இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, October 22, 2013

வித்தியாசம் வெற்றி தருமே!

மிகவும் சவாலான தொழில்களில் ஒன்று ஹோட்டல் நடத்துவது.  போட்டிகள் நிறைந்த அந்தத் துறையில் தாக்குப்பிடிக்கிற ரகசியம் எல்லோருக்கும் கைவராத ஒன்று. அதிலும் பெண்களுக்கும் ஹோட்டல் பிசினஸுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். வீட்டுக்குள் பெண்களின்  பிடிக்குள் இருக்கிற உணவுத் துறை, வெளியில் ஏனோ அப்படி இருப்பதில்லை. சென்னை வடபழனியில், ‘டயட் இன்’ என்கிற பெயரில் வித்தியாச உணவகம் நடத்தும் காந்திமதியையும் ஆரம்பத்தில் நிறைய கேள்விகளும் பயங்களும் துரத்தியிருக்கின்றன. விமர்சனங்களையும் வேண்டா கேள்வி  களையும் புறந்தள்ளிய காந்திமதியின் எதிர்நீச்சல், இன்று வெற்றிகளை அவரது வசமாக்கியிருக்கிறது.Difference to success!


‘‘நியூட்ரீஷியன் ஸ்டூடன்ட் நான். படிச்சதோட, அந்த விஷயங்களை மறந்துடாம, வாழ்க்கையில ஏதோ ஒரு விஷயத்துல அதை அப்ளை  பண்ணணும்னு யோசிச்சப்பதான் ஹோட்டல் ஆரம்பிக்கிற ஐடியா வந்தது. ஹோட்டல் ஆரம்பிக்கப் போறேன்னு நான் சொன்னதும், ‘உனக்கு  இதெல்லாம் தேவையா... எதுக்கு ரிஸ்க்?’ன்னு நம்பிக்கையை சிதைச்சவங்கதான் அதிகம். அவங்களைச் சொல்லித் தப்பில்லை. இன்னிக்கு தெருவுக்கு  ரெண்டு ஹோட்டல் இருக்கு. 

புதுசா ரெண்டு ஹோட்டல் ஆரம்பிச்சா, அதுக்கு முன்னாடி தொடங்கின வேற ரெண்டு ஹோட்டலை பிசினஸ் இல்லைன்னு மூடிட்டுப் போற  காலமிது. அதுவும் இல்லாம பெரும்பாலான ஹோட்டல்கள்ல ஒரே மாதிரியான டேஸ்ட்... முன்னல்லாம் வீட்டுச் சாப்பாடு போரடிச்சா, ஹோட்டல்ல  போய் சாப்பிடுவாங்க. இன்னிக்கு ஹோட்டல் சாப்பாடே பலருக்கு அலுத்துப் போயிட்டிருக்கு. அதுவுமில்லாம, கொடுக்கிற பணத்துக்கு ஆரோக்கியமான  சாப்பாடு கிடைக்குதான்னு பார்த்தா, அதுக்கும் உத்தரவாதம் இல்லை. எல்லாத்தையும் யோசிச்சு, ஹோட்டல் இன்டஸ்ட்ரியை பத்தி நல்லா ஆய்வு  பண்ணின பிறகுதான், டயட் உணவகம் தொடங்கறதுங்கிற முடிவுக்கு வந்தேன். 

எங்கப்பாவுக்கு ஹோட்டல் துறையில அனுபவம் உண்டுங்கிறதால, முதல் சப்போர்ட் அவர்கிட்டருந்து கிடைச்சது. அடுத்து என் கணவர் கொடுத்த  ஊக்கம். துணிஞ்சு இறங்கிட்டேன். என்னோட ரெஸ்டாரன்ட் பத்தோட ஒண்ணா இருக்கக்கூடாதுங்கிறதுல ரொம்பத் தெளிவா இருந்தேன். இட்லி,  தோசை, பரோட்டான்னு வழக்கமான உணவுகளை எந்த ஹோட்டல்ல வேணா சாப்பிடலாம். நம்ம பாரம்பரியத்துல காலங்காலமா இருந்த சிறுதானிய  உணவுகளை சாப்பிட சரியான இடமில்லை. 

முழுக்க முழுக்க சிறுதானிய உணவுகளுக்கான உணவகமா நாலு வருஷங்களுக்கு முன்னாடி டயட் இன்னை தொடங்கினேன். கவர்ச்சியான  விளம்பரம், ஆடம்பரமான இன்டீரியர்னு எதுலயும் எனக்கு நம்பிக்கையில்லை. தரமான உணவு நிச்சயமா மக்களை ஈர்க்கும்னு நம்பிக்கையோட காத்திருந்தேன். ஹோட்டலை பத்தின எந்த ஐடியாவும் இல்லாம வாடிக்கையாளர்கள் உள்ளே வருவாங்க. சாதாரண இட்லி, தோசை கிடைக்காதான்னு  கேட்பாங்க. முளைகட்டின வெந்தய தோசை, நவதானிய அடை, முந்திரிப்பழ ஜூஸ்னு புதுமையான அயிட்டங்களை பத்தி சொன்னதும், ‘பத்திய  சாப்பாடா... மருந்து மாதிரி இருக்குமா’ன்னு கேட்பாங்க. 

சாம்பிள் கொடுத்து, ‘பிடிச்சா ஆர்டர் பண்ணி சாப்பிடுங்க’ன்னு சொல்வேன். இந்த நாலு வருஷத்துல பிடிக்கலைன்னு சொல்லிட்டு ஒருத்தர்கூட  திரும்பிப் போனதில்லை. வேற என்ன இருக்குன்னு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அயிட்டத்தை டேஸ்ட் பண்ணிப் பார்க்க, மறுபடி மறுபடி  வர்றவங்கதான் அதிகம்...’’ என்றபடியே மெனு கார்டு காட்டுகிறார் காந்திமதி. கொள்ளு சூப், முடக்கத்தான் கீரை சூப், கம்பங்களி, வரகரிசி தயிர்சாதம்,  கோதுமை பிசிபேளாபாத், கோதுமை பரோட்டா, நூல்கோல் துவையல், நுங்கு ஜூஸ் என மெனு முழுக்க வித்தியாசம்... ஊறுகாய்க்குத் தடா. 

குழந்தைகளை ஈர்க்க சாட் அயிட்டங்களும் உண்டு. ஆனால், அவற்றிலும் பலதானிய பிரெட்டில் செய்த சான்ட்விட்ச், பர்கர், பீட்சா என  ஆரோக்கியமானவற்றுக்கு மட்டுமே அனுமதி. மாதம் ஒரு முறை ‘நிலாச்சோறு’ என்கிற பெயரில், முழு நிலவில் மொட்டை மாடியில் விருந்து  உபசாரம்! ‘‘ஹோட்டல் பிசினஸ் ரிஸ்க் நிறைஞ்சதுன்னு எனக்கும் தெரியும். எந்த விஷயங்கள்ல பிரச்னைகள் வரும்னு முன்கூட்டியே  யோசிச்சுக்கிட்டேன். வேலைக்கு ஆள் கிடைக்கிறதுதான் இன்னிக்கு எல்லா பிசினஸ்லயுமே பிரதான பிரச்னை.

அமெரிக்காவில எல்லாம் ரெண்டே பேர் ஒரு ரெஸ்டாரன்ட்டை வெற்றிகரமா நடத்தறாங்க. இது என் வேலையில்லைன்னு அவங்க எதையும்  ஒதுக்கிறதில்லை. ஆனா, நம்மூர்ல டேபிள் துடைக்கிறது கவுரவக் குறைச்சல். தட்டு கழுவறது கேவலமான வேலைங்கிற மனப்பான்மைக்குக்  குறைச்சலே இல்லை. இந்த விஷயங்கள்ல நான் தெளிவா இருக்கேன். சமையலறையில கட்டாயம் நான் இருப்பேன். செஃப் வரலையே... என்ன  செய்யறதுன்னு கையைப் பிசைஞ்சுக்கிட்டு நின்னதில்லை. ஒவ்வொரு செய்முறையும் நான் உருவாக்கினது. 

அதனால அதை எப்படிப் பண்ணணும்னு எனக்குத் தெரியும். ஆள் இல்லையா... ஆர்டர் எடுக்கிறதுலேருந்து, டேபிள் கிளீன் பண்றது வரைக்கும்  எல்லாத்தையும் நானே செய்வேன். ‘ஆள் கிடைக்கலை, கிடைச்சாலும் வேலை தெரியலைன்னு எல்லாம் புலம்பிக்கிட்டு, பிசினஸ்ல கோட்டை  விடறதுக்குப் பதில், எல்லா வேலைகளையும் நாமளே கத்துக்கறதும், கவுரவம் பார்க்காம அதைச் செய்யறதும், பிசினஸ்ல நமக்கான இடத்தைத் தக்க  வைக்கும்கிறது அனுபவத்துல நான் கத்துக்கிட்ட உண்மை...’’ - வெற்றியின் பின்னணி சொல்லிச் சிரிக்கிறார் காந்திமதி.

குறைந்த கலோரியில் நிறைந்த உணவு...சமையல் குறிப்புகள்,



50-100 கலோரி டயட் ஃபுட்
''ஜங்க் ஃபுட்ஸ்க்கு இணையாகவும் சுவையாகவும் நொறுக்ஸ் கிடைச்சா, நாங்க ஏன் ஜங்க் ஃபுட்ஸ் பக்கம் 'ஜம்ப்’ பண்றோம்?'' என்பதே இன்றைய இளைஞர்களின் 'டேஸ்ட்’ டாக்!

''எதிலுமே புதுமை தேவையாக இருக்கிறது. அதிலும், உணவு விஷயத்தில் எல்லா வயதினரையும் சுண்டியிழுப்பது என்பது சற்று கடினம்தான். அதான், சுவையாக மட்டும் அல்லாமல், சத்தான நம் பாரம்பரிய உணவுகளைத் தேர்ந்தெடுத்து, அதில் வெரைட்டியான டிஷ்களைத் தருகிறேன். பசியும் அடங்கும்.  உடலுக்கு தேவையான எனர்ஜியும் கிடைக்கும்'' என்கிறார் சென்னை, வடபழனியில் 'டயட் இன்’ என்ற உணவு விடுதியை நடத்திவரும் ஊட்டச்சத்து நிபுணர் காந்திமதி.  

முளைக்கட்டிய வெந்தய தோசை
செய்முறை: கால் கப் வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைத்து, முளைக்கட்டியதும், தோசை மாவுடன் சேர்த்து அரைத்து வார்க்கலாம்.  
பலன்கள்: உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். வயிற்றுக்கடுப்பு, வயிற்று வலி குணமாகும். மாதவிடாய்க் கோளாறைச் சரிசெய்யும். இரும்புச் சத்து இருப்பதால், ரத்த சோகை வராமல் தடுக்கும்.  

ராகி பக்கோடா
செய்முறை: கடலை மாவுக்குப் பதிலாகக் கேழ்வரகு மாவைப் பயன்படுத்தியும் செய்யலாம். வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக்கீரை சேர்த்து தண்ணீர்விட்டுக் கெட்டியாகப் பிசைந்து  எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவேண்டும்.  
பலன்கள்: கேழ்வரகில் இரும்புச் சத்து, புரதச் சத்து, நார்ச் சத்துகள் இருக்கின்றன. மலச்சிக்கல் வராது. உடல் இளைக்கும்.

வாழைப் பூ வடை
செய்முறை: வாழைப்பூவைப் பொடியாக நறுக்கி மூழ்கும் அளவுக்குத் தண்ணீர்விட்டுக் கொதித்ததும், வடிகட்டி, பிழிந்து தனியாக வைக்கவும். ஊறவைத்த கடலைப்பருப்புடன், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சோம்பு, பெருங்காயம், உப்பு சேர்த்து அரைத்து, வேகவைத்த வாழைப்பூவைப் போட்டு ஓரிரு சுற்றுகள் சுற்றி எடுத்துக்கொள்ளவும். அத்துடன் நறுக்கிவைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, வேகவைத்து வடித்த வாழைப்பூவைச் சேர்த்துப் பிசைந்து காயும் எண்ணெயில் வடைகளாகத் தட்டி பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.  
பலன்கள்: உடல் சூட்டைக் குறைக்கும். வயிற்றுக்கடுப்பு, அஜீரணக் கோளாறு மற்றும் வறட்டு இருமலைப் போக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.  

தண்டை
செய்முறை:  பால், கசகசா, மிளகு, சோம்பு, குங்குமப்பூ, பாதாம் மற்றும் ஏலக்காய் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.  
பலன்கள்: இந்த ஊட்டச்சத்து பானம் வட நாட்டில் மிகப் பிரபலம். வளரும் குழந்தைகளுக்கு நல்ல எனர்ஜியைக் கொடுக்கும். எடை குறைந்த குழந்தைகளுக்கு தினமும் இரண்டு வேளை இந்த பானத்தைக் கொடுக்கலாம்.  
நவதானிய அடை
செய்முறை: அரிசி, பருப்பு வகைகள், எள், கொள்ளு, கொண்டைக்கடலை, காராமணி, நிலக்கடை, மசூர் தால் என விரும்பிய தானிய வகைகளை தண்ணீரில் ஊறவைத்து, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அடை பதத்தில் அரைத்துக்கொள்ளவும். இதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து தோசைக்கல்லில் அடையாக வார்க்கலாம்.
பலன்கள்: புரதச் சத்து அதிகம் இருக்கிறது.  உடலை நல்ல திடமாக வைத்திருக்கும். வளரும் பிள்ளைகளுக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும். 
- வி.லஷ்மி 
நன்றி குங்குமம்தோழி

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites