எந்த நல்ல காரியங்களுக்கும் அன்பளிப்பாகக் கொடுக்க முதல் சாய்ஸ் தஞ்சாவூர் ஓவியங்கள். பாரம்பரியமானதும், கவுரவமானதுமான தஞ்சாவூர் ஓவியங்கள், காலங்கள் கடந்தும் நினைவில் நிற்கக்கூடியவை. ஆனால், கையடக்க தஞ்சாவூர் ஓவியத்தின் விலையே ஆயிரங்களில்தான் ஆரம்பிக்கிறது என்பதால் அதை அன்பளிப்பாகக் கொடுப்பதென்பது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. தஞ்சாவூர் ஓவியத்தைப் பரிசளிக்க நினைத்தாலும், இயலாத நிலையில் இருப்போருக்கு சென்னையைச் சேர்ந்த அனுராதாவும் சித்ராவும் செய்கிற கைவினைப் பொருட்கள் சரியான மாற்று. தஞ்சாவூர் மோடிஃப் வேலைப்பாடு என அழைக்கப்படுகிற அந்தப் பொருட்களில், தஞ்சாவூர் ஓவியம்தான் ஹைலைட்!
‘‘ரெண்டு பேரும் ரொம்ப வருஷமா ஃப்ரெண்ட்ஸ். ரெண்டு பேருக்கும் தஞ்சாவூர் பெயின்ட்டிங் தெரியும். என்னதான் மாடர்னான, புதுமையான அன்பளிப்புப் பொருட்கள் வந்துட்டாலும் தஞ்சாவூர் ஓவியங்களுக்கு இப்பவும் மக்கள் மத்தியில பெரிய வரவேற்பு இருக்கு. ஆனா, அதைச் செய்யத் தேவையான முக்கியமான பொருள் 24 கேரட் தங்கம். அதனாலதான் தஞ்சாவூர் ஓவியங்களோட விலை எக்கச்சக்கமா இருக்கு.
தஞ்சாவூர் ஓவியங்கள் வாங்கவும் கத்துக்கவும் வர்றவங்களோட இந்தப் புலம்பலைக் கேட்டப்பதான் ஒருநாள் திடீர்னு இந்தப் புதுமையான ஐடியா வந்தது. தஞ்சாவூர் ஓவியம் செய்யத் தேவையான அதே பொருட்களை வச்சுக்கிட்டு, அதை ஃபிரேம் வடிவத்துல கொடுக்காம, வேற எப்படியெல்லாம் மாத்திப் பண்ணலாம்னு யோசிச்சோம். எங்களோட அந்தப் புதுமையான முயற்சிக்கு மிகப் பெரிய வரவேற்பு...’’ என்கிற அனுராதாவும் சித்ராவும் தஞ்சாவூர் மோடிஃப் வேலைப்பாடுகளை மரப் பொருட்கள் எதிலும் பதித்துக் கொடுக்கிறார்கள். குங்குமச் சிமிழ், பேனா ஸ்டாண்டு, ஹேர் கிளிப், நகைப்பெட்டி, பென்டென்ட், போட்டோ ஃபிரேம், மரப்பாச்சி பொம்மைகள், புக் மார்க், பல்லாங்குழி, ராக்கோடி, சந்திரப்பிரபா, சூரியப்பிரபா, நெத்திச் சூட்டி, மினியேச்சர் கொலுப் படி என எல்லாவற்றிலும் பதிக்கிறார்கள்.
‘‘லெதர், சணல், கண்ணாடி, மரம், அக்ரிலிக் ஷீட்னு எந்த மெட்டீரியல்ல வேணாலும் இந்த வேலைப்பாட்டை ஒட்டித் தர முடியும். ஒரு சாதாரண, சிம்பிளான பொருளை, கலை நயமிக்க, காஸ்ட்லியான அன்பளிப்பா மாத்தறதுதான் இந்த வேலைப்பாட்டோட நோக்கம்’’ என்கிறவர்கள், 2500 ரூபாய் முதலீட்டில் இந்த பிசினஸில் இறங்கலாம் என தைரியம் தருகிறார்கள்.‘‘24 கேரட் கோல்டு ஃபாயில், அரபிக் கம், சாக் பவுடர், ஜெய்ப்பூர் ஸ்டோன்ஸ், போஸ்டர் கலர், பிரஷ், பிளைவுட்... இவை தான் தேவையான பொருட்கள். 2,500 ரூபாய் முதலீட்டுல 50 பீஸ் பண்ணலாம். ஒரு நாளைக்கு 50 பண்ணலாம். 50 ரூபாய்லேருந்து 8 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்கறதுக்கு இதுல வாய்ப்புகள் எக்கச்சக்கம்...’’ என ஆர்வம் கிளப்புவோரிடம் 2 நாள் பயிற்சியில் 6 அயிட்டங்களை தேவையான பொருட்களுடன் சேர்த்து 1,200 ரூபாய் கட்டணத்தில் கற்றுக் கொள்ளலாம் (97898 90757, 99444 85585).
Posted in: அலங்காரப் பொருட்கள்
0 comments:
Post a Comment