இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, December 11, 2013

தொக்கு வாங்கலையோ தொக்கு -வாழைப் பூ தொக்கு!


வழக்கமான ஊறுகாய், மெழுகுவர்த்தி, பத்திக் குச்சிகள் தயாரிப்பிலிருந்து வித்தியாசமாக, வாழைப்பூ தொக்கு தயாரிக்கிறது திருச்சி அருகேயுள்ள மகளிர் சுய உதவிக் குழு.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகேயுள்ள திருநாராயணபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீவேதா மகளிர் சுய உதவிக் குழு மேற்கொண்டு வரும் இந்தத் தொக்கு திருச்சி மட்டுமல்ல, நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களிலும் பிரபலமாகி வருகிறது.
முசிறி, தொட்டியம் பகுதிகள் வாழை
சாகுபடி நடைபெறும் பகுதிகள். எனவே, இங்கு கிடைக்கும் பொருள்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருள் தயாரிப்பு என்ற கருத்து இந்தக் குழுவுக்கு ஊட்டப்பட்டிருக்கிறது.
இயல்பாகவே வாழைப்பூவில்
விட்டமின் ஏ, கே மற்றும் இரும்புச் சத்து இருக்கிறது. ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும், சிறுநீரகக் கல்களைக் கரைக்கும், கொழுப்பைக் குறைக்கும், ரத்த அழுத்தம் குறையும் போன்ற விஷயங்கள் வாழைப்பூ தொக்கு தயாரிக்க உத்வேகத்தைக் கொடுத்திருக்கின்றன.
இதன்படி, இப்பகுதியில் பணியாற்றி வரும் "கிராமாலயா' தொண்டு நிறுவனத்தின் முயற்சியில்தான் இப்போது வாழைப்பூ தொக்கு பிரபலமாகி இருக்கிறது. இந்த "ஸ்ரீ வேதா' சுய உதவிக்குழுவின் பிரதிநிதி பி. கோமதி கூறியது:
""தொடக்கத்தில் தொக்கு தயாரித்து குழுவிலுள்ள 12 பேரும், இருவர் இருவராக அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று வீடுவீடாக விற்பனை செய்தோம். உள்ளூரில் கிடைக்கும் விவசாய விளைபொருளில் இருந்து இப்படியொரு வித்தியாசமான உணவுப் பொருளைக் கண்டு பலரும் வியந்தனர்'' என்றார்.
""நாங்களும் ஆடு, மாடு கடன்தான் வாங்கினோம். பிறகுதான், வல்லத்திலுள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் போன்றவற்றின் பயிற்சியால் வாழைப்பூ தொக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டோம்'' என்கிறார் குழுவின் ஊக்குநர் எஸ். கண்ணகி.
வாழைப் பூவை அதன் நடுவிலுள்ள நரம்பு நீக்கிவிட்டு, கொப்பறையில் கொட்டி வேக வைக்கின்றனர். அதன்பிறகு, மிக்ஸியில் போட்டு அரைத்த பிறகு, காரம், புளிப்பு, எண்ணெய் சேர்த்து தொக்கு தயாராகிறது.
சோற்றில் பிசைந்து சாப்பிடலாம், இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். கெட்டுப் போகாமல் இருக்க "எதையாவது' ஊற்றி பாட்டில்களில் அடைக்கலாம் என்ற வழிகாட்டுதல்கள் இருந்தாலும், இவர்கள் முற்றிலும் புளியையே நம்புகிறார்கள். ஆறு மாதங்கள் கெடாமல் இருக்கும் என்றும் உத்தரவாதம் தருகிறார்கள்.
திருச்சியில் அண்மையில் நடைபெற்ற மாநில கூட்டுறவு வார விழாவில் வாழைப்பூ தொக்கு வைத்திருந்த அரங்கில் மட்டும் கூட்டம் அதிகமாக இருந்து, கொண்டு வந்த பாட்டில்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்திருக்கின்றன.
நேரடியாக மகளிர் சுய உதவிக் குழுவே ஈடுபட்டு, உண்மையான மகளிர் தொழில் முனைவோருக்கான தன்மையுடன் எளிமையாக செயல்பட்டு வரும் தொக்கு தயாரிக்கும் பணி பாராட்டத்தக்கதே!

5 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites