருமே சிறந்த பெற்றோர்’ ஆகத் திகழலாம்.''

திணிக்காதீர்கள்!
டாக்டர் பி.எஸ்.விருதகிரிநாதன், கிளினிகல் நியூரோ சைகாலஜிஸ்ட்.
'குழந்தைகளிடம் இருக்கும் திறமைகள், குறைபாடுகளைப் புரிந்துகொள்ளாமல், பெற்றோர்கள் தங்களின் விருப்பங்களை அவர்கள் மேல் திணிக்கக் கூடாது.  பக்கத்து வீட்டுப் பையன் ஸ்விம்மிங் கத்துக்கிறான்’ என்றோ, உன் ஃப்ரெண்ட் கீபோர்டு க்ளாஸ் போறான் பார்’ என்றோ சொல்லி, அவர்களைக் கட்டாயப்படுத்தி அனுப்புவது கூடவே கூடாது.  
சரியாக எழுத வராத குழந்தைகளுக்கு, கற்றலில் குறைபாடு (Learning Disability), அதீதத் துறுதுறுப்பு மற்றும் கவனக் குறைபாடு (ADHD) போன்ற குறைபாடுகள்கூடக் காரணமாக இருக்கலாம். இவர்களுக்கு அறிவுத்திறன் (ஐ.க்யூ) சாதாரணமாக இருக்கும். பார்வைத்திறன், செவித்திறன் எல்லாம் சரியாக இருந்தும், ஒழுங்காக எழுத வராமல் இருக்கும். இந்தக் குறைபாடுகள் இருப்பின் வழக்கமான பள்ளி நேரம் முடிந்த பிறகு, ரெமெடியல் க்ளாஸ்’களுக்கு அனுப்பிப் பயிற்சி கொடுக்கலாம். சில மாதப் பயிற்சியிலேயே அவர்கள் சாதாரணமாக எல்லோரையும் போல எழுத முடியும். பிள்ளைகளை அடிக்காமல் என்ன பிரச்னை என்று அக்கறையோடு அணுகினால், ஒருவேளை குறைபாடு இருப்பின் சீக்கிரமே கண்டு பிடித்து, சரிசெய்து விடலாம்.'
வரையறைப்படுத்தி, வழிகாட்டுங்கள்!
வி. பாலாஜி, நிர்வாக இயக்குநர், மெட்டாப்ளோர் சொல்யூஷன்ஸ் பி லிட்.
'இன்று நமது வாழ்க்கையில் தொழில்நுட்பத்தைத் தவிர்க்கவே முடியாது. ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப், யூ ட்யூப் போன்றவை, இளைய தலைமுறையின் சிந்தனைகளையும், கருத்துக்களையும், அனுபவங்களையும், படங்களையும் பகிர்வதற்குரிய தளங்களாக இருக்கின்றன. பெற்றோர்கள் அதை முற்றிலுமாகத் தடுக்க முடியாதே தவிர, உபயோகத்தை வரையறைப்படுத்தலாம். பெண் குழந்தைகள் என்றால், அவர்களைப் பற்றிய பர்சனல் டேட்டா’, படங்கள் போன்றவற்றைப் பகிர்வதில் கவனமாக இருக்கச் சொல்லி அறிவுறுத்துவதுடன், அவர்களின் ப்ரைவஸி செட்டிங்’கை உறுதிப் படுத்திக்கொள்ளவேண்டும். சமூக வலைதளங்களை ஒரேயடியாக ஒதுக்க முடியாத இந்நாளில், அதைப் பயன்படுத்துவதற்கான வரம்பை உருவாக்க  கண்டிப்பாகப் பெற்றோர்களின் மேற்பார்வையும் கட்டுப்பாடான வழிகாட்டுதலும் தேவை.  
அதீத நம்பிக்கை ஆபத்தில் முடியும்!
பிள்ளைகளை நம்புங்கள். ஆனால், குழந்தை வளர்ந்து, டீன் ஏஜ் பருவத்தை அடையும்போது மிகவும் அக்கறையோடு கண்காணிக்க வேண்டும். பல வருடங்களுக்கு முன்பு... மதுரை எம்.எம்.சியில் நான் ஹாஸ்டல் வார்டனாக இருந்தபோது, அங்கே தங்கிப் படித்துக்கொண்டிருந்த இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர், அந்தக் கல்லூரியில் பணியாற்றிய உதவிப் பேராசிரியரைக் காதலித்தார். அவர் ஏற்கெனவே திருமணமானவர். மாணவியின் பெற்றோருக்கு இது தெரியாது. எனக்கு விபரம் தெரியவந்தபோது, அந்தப் பெண்ணைக் கூப்பிட்டுக் கடுமையாக எச்சரித்ததுடன், அவரின் பெற்றோரை உடனே கிளம்பி வரச்சொன்னேன். ஆனால், அவர்கள் எங்களிடம் எதுவும் கேட்காமல், மகளிடம் கேட்டிருக்கிறார்கள். உஷாரான அந்தப் பெண், அந்த மேடம், ரொம்ப காஸ்ட்லியான கிஃப்ட் ஏதாவது வாங்கித் தரச் சொன்னாங்க. நான் கேட்கலை... அதுதான் உங்களை வரச் சொல்றாங்க போல... நீங்க வராதீங்க'' என்று சொல்லித் தடுத்துவிட்டாள். அவளை நம்பி, பெற்றோரும் வரவில்லை. அடுத்த வாரத்திலேயே, காதலித்த அந்த நபருடன், விடுதியில் இருந்து வெளியேறிவிட்டாள். விடுதியைக் காலி செய்வதற்கு அவள் கொடுத்த கடிதத்தில் பெற்றோரின் கையெழுத்தும் இருந்தது. மேலும் விபரம் கேட்பதற்கு, அவள் பெற்றோரைத் தொடர்புகொண்டாலும், அவர்கள் போனை எடுக்கவே இல்லை. இரண்டு, மூன்று மாதங்கள் கழித்து, தன் பெண்ணைக் காணாமல் ஹாஸ்டலுக்கு வந்தனர்.  நான் நடந்ததைக் கூறி, விடுதியைக் காலி செய்வதற்கு அவள் கொடுத்த கடிதத்தையும் காட்டினேன். தங்கள் தவறை நொந்தபடி, மகளைத் தேடிக் கண்டுபிடித்து, பின் எங்களிடம் மன்னிப்புக் கேட்டனர். வயசுப் பிள்ளைகளை ஒரு அளவுக்குத்தான் நம்பவேண்டும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் உதாரணம்'' என்றார் டாக்டர் ஜான்சி.
பொறுமையோடு புரியவையுங்கள்!
டாக்டர் தலாத், (ட்ரைகாலஜிஸ்ட்), பெற்றோர் சங்கப் பிரதிநிதி.
''குழந்தை தவறு செய்தால், கண்டிப்பதோடு நிறுத்திவிடாமல், என்ன தவறு’ என்பதைப் புரியவையுங்கள். நான் கேள்விப்பட்ட ஒரு சம்பவம்... ஒரு குழந்தை, அடிக்கடி பால்கனிக்குப் போய் விளையாடும். அம்மா கண்டிப்பார். பால்கனியில் இருந்து கிழே விழுந்தா என்ன ஆகும்?’ என்று குழந்தை கேட்டபோது, அதன் தாய், இப்போ உள்ளே வர்றியா இல்லையா? பால்கனிகிட்ட எல்லாம் போகக் கூடாது’ என்று மீண்டும் மீண்டும் மிரட்டும் தொனியில் சொல்லியிருக்கிறார். குழந்தைகளுக்கே உரிய என்னதான் ஆகும்’ என்ற ஆர்வத்தில் அது பால்கனியில் இருந்து குதித்துவிட்டது. இதையே, அந்தத் தாய் பொறுமையாக, சில நிமிடங்களைச் செலவழித்து, ஏதேனும் ஒரு பொருளை மேலிருந்து கீழே தூக்கிப் போட்டு, அது உடைவதைக் காண்பித்து விளக்கி இருந்தால், குழந்தை நிச்சயம் புரிந்துகொள்ளும். அதன் பின்னர் அந்தத் தவற்றைச் செய்யாது. சக மனிதரை நேசித்தல், பிறருக்கு உதவுதல், மரியாதை போன்ற எல்லா நல்ல பண்புகளையும் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதை விட, நம்மிடமிருந்தே கற்றுக்கொள்ளும் வகையில், நாம் நடந்துகொண்டாலே போதும்.'

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites