இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, May 22, 2012

மொட்டைமாடியில் தோட்டம்

'ஏக்கர் கணக்கில் நிலம், பாசனத்துக்குக் கிணறு, கால்நடைகள்... என இருந்தால் மட்டும்தான், விவசாயம் சாத்தியம்’ என்றுதான் பலரும் நினைக்கிறோம்.
அதனால்தான் ஆரம்பத்திலிருந்தே நகரத்தில் வாழ்பவர்கள்; கிராமங்களில் இருந்து நகர வாழ்க்கைக்கு நகர்ந்தவர்கள்; கிராமத்திலேயே நகரத்தைப் போன்ற வாழ்க்கையைப் பழகிக் கொண்டவர்கள் என்று பலருக்கும் விவசாயம் ஒரு கனவாகவே கடந்து விடுகிறது. ஆனாலும், மொட்டை மாடியையே தோட்டமாக்கி விவசாயக் கனவை நனவாக்கிக் கொள்பவர்களும் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான், ஷிஜி.
கிராமத்தில்தான் வசிக்கிறார் ஷிஜி. என்றாலும், இவருக்குச் சொந்தமாகவோ, வீட்டைச் சுற்றியோ... நிலம் கிடையாது. தவிர, கிராமம் முழுக்க ரப்பர் சாகுபடிதான் பிரதானம் என்பதால்... மொட்டைமாடியில் தோட்டம் போட்டு வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்து, இயற்கைப் பாசத்தை பலருக்கும் காட்டிக் கொண்டிருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் நகரத்திலிருந்து அருமனை செல்லும் சாலையில், ஐந்தாவது கிலோ மீட்டரில் இருக்கும் மேல்புறம் கிராமத்தில்தான் இருக்கிறது, ஷிஜியின் வீடு. காலைவேளையில் இவரை நாம் சந்திக்கச் சென்றபோது, மொட்டைமாடியில் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார், ஷிஜி. அவருக்கு உதவியாக மகன் அபி.
மலையாளம் கலந்த தமிழில் உற்சாகமாகவே பேச்சைத் துவங்கிய ஷிஜி, ''என் கணவர் அணில்குமார், பில்டிங் கான்ட்ராக்டர். நான் வீட்டுலயே டெய்லரிங் ஷாப் வெச்சுருக்கேன்.
எங்களுக்கு விவசாய நிலம் இல்லை. முன்னாடி, சந்தையில்தான் காய்கறிகளை வாங்கிட்டிருந்தோம். என் கணவர், 'இந்த காய்கறிங்க ரசாயன உரத்துல விளைஞ்சது. உடலுக்குக் கேடுதான் வரும்’னு அடிக்கடி ஆதங்கப்படுவார். அதனாலதான், 'நாமளே நமக்குத் தேவையான காய்கறிகளை இயற்கை முறையில் சாகுபடி செய்தா என்னா?’னு தோணுச்சு. அதுக்கப்பறம்தான் மொட்டைமாடியில தோட்டம் போட்டேன். அஞ்சு வருஷமா இந்தத் தோட்டம்தான் எங்களுக்கு காய்கறிகளைக் கொடுத்துட்டிருக்கு'' என்று பெருமையோடு சொன்னவர், மொட்டைமாடி விவசாய அனுபவங்களை எடுத்து வைத்தார்.
காய்கறி முதல் கீரை வரை!
''எங்க மாடியோட பரப்பளவு 900 சதுரடி. முட்டைகோஸ், காலிஃப்ளவர், தக்காளி, பயறு வகைகள், முள்ளங்கி, மல்லி, கத்திரிக்காய், வழுதலங்காய், சின்னவெங்காயம், கிழங்கு வகைகள், கீரை வகைகள்னு எல்லாமே இங்க விளையுது. மொட்டைமாடியில் காய்கறித் தோட்டம் போட்டா, தண்ணி இறங்கி கட்டிடத்துக்கு பாதிப்பு வந்துடும்னு நிறைய பேர் சொன்னாங்க. அதனால, நான்கடி இடைவெளியில் ஹாலோ பிளாக் கற்களை அடுக்கி அதுக்கு மேல பலகைகளை வெச்சு அது மேலதான் தொட்டியில் செடிகளை வச்சுருக்கேன். கல்லுக்குப் பதிலா கொட்டாங்குச்சிகளை வரிசையா அடுக்கி வெச்சும் பலகைகளைப் போட்டுருக்கேன்.
