இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, May 17, 2012

இம்சையே இல்லா வருவாய்க்கு இலவு மரம்

வானம் பார்த்த பூமியாகிப் போச்சு.. அதனால் ஏதாவது மரத்தை நட்டு விடலாம் என்று இருக்கிறேன்.
மரத்தை நடுவதோடு நம்ம வேலை முடியனும். அதற்குப் பிறகு நமக்கு எந்த வேலையும் இருக்கக் கூடாது. ஆனால்.. வருடா வருடம் வருமானம் வந்துகிட்டே இருக்கணும். இப்படியெல்லாம் கணக்குப் போடும் விவசாயியா நீங்கள்..? உங்களுக்கு சரியான மரப்பயிர் இலவு மரம்தான்.
இலவு மரங்கள் அனைத்து மண்ணிலும் சிறப்பாக வளரும். கடும் வறட்சியையும் தாங்கி  வளரும் தன்மையுடையது. இதில் நாட்டு ரகம், சிங்கப்பூர் ரகம் என இரண்டு வகைகள்தான் தமிழகத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. நாட்டு ரகம் மிக உயரமாக வளர்வதால், அறுவடை செய்வதில் கொஞ்சம் சிரமம் இருக்கும். சிங்கப்பூர் ரகம் கிடை மட்டத்திலேயே படர்ந்து வளர்வதால், அறுவடை செய்வது சுலபமாக இருக்கும். எந்த ரகமாக இருந்தாலும், நான்கு முதல் ஐந்து மாத வயதுள்ள கன்றுகளைத் தேர்ந்தெடுத்து நடவு செய்வது நல்லது.

மழைக் காலங்களில் நடவு!

தண்ணீர் வசதியுள்ள பகுதிகளில் வருடம் முழுவதும் நடவு செய்யலாம். தரிசு மற்றும் மானாவாரி நிலங்களில் மழைக் காலங்களில் நடவு செய்ய வேண்டும். 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் மூன்று கன அடி அளவில் குழியெடுக்க வேண்டும். ஏக்கருக்கு 200 குழிகள் வரை எடுக்கலாம். ஒவ்வொரு குழியிலும் 1 கிலோ மண்புழு உரம், 30 கிராம் வேர் வளர்ச்சி உட்பூஞ்சணம் (வேம்), 1 கிலோ தொழுவுரம், 15 கிராம் அசோஸ்பைரில்லம், 15 கிராம் பாஸ்போ – பாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து இட்டு அதன் பிறகு கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

மழைநீரைச் சேகரிக்க வட்டப்பாத்தி

தண்ணீர் வசதியுள்ள இடங்களில் நடவு செய்த முதல் வருடத்தில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதும். அதன் பிறகு மரத்தைக் காயவிடாமல் தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. தரிசு மற்றும் மானாவாரி நிலங்களில் ஒவ்வொரு  கன்றைச் சுற்றியும் 10 அடி சுற்றளவில், ஒரு அடி உயரத்தில் வட்ட வடிவில் கரை அமைக்க வேண்டும். இவ்வாறு அமைக்கப்படும் கரை மூலமாக ஒவ்வொரு மழையின் போதும் 1,400 லிட்டர் வரை தண்ணீர் சேகரமாகும். டிசம்பர் – ஜனவரி மாதங்களில் செடிகளைச் சுற்றியுள்ள களைகளை நீக்கி மண்ணைக் கொத்தி விட வேண்டும்.

400 முதல் 500 காய்கள்

நடவு செய்த மூன்றாம் ஆண்டில் காய்க்கத் தொடங்கும். அது  வரையிலும் நிலக்கடலை, பீன்ஸ், தக்காளி போன்ற பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் பூக்கத் தொடங்கி. ஜனவரி-பிப்ரவரி  மாதங்களில் சிறு பிஞ்சுகளாகி, மார்ச் – ஏப்ரல் மாதங்களில் காய்கள் கிடைக்கும். நடவு செய்த 4-ம் ஆண்டில் ஒரு மரத்திலிருந்து 100 முதல் 200 காய்கள் வரை கிடைக்கும். 5-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 400 முதல் 500 காய்கள் வரை கிடைக்கும். நன்கு முற்றியக் காய்களை வெடிப்பதற்குள் பறித்துவிட வேண்டும்.

விறகுக்கு விற்றாலும், 5 லட்ச ரூபாய்!

ஒரு காயிலிருந்து கிடைக்கும் பஞ்சுக்கு இன்றைய சந்தை நிலவரப்படி 50 பைசா விலை கிடைக்கும். அதன்படி பார்த்தால், ஒரு மரத்திலிருந்து 400 காய்கள் மூலம் ஆண்டுக்கு 200 ரூபாய் கிடைக்கும். ஒரு ஏக்கரில் உள்ள 200 மரங்களிலிருந்து ஆண்டுக்கு 40,000 ரூபாய் வரை வருமானமாகக் கிடைக்கும். அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை மகசூல் எடுக்கலாம். அதன்பிறகு, முதிர்ந்த மரங்களை விறகுக்காக வெட்டி விற்கலாம். தற்போதைய நிலவரப்படி ஒரு டன் மரம் 2,500 ரூபாய் விலை போகிறது. ஒரு மரம் குறைந்தபட்சம் ஒரு டன் எடை என்று வைத்துக் கொண்டாலும் ஒரு ஏக்கரில் இருந்து, 5 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். உங்களிடம் இலவு மரம் இருப்பதாகத் தெரிந்தால், வியாபாரிகளே நேரடியாக வந்து காய்களுக்கு முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்து கொள்வார்கள்.

கேட்க பிரமிப்பாக இருக்கிறது. ஆனால், எந்த அளவுக்கு இது நிஜம்?

தேனி மாவட்டம், போடி நாயக்கனூர், குட்டிபுரம் கிராமத்தில் ஐந்து ஏக்கரில் இறவைப் பாசனத்தில் இலவு மரத்தை சாகுபடி செய்திருக்கும் செல்வராஜிடம் இருக்கிறது. இதற்கான பதில்!
இந்தப் பகுதியில் இலவு சாகுபடி சக்கைப்போடு போடுது! நான் ஐந்து ஏக்கரில் இறவையில் இலவ மரத்தை நட்டிருக்கேன். 16 அடிக்கு 16 அடி இடைவெளயில் ஏக்கருக்கு 170 மரம் இருக்கு. இரண்டு வயது மரத்திலிருந்து 5 வயது மரம் வரைக்கும் வயது வாரியான மரங்கள் என் வயலில் இருக்கு. சிங்கப்பூர், நாடு .. இரண்டு ரகத்தையும் நட்டிருக்கேன். நடவுக்குப் பிறகு எந்த பண்டுதமும் தேவையில்லை. நம்ம சவுகரியத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக்கலாம்.

அறுவடை அவஸ்தையும் இல்லை!

நடவு செய்த இரண்டு மூன்று வருடத்திற்கு கன்னிக் காய்ப்பு வரும். அதில் பெரிதாக மகசூல் கிடைக்காது. நான்காவது வருடத்திலிருந்து மரத்திற்கு 500 காய்கள் வரைக்கும் கிடைக்கும். என் தோட்டத்தில் 5 வயதான மரங்களில் 500 காய்களுக்கு மேலேயே காய்க்கிறது. சில மரங்களில் 1,000 காய்கள் கூட காய்க்கிறது. நாம மரத்தை வளர்த்தால் மட்டும் போதும்.. அறுவடை வேலை கூட இல்லை. வியாபாரிகளே அதை செய்துக்குவாங்க.

ஏக்கருக்கு 85,000 ரூபாய்!

என் தோட்டத்தில் இருக்கும் மரங்களோட வயதைப் பொருத்து ஒரு மரம் 200 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரைக்கும் குத்தகைக்கு விட்டிருக்கிறேன். ஒரு மரம் 200 ரூபாய் என்றால் ஒரு ஏக்கரில் இருக்கும் 170 மரத்திற்கும் மொத்தம் 34,000 ஆயிரம் வருடத்திற்கு கிடைக்கிறது. தென்னை மரத்திற்கு ஈடாக வருமானம் கொடுக்கிறது.

இறவையில் சரி மானாவாரிக்கு எப்படி என்கிறீர்களா?

இந்தக் கேள்விக்கு .. திண்டுக்கல் மாவட்டம், வெள்ளோடு கிராமம் சுப்புராஜின் அனுபவமே பதில் சொல்லும்

காயாமல் காப்பாற்றும் கரை!

நான் 2005-ம் வருடம் 5 ஏக்கர் கரிசக் காட்டில் இலவஞ்செடியை நட்டேன். 20 அடிக்கு 20 அடி இடைவெளியில் ஏக்கருக்கு 100 கன்னுகள் வரைக்கும் இப்ப இருக்கு. ஒவ்வொரு மரத்தை சுத்தியும் நல்லா வட்டமாக குழி எடுத்து வைத்திருக்கிறேன்.  10 மரததிற்கு ஒரு பாத்தி கணக்கில் அங்கங்க பெரிய சைஸ் பாத்தி மாதிரி எடுத்து, உயரமாக கரையும் போட்டிருக்கிறேன். இதனால் ஒர பாத்தயில் விழற மழைத் தண்ணீர், அடுத்தப் பாத்திக்குப் போகாது. இந்த தண்ணியிலேயே மரம் வளர்ந்துவிடும். நடவு செய்ததிலிருந்து இதுவரைக்கும் மழைத் தண்ணீரியை வைத்துதான் மரம் இவ்வளவு செழிப்பாக வளர்ந்திருக்கு.

வருடத்திற்க்கு ஒர தடவை உழவு போட்டு பாத்தியை பலப்படுத்தி வைத்துக்கிட்டால்.. காடு சுத்தமாக இருக்கும். நடவு செய்த 3-ம் வருடம் பரவலாக காய் பிடிக்கும். அதற்குப் பிறகு, வருடா வருடம் காய்ப்பு அதிகமாயிட்டே இருக்கும் குறைந்தபட்சம் ஒரு மரம் 100 ரூபாய்க்கு காய்த்தால் கூட ஒரு ஏக்கரில் இருக்கும் 100 மரங்க மூலமாக 10 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். மரத்தைக் குத்தகைக்கு விடாமல், நானே காய்களை எடுத்துடுவேன். அவைகளை தட்டி பஞ்சு எடுத்து விற்றுவிடுவேன். இன்றைய நிலவரத்திற்க்கு ஒரு கிலோ பஞ்சு 65 ரூபாய்க்கு போகிறது. வானம் பார்த்த பூமி வைத்திருக்கிற சம்சாரிகளுக்கு இம்சையில்லாத வருமானம் கொடுக்கிறத இலவு.

கன்றுகள் இலவசம்!

செல்வராஜ் மற்றும் சுப்புராஜ் இருவரின் விளக்கங்களே போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போது இலவு மரம் நடவு செய்வதற்கு நீங்கள் முடிவெடுத்து விட்டால்.. உங்கள் மாவட்டத்திலிருக்கும் வன விரிவாக்க மையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கரில் நடுவதற்காக 1,000 கன்றுகள் வரைக்கும் இலவசமாகவே கிடைக்கும். இது போக ஏக்கருக்கு 200 ரூபாய் மானியமும் உண்டு. மானாவாரி நிலத்தில் நடவு செய்பவர்களுக்கு இதுதான் சரியான தருணம். தாமதிக்காமல் செயலில் இறங்குங்கள்!

தொடர்புக்கு
செல்வராஜ், அலைபேசி் 73735 – 89020
சுப்புராஜ், அலைபேசி : 99445 – 92378
ஆதாரம் : www.vikatan.com பசுமை விகடன் வெளியிடான தேதி, 25.7.11

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites