ஒயரில் கூடைகள் மட்டுமே பின்னியது அந்தக் காலம். ‘மேக்ரமி’ என்கிற புதுவிதமான ஒயரில் கைப்பைகள் மட்டுமின்றி, குட்டிக் குட்டி உருவங்கள், பூக்கள், பெட்டிகள் என எல்லாம் செய்யலாம். நவராத்திரிக்கு வீட்டுக்கு வருவோருக்கு உபயோகமாக ஏதேனும் அன்பளிப்பு கொடுக்க வேண்டும் என நினைப்போர், மேக்ரமி ஒயர் கைவினைப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கலாம். இந்தக் கலையில் நிபுணி, சென்னையைச் சேர்ந்த ராஜேஸ்வரி.
‘‘வட இந்தியாவுலயும் கர்நாடகாவுலயும் மேக்ரமி ஒயர்ல பண்ற பொருட்கள் ரொம்பப் பிரபலம். அங்கேதான் இந்தக் கலையைக் கத்துக்கிட்டேன். அந்த அடிப்படை நுணுக்கங்களை வச்சு, மேக்ரமி ஒயர்லயே விதம் விதமான பொருட்கள் செய்யப் பழகினேன். மேக்ரமி ஒயர் அழுத்தமாகவும் கலர்ஃபுல்லாகவும் இருக்கும். அதுல எந்தப் பொருள் செய்தாலும் உறுதியா, ரொம்ப நாள் உழைக்கும். அழுக்கானாலும் வாஷ் செய்தா புதுசாகிடும்’’ என்பவர், மேக்ரமி ஒயரில் காரில் தொங்கவிடக் கூடிய மீன்கள், பூக்கள், குட்டி பொம்மைகள், செல்போன் பவுச், பர்ஸ், பென்சில் பாக்ஸ், பூ ஜாடி, தட்டு என எல்லாம் செய்கிறார்.
‘‘இந்த ஒயர்ல மெலிசானது, திக்கானதுன்னு ரெண்டு வெரைட்டி இருக்கு. நாம செய்யப் போற பொருளுக்கேத்தபடி ஒயரை தேர்ந்தெடுத்துக்கலாம். ஒரு பண்டில் ஒயரோட விலை 100 ரூபாய். அலுமினிய வளையம் தேவைப்படும். பொம்மைகளுக்கு கண், மூக்கெல்லாம் தனியா வாங்கணும். அலங்காரப் பொருட்களுக்கும் சேர்த்து மொத்த முதலீடு 1,000 ரூபாய் போதும். குட்டி பர்ஸ் 100 ரூபாய்க்கும், பெட்டிகளை 100 முதல் 125 ரூபாய்க்கும், கார்ல தொங்கவிடற பொம்மைகளை 300 ரூபாய்க்கும் கொடுக்கலாம்.
50 சதவிகிதம் லாபம். குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் நவராத்திரிக்கு வீட்டுக்கு வர்ற எல்லாருக்கும், அவங்கவங்க வயசு மற்றும் தேவைக்கேத்தபடி மேக்ரமி ஒயர் அன்பளிப்புகளை நாமே நம்ம கைப்பட செய்து கொடுக்கலாம்’’ என்கிற ராஜேஸ்வரி, 5 விதமான மேக்ரமி கைவினைப் பொருட்களை, 750 ரூபாய் கட்டணத்தில், 2 நாட்களில் கற்றுக் கொடுக்கக் காத்திருக்கிறார். செல் 99400 46990
0 comments:
Post a Comment