இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, May 17, 2012

ஆண்டு முழுவதும் பொங்கல் !அசத்தும் சுங்கான்கடை

பாட் பிரியாணி... ப்ளீஸ்!', 'பாட் ரைஸ் ப்ளீஸ்!', 'பாட் வத்தக் குழம்பு வேணுமா?' - இதுபோன்றக் குரல்களை, ஐந்து நட்சத்திர உணவகங்களில் இப்போது அதிகமாகவே கேட்க முடிகிறது! ஆங்கிலத்தில் 'பாட்' என்றழைக்கப்படும், நம்முடைய பாரம்பரிய மண்பானைகளுக்கு, இப்போது மரியாதை கூடி வருகிறது!ஆம்... இரும்பு, பித்தளை, அலுமினியம், குக்கர், நான்ஸ்டிக், காப்பர் பாட்டம்... இவை எதுவுமே மண்பானைச் சமையலுக்கு ஈடு இணையாகாது! மண்பானைச் சாப்பாட்டை ருசித்தவர்களுக்குத்தான் அந்த உண்மை தெரியும்!
பல்லாயிரம் ஆண்டுகளாக, சமையல் உள்ளிட்ட பலவேறு தேவைகளுக்கும் தமிழர்கள் பயன்படுத்தி வந்த இந்தப் பானைகள்... இந்தப் பதினைந்து, இருபது ஆண்டுகளாகத்தான் திடீர் என காணமால் போக ஆரம்பித்தன. 'மண் பானையில் சமைப்பது கௌரவக் குறைச்சல்' என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நம்மவர்கள் அதைக் கைவிட ஆரம்பித்தனர். என்றாலும், ஆண்டுக்கு ஒரு தடவை, தைப் பொங்கல் திருநாளன்று மண்பானையில் பொங்கல் வைப்பது மட்டும் பெரும்பாலானவர்களால் கைவிடப்படவில்லை. அத்தோடு, கோயில்களில் பொங்கல் வைப்பது, புதுக் கல்யாணத் தம்பதிகளுக்கு பானை தருவது, கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்குக் கலசம் வைப்பது என்பது போன்ற ஒன்றிரண்டு சம்பிரதாயங்களின் புண்ணியத்தால்...இன்றளவும் மண்பானையும் வாழ்கிறது!

தமிழகம் முழுவதுமே பானை செய்யும் தொழில் நடைபெற்றாலும்... சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதி கிராமங்கள்... கன்னியாகுமரி மாவட்டம், சுங்கான்கடை கிராமம்... என மண்பானைக்கெனவே பிரத்யேக ஊர்கள் பல இருக்கின்றன! பொங்கலுக்காக நாம் பயணித்தது... நாகர்கோவிலுக்கு அருகே இருக்கும் சுங்கான்கடை கிராமத்துக்குத்தான்!திரும்பியப் பக்கமெல்லாம் மண்பானைகள்தான் குவித்து வைக்கப்பட்டுள்ளன. புகைந்து கொண்டிருக்கும் சூளைகள்... பிசைந்து வைக்கப்பட்டிருக்கும் மண்குவியல்கள்... பானை உற்பத்தி என... காலைவேளையிலேயே, பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த கிராமம்.
மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளராக இருக்கும் விஸ்வத்திடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும்... ''தாழக்குடி, தளக்குலம், தேரேகால்புதூர்னு ஏகப்பட்ட கிராமங்கள்ல மண்பாண்டம் செய்யுற தொழிலாளர்கள் ஒரு காலத்துல நிறைஞ்சிருந்தாங்க. மண் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை இல்லாததால, வேற வேலைகளுக்குப் போயிட்டாங்க. எங்க கிராமத்துல மட்டும் இன்னமும் அந்தத்தொழில் நடந்துக்கிட்டிருக்கு. இதை நம்பி, நூத்துக்கணக்கானக் குடும்பங்க இருக்குது.