மண்தான் பிரதானம்!
வீட்டுத் தோட்டத்தில் கவனிக்க வேண்டிய விஷயமே மண்தான். கண்ட இடத்துல மண்ணை அள்ளிட்டு வந்து போடக்கூடாது. நான் செம்மண்ணும், மணலும் கலந்த கலவையோடு எலும்புத் தூள், சுண்ணாம்புத்தூள், வேப்பம்பிண்ணாக்கு எல்லாத்தையும் கலந்து தொட்டியில் போட்டிருக்கதால நல்ல இயற்கை உரமா இருக்கு. எங்க ஊரு சந்தையில் இருக்குற கடையிலேயே விதைகள் கிடைக்குது.
ஒவ்வொரு விதைக்கும் ஒவ்வொரு விதம்!
ஒவ்வொரு விதையையும் விதைக்கறதுக்கு சில வழிமுறைகள் இருக்கு. வெண்டை விதையை வெள்ளைத் துணியில் கட்டி அரை மணி நேரம் தண்ணியில ஊற வெச்சு எடுத்து, அப்படியே மூணு நாள் வெச்சுட்டா முளை விட்டுடும். அதைத்தான் தொட்டியில விதைக்கணும். காலை நேரத்துலதான் கீரை விதைகளை விதைக்கணும். முட்டைக்கோஸ் பயிர்ல வாழை மாதிரியே பக்கக்கன்னு வரும். மூணு மாசத்துல முட்டைக்கோஸ் அறுவடை முடிஞ்சதும், அதே இடத்துல பக்கக்கன்னை வளர விடாம வேற இடத்துல புது மண் மாத்தி நடவு செய்யணும். அப்பத்தான் நல்ல மகசூல் கிடைக்கும். இப்படிச் சின்ன சின்ன விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டா போதும்... மாடித் தோட்டத்துல மகசூலை அள்ளிடலாம்'' என்ற ஷிஜி பராமரிப்பு முறைகள் பற்றியும் பகிர்ந்தார்.
வாரம் ஒரு முறை தொழுவுரம்!
''பக்கத்து வீட்டுல மாடு வளக்குறாங்க. அவங்ககிட்ட தொழுவுரம் வாங்கி, ஒவ்வொரு தொட்டிக்கும் வாரத்துக்கு ஒரு தடவை ஒரு கையளவு தொழுவுரம் போடுவேன்.
வீட்டுல அடிக்கடி மீன் சாப்பிடுவோம். அதனால, தலை, வால்னு மீன்கழிவுகள் தாராளமாக் கிடைக்கும். அந்தக் கழிவுகளையும் ஒவ்வொரு தொட்டியிலயும் கையளவு போட்டு மூடி வெச்சுடுவேன். அதே மாதிரி முட்டை ஓடுகளையும் போடுவேன். அதனால காய்கறிச் செடிகள் வஞ்சனையில்லாமக் காய்க்குது'' என்ற ஷிஜி நிறைவாக,
''எங்க வீட்டுக்குக் காய்கறிகளை விலை கொடுத்து வாங்கி வருஷக் கணக்காகுது. தினமும் சாயங்காலம் மாடியில ஒரு சுத்து வந்து செடிகளைப் பாத்தா... அன்னிக்கு இருந்த டென்ஷன் எல்லாம் காணாம போயிடும்.
இயற்கை முறையில விளையறதால உடம்புக்கும் கெடுதல் இல்லை. மொத்தத்துல எங்க உடம்பையும் மனசையும் இந்த மாடித்தோட்டம்தான் ஆரோக்கியமா வெச்சுக்கிட்டிருக்கு'' என்றபடி சந்தோஷமாக விடை கொடுத்தார்.
தொடர்புக்கு, ஷிஜி,
செல்போன்: 77087-81763

2 comments:

IT'S VERY NICE, I LIKE VERY MUCH,I'M ALL SO WANT TO DO THIS,THANK YOU

தாங்கள் வருகைக்கு நன்றி

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites