விரட்டி அடிக்கும் வறுமை... கதற வைக்கும் கந்துவட்டி... என தினம் தினம் சுனாமியில் சிக்கிய
கந்து வட்டியை விரட்டிய 'களஞ்சியம்'
ஆர்.குமரேசன், படங்கள் : வீ.சிவக்குமார்
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ளது விராலிபட்டி மற்றும் வடகாட்டுப் பட்டி கிராமங்கள். விவசாயமும் அதைச் சார்ந்த வேலைகளும்தான் இந்த மக்களின் வாழ்வாதாரம்.
விரட்டி அடிக்கும் வறுமை... கதற வைக்கும் கந்துவட்டி... என தினம் தினம் சுனாமியில் சிக்கிய படகாக ஒரு காலத்தில் வாழ்க்கையை நகர்த்தவே அல்லாடிய இந்தக் கிராமத்துப் பெண்கள், இன்றைக்கு தன்னம்பிக்கையோடு தலைநிமிர்ந்து நிற்பதுடன், மாதம் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள்... 'மகளிர்சுய உதவிக்குழு' எனும் மகத்தான சக்தி யால்!
தனித்தனியாக சிதறிக்கிடந்த பெண்களை குழுவாக ஒருங்கிணைத்தது, 'களஞ்சியம்’ அமைப்பு. கூலி வேலைக்குச் சென்று கால் வயிறு கஞ்சி குடித்துக் கொண்டிருந்தவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வசதியை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், பால் பண்ணை தொழிலையும் அமைத்துக் கொடுத்தது. பால் பண்ணையை முழுக்க முழுக்க இந்த பெண்களே நிர்வகிப்பதால், கிடைக்கும் வருமானம் முழுவதும் இவர்கள் கையிலேயே சேர்கிறது. அது அவர்களின் வாழ்க் கையிலும் மகிழ்ச்சியைப் பொங்க வைத்துள்ளது.
சாணார்பட்டி வட்டார 'களஞ்சியம்’ பெண் கள் அமைப்பின் தலைவி 'வடகாட்டுப்பட்டி' ஆரோக்கியமேரி, ''எங்களுக்கு சொந்தமா ரெண்டு ஏக்கர் தோட்டம் இருந்தாலும், சரியான விளைச்சல் இல்லாம கஷ்டப்பட்டோம். கூலி வேலைக்கு போயித்தான் வயித்தைக் கழுவிட்டு இருந்தோம். அவசர ஆத்திரத்துக்கு, ஆஸ்பத்திரி செலவுக்குக் கடன் கேட்டாலும், எங்களை நம்பி யாரும் காசு கொடுக்க மாட்டாங்க. வேற வழி யில்லாம கந்து வட்டிக்கு வாங்கித்தான் வண்டியை ஓட்டுவோம். அந்தக் கடனை கட்டுறதுக்குள்ள அடுத்த அவசரம் வந்துடும். இப்படி வட்டிக்கும் வாழ்க்கைக்கும் நடுவுல போராடிப் போராடியே ஓய்ஞ்சுகிட்டிருந்தோம்.
இந்த நிலையிலதான் 'களஞ்சியம்’ அமைப்பைச் சேர்ந்தவங்க எங்க ஊருக்கு வந்து, பொருளாதார முன்னேற்றத்துக்கான பயிற்சி வகுப்புகள நடத்தினாங்க. இந்தப் பக்கம் மேய்ச்சல் நிலங்கள் அதிகமா இருந்ததாலயும்... பெரும்பாலானவங் களுக்கு கொஞ்சம் நிலம் இருந்ததாலயும்... மாடுகளை வாங்கி பால் பண்ணை நடத்தச் சொன்னாங்க. கிராமத்துப் பெண்கள் குழுவா ஒண்ணு சேந்தோம். எங்களுக்கு மாடுகளை வாங்கிக் கொடுத்தாங்க. கூலி வேலைக்குப் போயிகிட்டே, மாடுகளையும் பாத்துக்க ஆரம்பிச் சோம்'' என்று அவர் நிறுத்த, தொடர்ந்தார் விராலிபட்டி கிளையின் பொருளாளர் சக்திவேல். ''தீவனம் வாங்கறதுல இருந்து கணக்கு வழக்கு வரை பால் வியாபாரத்தோட எல்லா நுணுக்கங் களையும் படிப்படியா பழகிக்கிட்டோம். இப்போ எங்க குழுக்கள் மூலமா கிட்டத்தட்ட 400 லிட்டர் பால் உற்பத்தி பண்றோம். உள்ளூர் பால் வியாபாரிகள் பலரும் அளவுலயும் ஏதாச்சும் தில்லுமுல்லு பண்ணிடுவாங்க. கூடுதலா 200 மில்லியை சேர்த்தே அளந்துக் குவாங்க. அதே நேரத்துல பாலுக்கான பணத்தை யும் ஒழுங்கா பட்டுவாடா செய்யமாட்டாங்க. ஆனா, 'களஞ்சியம்’ அமைப்பு மூலமா பால் கொள்முதல் செய்றதால, சரியான அளவுல பாலை அளப்பாங்க. கூடுதலாவும் பணம் கொடுப்பாங்க (உள்ளூர் வியாபாரிகள் 15 ரூபாய்... களஞ்சியம் தருவது 16 ரூபாய்).
ஒரு மாசத்துக்குத் தேவையான தீவனத்தையும் முன்கூட்டியே கொடுத்துடுவாங்க. பால் பணம் வந்த தும், அதுக்கான பணத்தைக் கொடுத்தா போதும். கொஞ்ச நாளைக்கு முன்ன வரைக்கும் மெஷின் வெச்சுதான் பால் கறந்துட்டு இருந்தோம். அடிக் கடி கரன்ட் இல்லாம போறதால, ஆள் வெச்சுக் கறக்குறோம்.
கறக்குற பாலை பொதுவான ஒரு இடத்துல கொண்டு வந்து வெச்சுடுவோம். 'களஞ்சியம்’ வண்டி வந்து பாலை எடுத்துட்டுப் போயிடும். தினப்படி ஊத்தற பாலுக்கு அப்பப்பவே பணத்தைக் கொடுத்துடுவாங்க. பால் மூலமா களஞ்சியத்துக்கு கிடைக்கற வருமானத்துல வண்டி வாடகை, கறவை ஆள் சம்பளம் மாதிரியான செலவுகள் போக, மீதிப் பணத்தை லிட்டருக்கு 30 பைசா வீதம் கணக்குப் போட்டு வருஷத்துக்கு ஒரு தடவை எங்களுக்குப் பிரிச்சுக் கொடுப்பாங்க. ஒளிவு மறைவு இல்லாம எங்க தொழில் நடக்குது''
- அத்தனை தெளிவாகப் பேசினார் அந்தக் கிராமத்துப் பெண்.
தொடர்ந்த ஆரோக்கியமேரி, ''இன்னிக்கு நாலு பால் மாட்டுக்குச் சொந்தக்காரி நான். பால் ஊத்தி வந்த காசுல ஒவ்வொரு மாடா சேர்த்து இன்னிக்கு நாலு மாடு வெச்சுருக்கேன். அதுக மாசம் 14 ஆயிரத்துக்கு பால் கறக்குது. தீவனம் உள்பட எல்லாச் செலவும் போக 10 ஆயிரம் ரூபா சொளையா கையில கிடைக்குது. எங்க உறுப் பினர்கள் எல்லாரோட அனுபவமும் இது தான். மாடுகளோட எண்ணிக்கையைப் பொறுத்து ஒவ் வொருத்தரும் மாசம் 3 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் வரைக்கும் சம்பாதிக்கறாங்க'' என்றார்.
களஞ்சியம் அமைப்பின் திண்டுக்கல் மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவானந்தம், ''பால் பண்ணை லாபகரமான ஒரு தொழில். ஆனால், இதிலும் இடைத்தரகர்களான உள்ளூர் வியாபாரிகள் மூலமாக, உற்பத்தியாளர்கள் சுரண்டப்படுகிறார்கள். இதைத் தடுத்து சரியான அளவு, தரம், நியாயமான விலை ஆகியவை கிடைக்கச் செய்வதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் கிராமப்புற பெண்கள் பொருளாதார மேம்பாடு அடைகிறார்கள். குழுக்கள் மூலமாக பெறப்படும் பால் 'ஆனந்தம்’ என்கிற பெயரில் பாக்கெட் போடப்பட்டு 'களஞ்சியம்’ மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. அதில் கிடைக்கும் லாபம் மாடுகளுக்கான மருத்துவம், பராமரிப்பு, புதிய குழுக்களுக்கான உதவி என மக்களுக்கே சென்று சேர்கிறது. சுருக்கமாகச் சொன்னால் மக்களால் மக்களுக்காக செயல்படும் திட்டம் இது!'' என் றார்.
''பொழைக்க வழி தெரியாம இருட்டுக்குள்ள நின்ன எங்களை கை பிடிச்சு இவ்வளவு தூரம் கூட்டிக்கிட்டு வந்தது 'களஞ்சியம்’தான். இப்ப நாங்க யாரும் கந்து வட்டிக்கு கடன் வாங்கிறது இல்லை. எங்க வாழ்க்கைத் தரமும் உசந்திருக்கு!'' என்றார் உறுப்பினர்களில் ஒருவரான விராலி பட்டி மீனாட்சி நெகிழ்ச்சியாக!
thanks vikatan +sharmini dublin
Thnxs:http://nermai-endrum.blogspot.com/2012/01/blog-post_1496.html
0 comments:
Post a Comment