கடமைகளை எல்லாம் ஒருவழியாக முடித்துவிட்டு அப்பாடா என்று ஓய்ந்து உட்காருகிற வயதில் கலைகளின் பின்னால் செல்கிறார் சேலம், அழகாபுரம் சிவாய நகரைச் சேர்ந்த கெஜலஷ்மி. பறந்துகொண்டே இருக்கிற பட்டாம்பூச்சி போல எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கிறார். சோர்ந்து உட்கார்ந்துவிட்டால் உடல், மனம் இரண்டுமே துருப்பிடித்துப் போய்விடும் என்று சொல்கிற இவர், கலைகளின் மூலம் தன்னை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொள்கிறார்.
“நானும் உங்களில் ஒருத்திதான். என் கணவருக்குச் சுயதொழில். அதனால் திருமணமான புதிதில் அவரது வியாபாரம் தொடர்பான கணக்கு வழக்குகளில் உதவுவேன். அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள். வீடு, வேலை, குழந்தைகள் என ஒவ்வொரு நாளும் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு பறக்கும். இரண்டு பெண்களையும் திருமணம் செய்துகொடுத்து, பேரன், பேத்திகளையும் பார்த்தாகிவிட்டது. இப்போது கிடைத்திருக்கும் இந்த ஆசுவாசம், எனக்குள் வேரூன்றி இருந்த கலையார்வத்தை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்தது. என் அக்கா மகள், ஃபேஷன் நகைகள் செய்வதில் வல்லவள். அவளைப் பார்த்து எனக்கும் ஆர்வம் வந்துவிட்டது. அடிப்படை செய்முறையுடன் என் கைத்திறனையும் சேர்த்துப் புதுப்புது மாடல்களை நானே உருவாக்கினேன். என் வீட்டில் பெண்கள் அதிகம் என்பதால் நான் எத்தனை வகையான நகைகள் செய்தாலும் உடனே அவற்றுக்குக் கழுத்தோ, காதோ கிடைத்துவிடும்” என்று புன்னகையுடன் பேசுகிற கெஜலஷ்மி, பயன்படாத பொருட்களைக்கூடப் பளபளக்கும் கலைப்பொருள்களாக மாற்றிவிடுகிறார்.
கல்லையும் சிற்பமாக்கலாம்
எண்ணெய் கவர்கள், பால் கவர்களை முக்கோணமாக வெட்டி, சுருட்டி இவர் தொடுக்கும் மாலைகள் கொள்ளை அழகு. இளநீர் குடித்துவிட்டு நாம் ஸ்ட்ராவைத் தூக்கி போட்டுவிடுவோம். ஆனால் கெஜலஷ்மியோ அவற்றை வைத்து அலங்காரக் குடைகளை உருவாக்கி விடுகிறார். ஆம்லெட் போட்டுவிட்டு நாம் தூக்கியெறியும் முட்டை ஓடுகளில் கண்கவர் ஓவியங்கள் தீட்டுகிறார். அச்சுக் கலையையும் ஒரு கை பார்க்கிறார். புடவைகள், குழந்தைகளின் ஆடைகளில் விதவிதமான அச்சுகளைப் பதிக்கிறார். தையல் எந்திரத்தை நம்பாமல், கைகளிலேயே விதவிதமான எம்ப்ராய்டரி வடிவங்களைச் செய்கிறார். முகப்புவைத்த முத்துச்சரமும், பதக்கம் பதித்த சங்கிலியும் இவரது சிறப்புத் தயாரிப்புகள்.
“நான் இவ்வளவு பொருட்களைச் செய்தும் எதையும் விற்பனை செய்ததில்லை. என் மனத் திருப்திக்கும், என் குடும்ப உறுப்பினர்களுக்குமே இவை போதுமானதாக இருக்கின்றன. ஆயிரம் ஆயிரமாகக் கொடுத்துக் கடைகளில் வாங்குவதைவிட என் மனதுக்கு நெருக்கமானவர்களுக்கு என் கையால் செய்த பொருட்களைக் கொடுக்கும்போது தோன்றுகிற மகிழ்ச்சிதான் என் வருமானம்!” என்று சொல்லும் கெஜலஷ்மி, இதுவரை யாரிடமும் இந்தக் கலைகளைப் பயின்றதில்லை.
நீங்களும் பங்கேற்கலாம்
பார்த்ததுமே உங்களுக்குள் இருக்கும் கலை உணர்வு மெல்லத் தலைகாட்டுகிறதா? உடனே அதை வெளிப்படுத்துங்கள். அது புகைப்படமோ, ஓவியமோ, ஆடைகளில் வரையும் அலங்கார டிசைனோ எதுவாக இருந்தாலும் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள், உலகறியச் செய்கிறோம். penindru@kslmedia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.
0 comments:
Post a Comment