இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, December 11, 2013

சாலையோரம் சங்கீதம் பாடும் சோலை.


.. ஒன்றரை ஏக்கரில் தினமும் 2,500...

சென்னை-புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில், வழி நெடுக இருக்கும் அழகழகானப் பண்ணை வீடுகள், தங்கும் விடுதிகளுக்கு அடுத்தபடியாக அனைவரையும் கவர்வது, ராதாகிருஷ்ணனின் பண்ணையாகத்தான் இருக்கும். பசுமைக் குடில், விதவிதமானச் செடிகள், காய்கறிகள், பழங்கள் விற்பனையகம், சிற்றுண்டிச்சாலை... என அங்கு நிலவும் பசுமையானச் சூழல்தான் இந்த ஈர்ப்புக்குக் காரணம்.  
10.11.2012 தேதியிட்ட 'பசுமை விகடன்’ இதழில், 'மாடித் தோட்டத்தில் ஒரு மகத்தான மகசூல்!’ என்கிற கட்டுரை மூலம் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான் ராதாகிருஷ்ணன். சென்னையிலிருந்து செல்லும்போது மரக்காணத்துக்கு ஒன்பது கிலோமீட்டருக்கு முன் வருகிறது, கோட்டைக்காடு எனப்படும் கிராமம். இங்குதான் உள்ளது, ராதாகிருஷ்ணனின் பண்ணை.
''சொந்த ஊர் கேரள மாநிலம் ஆலப்புழா. வக்கீலுக்குப் படிச்சுட்டு, ஐ.ஆர்.எஸ். தேர்வு எழுதி கஸ்டம்ஸ் டிபார்ட்மென்ட்ல வேலைக்குச் சேந்தேன். வேலையில சில நெருக்கடிகள் காரணமா வி.ஆர்.எஸ். கொடுத்துட்டு, வக்கீல் வேலையைப் பாக்க ஆரம்பிச்சேன். சின்ன வயசுல இருந்தே காய்கறிகள் வளர்க்கறது, பூச்செடிகள் வளர்க்கறதுல கொஞ்சம் ஆர்வம் அதிகம். அதனால, ரெண்டு வருஷத்துக்கு முன்ன வீட்டு மொட்டை மாடியில காய்கறித் தோட்டம் போட்டேன்.
என் வீட்டுக்குத் தேவையானதைவிட அதிகமாவே காய்கள் கிடைச்சுது. அப்போதான் சென்னையில எல்லாருக்கும் இந்தத் தொழில்நுட்பத்தைச் சொல்லிக் கொடுக்கலாம்னு வீட்டுத் தோட்டப் பயிற்சியைக் கொடுக்க ஆரம்பிச்சேன். பலரும் தொட்டி, விதை, இயற்கை உரம்னு கேட்டு வர ஆரம்பிச்சாங்க. எல்லாருக்கும் இதையெல்லாம் வாங்கிக் கொடுக்க ஆரம்பிச்சேன்.
என்கிட்ட கத்துக்கிட்டவங்கள்ல நூறுபேருக்கும் அதிகமானவங்க சென்னை நகரத்துல மாடியிலேயே காய்கறி உற்பத்தி செய்றாங்க'' என்று முன்னுரை கொடுத்த ராதாகிருஷ்ணன், தொடர்ந்தார்.
காய்கறி முதல் காளான் வரை !
''குறைஞ்ச இடத்துல தொட்டிகள்ல காய்கறிச் செடிகளை வளர்க்கறதை செயல் முறையா காட்டுறதுக்காகதான்... 35 உறுப்பினர்களைக் கொண்ட 'குட் கவர்னன்ஸ் கார்ட்ஸ்’ அமைப்பு மூலமா இந்த இடத்தை குத்தகைக்குப் பிடிச்சு பண்ணையை ஆரம்பிச்சுருக்கோம். இந்த ரோடு எப்பவுமே 'பிஸி'யா இருக்கும். அதனாலதான் இங்க ஆரம்பிச்சோம்.
விதை, தொட்டி, உரம், காய்கறிகள், பழங்கள், காளான்னு எல்லாத்தையும் விற்பனை செய்றோம். நாங்களே நேரடியா விற்பனை செய்றதால, குறைஞ்ச விலைக்கே ஃபார்ம் ஃபிரஷ் காய்களைக் கொடுக்குறோம். இதில்லாம, காய்கறிச் செடிகள் வளர்ப்பு, காளான் வளர்ப்புனு பயிற்சிகளும் கொடுக்கிறோம்.    
காலி பாட்டிலிலும் காய்கறிச் செடி !
6 ஆயிரத்து 200 சதுர அடியில பசுமைக் குடில் அமைச்சுருக்கோம். அதுக்குள்ளதான், தொட்டிகள்ல கத்திரி, வெண்டை, மிளகாய், தக்காளி, காலிஃபிளவர், முட்டைகோஸ், பீன்ஸ், அவரைனு வளர்க்கிறோம். வேஸ்ட் வாட்டர் பாட்டில், கிரீஸ் டப்பாக்கள்லயும் சின்னச்சின்னச் செடிகளை வளக்குறோம்.
முருங்கை, வாழை, பப்பாளி மாதிரியான மர வகைகளை பிளாஸ்டிக் ட்ரம்ல வளக்குறோம். பி.வி.சி. பைப்புகளை நட்டு வெச்சு, அதுல கயிறு கட்டி கொடி வகைகளைப் படர விட்டுருக்கோம். பழையவாட்டர் பாட்டில்ல சின்னதா துளை போட்டு அதுல துணி நாடாவைக் கட்டி தொட்டிக்குள்ள புதைச்சுடுவோம். இந்த நாடா மூலமா தண்ணி கொஞ்சம் கொஞ்சமா இறங்கிக்கும். பூச்சிகளை விரட்டறதுக்கு வேப்பெண்ணெய் கலந்த பூச்சி விரட்டிகளைத் தெளிக்கிறோம். கீற்றுக்கொட்டகைக்குள்ள காளான் வளக்குறோம். அதை ஒரு கிலோ 175 ரூபாய்னு வித்துக்கிட்டிருக்கோம்' என்ற, ராதாகிருஷ்ணன் நிறைவாக,
''காளான், காய்கறி, காளான் உணவுகள்னு விற்பனை செய்றது மூலமா, தினமும் 5 ஆயிரம் ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்குது. ஆட்கள் சம்பளம் உள்ளிட்ட செலவுகள் போக, தினமும் 2 ஆயிரத்து 500 ரூபாய் லாபமா கிடைக்குது. இந்த மொத்தப் பண்ணையும் ஒண்ணரை ஏக்கர்லதான் இருக்கு. அதுலயே இந்தளவுக்கு வருமானம் கிடைக்குது. அதுக்கு முக்கிய காரணம், நேரடி விற்பனைதான்'' என்று சந்தோஷமாக விடை கொடுத்தார்.
 தொடர்புக்கு,ராதாகிருஷ்ணன், செல்போன்: 98410-23448
Thanks to Pasumai Vikatan

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites