கடந்த மாதம் ஏழு மாநிலங்களில் பெண்களுக்கான பிரத்யேக வங்கிகள் தொடங்கப்பட்டன. மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் பெண்கள் வங்கிக்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்திருந்தது. அதன்படி மும்பையில் நவம்பர் 19ம் தேதியன்று பெண்களுக்கான வங்கியை பிரதமர் திறந்து வைத்தார். அதே நாளன்று சென்னை, அகமதாபாத், கொல்கத்தா உள்ளிட்ட ஏழு கிளைகளும் தொடங்கப்பட்டன.
பெண்களுக்குத் தனியாக வங்கி எதற்கு என்ற கேள்வி எழுவது இயற்கைதான். அதில் பெண்களுக்கென்று பிற வங்கிகள் அளிக்காத சிறப்புச் சேவைகள் இருக்கின்றனவா என்னும் கேள்வியுடன் சென்னை அண்ணா சாலையில் திறக்கப்பட்ட ‘பாரதிய மஹிளா பேங்க்’ஐ அணுகியபோது பெண்களுக்கான பிரத்யேகமாக வங்கித் திட்டங்கள், கடன்கள் கொடுப்பது, உள்ளிட்ட அம்சங்கள் இருப்பது தெரியவந்தது.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், சிறு தொழில்களுக்கும், பெண்களின் ஆக்கபூர்வமான முன்னேற்றத்துக்கும் துணை புரியும் இந்த வங்கிகளில் குழந்தைகள் காப்பகம் நடத்தவும் உணவு தயாரிப்பு வேலை (catering) செய்யவும் கடன்கள் தரப்படும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
கதம்பச் சுடர் சுய உதவிக் குழுவும் கண்மலை சுய உதவிக் குழுவும் சென்னை கிளையில் முதல் நாள் கடன் பெற்றன. ராயபுரத்தில் இருக்கும் இந்த இரண்டு மகளிர் குழுக்களிலும் தையல் தொழில் செய்யும் பெண்களே உறுப்பினர்கள். கண்மலை குழுவில் 13 பெண்களும் கதம்பச் சுடர் குழுவில் 15 பெண்களும் உள்ளனர்.
கண்மலை சுய உதவிக் குழு உறுப்பினர் சத்யா, பி.காம் படித்திருக்கிறார். முன்பு தனியார் நிறுவனத்தில் கணக்குகள் பிரிவில் வேலை பார்த்துவந்தார். பிறகு ஏற்றுமதி நிறுவனத்தில் நைட்டிகள் தைத்து வந்தார். வருமானம் போதாததால் வேலையை விட்டு வீட்டிலேயே தைக்க ஆரம்பித்தார் சத்யா. வீட்டு உரிமையாளர் தையல் மெஷின் சத்தத்தைப் பொறுத்துக்கொள்ளாததால் கண்மலை குழுவில் மற்றொரு உறுப்பினரான தனது சித்தி புஷ்பராணியின் வீட்டில் வைத்து த் தைத்துவருகிறார். அப்பாவுக்குக் கல்லீரலில் அறுவை சிகிச்சை, அண்ணனுக்கு ரூ.5000 மாத சம்பளம், அம்மா இல்லத்தரசி. இந்நிலையில் சத்யா ஏதாவது தொழில் செய்தால் மட்டுமே குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்ற சூழலில்தான் தைக்க ஆரம்பித்தார்.
கடன் என்னும் வரம்
கண்மலை குழு ஆரம்பித்து ஏழு மாதங்களிலேயே பெண்கள் வங்கியிலிருந்து கடன் கிடைத்திருக்கிறது. இதுதான் அவர்கள் வாங்கும் முதல் கடன் என்பதால் குழு உறுப்பினர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். “இந்தக் கடன் அறிவித்திருப்பது வானத்தை எட்டியது போல் இருக்கிறது. கடனாகக் கொடுக்கப்பட்டிருக்கும் ரூ.1,30,000-ஐக் கொண்டு தையல் கடை ஆரம்பிக்கலாம் என்று ஆசைப்படுகிறோம்” என்கிறார் குழு உறுப்பினரும் சத்யாவின் சித்தியுமான புஷ்பராணி .
“சத்யா கூறியதால் பொழுது போக்காகத்தான் நான் தையல் கற்றுக்கொண்டேன். ஆனால் அதுதான் இப்போது எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறது” என்கிறார் புஷ்பராணி.
மீனவர் வாழ்வில்...
கதம்பச் சுடர் சுய உதவிக் குழுவில் நான்கு வருடமாக உறுப்பினராக இருப்பவர் ஷகீலா. மீனவராக இருந்த அவரது கணவர் திருமணமாகி ஆறு வருடங்களிலேயே விபத்தில் இறந்துவிட்டார். மூன்று வயது ஆண் குழந்தையுடன் வாழ்க்கையைத் தனியாக எதிர்கொள்ள ஆரம்பித்தார்.
அடுப்பில் இருக்கும் பால் பொங்குகிறதா இல்லையா என்று கவனித்துக் கொண்டே தனது தையல் மெஷினை ஓட்ட ஆரம்பிக்கிறார் ஷகீலா. தனது கஷ்டங்கள் எதையுமே முகத்தில் காட்டிக் கொள்ளாமல் கலகலப்பாகப் பேசத் தொடங்குகிறார். “அவர் இறந்த பின் நான் மிகவும் கலங்கிவிட்டேன். வாடகைக்கு தையல் மெஷின் வாங்கி வீட்டில் இருந்தே தைக்க ஆரம்பித்தேன். இந்த தொழிலை நம்பிதான் என் குடும்பமே ஓடிக்கிட்டு இருக்கு. தெரிந்த பெண்கள் பதினைந்து பேர் கூடி இந்த குழுவை ஆரம்பித்தோம்.” என்கிறார்.
எத்திராஜ் கல்லூரியில் இருக்கும் இந்தியன் ஓவர்சீஸின் பெண்களுக்கான தொழில்முனைவோர் வங்கியில் கடன் வாங்கி இதுவரை ஷகீலாவையும் சேர்த்து 10 பேர் சொந்தமாக மெஷின் வாங்கியுள்ளனர். பெண்கள் வங்கி கதம்பச் சுடருக்கு ரூ.3 லட்சம் கடன் தருவதாக அறிவித்துள்ளது.
“நாங்கள் முதலில் அலகாபாத் வங்கியில் கணக்கு வைத்திருந்தோம். எங்களுக்கு கடன் கொடுத்த மேலாளர் வேறு கிளைக்கு மாற்றப்பட்டு விட்டார். அதன் பிறகு வந்தவர் எங்களுக்கு சரியான ஒத்துழைப்பு தரவில்லை. எனவே ஐ.ஒ.பி. பெண்கள் வங்கிக்கு மாறினோம். அங்கு எல்லோரும் எங்களது நிலைமையை நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள். முகம் தெரியாத ஒருவரிடம் பேசவே தயங்கும் எனக்கு பெண்கள் வங்கி என்பதால் சுலபமாக பேசிப் பழக முடிந்தது. புதிதாக திறக்கப்பட்டிருக்கும் பெண்கள் வங்கியிலும் இதே வரவேற்பு இருக்கும் என்று கண்டிப்பாக நம்புகிறோம்” என்கிறார் ஷகீலா தன்னம்பிக்கையுடன்.
0 comments:
Post a Comment