இங்கிருந்து கேரளாவுக்கு அதிக அளவுல பானைகள் போகுது. திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பொங்கல், சக்களத்துக்காவு பகவதி அம்மன் கோவில் பொங்கல்னு கேரளா கோவில்கள்ல வருஷம் முழுக்கவே பொங்கல் வைக்கிற விழா நடந்துக்கிட்டே இருக்கும். லட்சக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைப்பாங்க. அதனால, வருஷம் முழுக்கவே நாங்க பானைகளை உற்பத்தி பண்ணிக்கிட்டே இருக்கோம். தைப் பொங்கல் வந்துட்டா... தமிழ்நாட்டுல சுங்கான்கடை பானைக்கு மவுசு வந்துடும்.தோவாளை பெரியகுளத்தில் இருந்து களிமண் எடுத்துட்டு வந்துதான் பானை செய்றோம். அந்த மண்ல செஞ்சா... பானை நல்லா உறுதியா இருக்கறதால நல்ல விலையும் கிடைக்குது. கால் கிலோ அளவான பொங்கல் பானை, சாதாரணமா 10 ரூபாய்க்கு விக்கும். பொங்கல் சமயத்துல 14 ரூபாய் வரை விக்கும். ஒரு கிலோ பானை... சாதாரண நேரங்கள்ல 25 ரூபாய்க்கும், பொங்கல் நேரத்துல 30 ரூபாய்க்கும் வித்துக்கிட்டிருக்கு.
இதுபோக மீன் சட்டி, பூந்தொட்டி, தண்ணீர்ப் பானை, கலைப் பொருட்கள்னு நிறைய தயார் பண்றோம். முன்ன, மாட்டு வண்டிச் சக்கரத்தை சுத்தி செய்வோம். இப்போ எல்லாரும் மோட்டாருக்கு மாறிட்டோம். அதனால குறைவான நேரத்துல அதிகமா உற்பத்தி பண்ண முடியுது'' என்று சொன்னார்.     

அடுத்து நம்மிடம் பேசிய வேணு, ''படிக்க வசதியில்லாம, சின்ன வயசுலயே பானை செய்ற வேலைக்கு வந்துட்டேன். இன்னிக்கு என் குடும்ப பாரத்தையே இந்தப் பானைதான் சுமக்குது. எங்க கூட்டுறவுச் சங்கத்து மூலமா, மாசத்துக்கு 50 லாரி லோடு அளவுக்கு பானைகளை அனுப்பிட்டு இருக்கோம்'' என்றபடியே சுற்றிக் கொண்டிருக்கும் சக்கரத்தில் வண்டல் மண், களிமண் சேர்ந்தக் கலவையை வைத்து லாவகமாக கைகளை மேலும் கீழுமாக மாற்றி மாற்றி பிடிக்க... சில வினாடிகளில் உருவாகி நின்றது அழகியப் பானையன்று!
இப்படி உருவாகும் பானைகளை, நான்கு மணி நேரம் வெயிலில் காயவைத்து 'காவி’ அடித்து, மீண்டும் மூன்று நாட்கள் காய வைத்து எடுத்து வைக்கிறார்கள். 35 நாட்கள் கழித்து மொத்தப் பானைகளையும் நான்கு மணி நேரம் சூளையில் வைத்து எடுத்தால்... திடமானப் பானைகள் தயார். 

'பொன்மலை திருமலை மண்பாண்ட கூட்டுறவுச் சங்கம்’ சங்கத்தின் உதவிச் செயலாளர் கிரீனா ராணி, ''82-ம் வருஷம் ஆரம்பிச்சது இந்தச் சங்கம். இப்ப 155 உறுப்பினர்கள் இருக்காங்க. இந்த ஊர்ல சில்லறையாவும் நிறைய பேர் பானை விற்பனை பண்றாங்க. கூட்டுறவுச் சங்கம் மூலமா கொள்முதல் பண்ணியும் விற்பனை பண்றோம். சங்கத்துல உறுப்பினரா இருக்கறவங்களுக்கு விற்பனை வாய்பு உறுதியா இருக்கு. அதனால, எல்லா பகுதிகள்லயும் இதுமாதிரி சங்கம் ஆரம்பிச்சா... இந்தத் தொழில்ல இருக்குறவங்க, பொருளாதார ரீதியா முன்னுக்கு வர்றதுக்கு வாய்ப்பு கிடைக்கும்' என்று சொன்னார்.
தொடர்புக்கு
விஸ்வம், செல்போன்: 90471-92757

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites