இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, October 6, 2013

8 பேர் 800 பேரா வளரணும்!

8 people growth 800 people!

‘ஹோட்டல் சாப்பாடு உடலுக்குக் கெடுதல்’ என்பது ஊரறிந்த உண்மை. சுத்தத்தில் ஆரம்பித்து, தரம் வரை எல்லாமே அங்கே சந்தேகத்துக்குரிய  விஷயங்கள். ஆனால், சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ‘ஸ்ரீமன் நாராயணா’ பாரம்பரிய உணவகத்துக்குள் நுழையும் போது, இப்படி எந்த  சந்தேகமும் எழும்பாது. ருசியிலும் உபசரிப்பிலும் வீட்டுச் சூழலை நினைவுப்படுத்துகிறது!

அனந்தலட்சுமி, உமா மகேஸ்வரி என இரண்டு சகோதரிகளின் முயற்சியால் உருவாகியுள்ள இந்த உணவகத்தின் பின்னணியில் ஏகப்பட்ட  சுவாரஸ்யங்கள்... ‘‘எம்.பி.ஏ. முடிச்சிட்டு, சாஃப்ட்வேர் துறையில வேலை பார்த்திட்டிருந்தேன். என் கணவர் டெலிகாம் ட்ரெயினர். அவர் யோகா  தெரிஞ்சவர். உணவுங்கிறது எப்படி இருக்கணும், எது நல்லது, எது கூடாதுன்னு ரொம்ப முறையான உணவுகளைத்தான் அவர் சாப்பிடுவார்.  கல்யாணத்துக்கு முன்னாடி, எனக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமப் போகும். 

கல்யாணத்துக்குப் பிறகு, வேற வழியில்லாம, கணவரோட ஸ்டைல்ல சாப்பிடப் பழகினதால, சின்ன தலைவலி, ஜலதோஷம் கூட இல்லாம  ஆரோக்கியமா இருக்கிறதை உணர்ந்தேன். இதை நாலு பேருக்கு சொல்லணும்னு நினைச்சோம். ஒரு விழிப்புணர்வு முயற்சியா இருக்கட்டுமேன்னுதான்,  மதுரையில ஆரோக்கிய சாப்பாட்டுக்காக ஒரு உணவகம் ஆரம்பிச்சோம். அதோட தொடர்ச்சியா இப்ப சென்னையிலேயும் அடுத்த கிளையைத்  திறந்தோம். 

எங்கக்கிட்ட சாதாரண அரிசி சாதம் கிடைக்காது. கைக்குத்தல் அரிசி, திணை அரிசி, சாமை அரிசி, வரகரிசி, குதிரைவாலின்னு எல்லாமே சத்தான  அரிசி வகைகள்தான். காரத்துக்கு பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் கிடையாது. சிவப்பு மிளகாயோட விதை, கர்ப்பப் பைக்கு நல்லதில்லைன்னும்,  சிறுநீரகக் கல்லை உருவாக்கும்னும் ஆதாரப்பூர்வ தகவல்கள் இருக்கு. வெங்காயம், பூண்டு சேர்க்கிறதில்லை. இந்த ரெண்டும் சுவைக்கு அடிமையாக்கி,  ஒருவித மந்தத் தன்மையை உருவாக்கும். புளி, ரத்தத்தை சுண்ட வச்சு, மூட்டுத் தேய்மானத்துக்கும், முதுகெலும்பு அரிப்புக்கும் காரணமாயிடும். 

காரத்துக்கு பச்சை மிளகு, இஞ்சியும் புளிப்புக்கு மாங்காய், எலுமிச்சைப்பழம், புளிச்சக் கீரையும்தான் உபயோகிப்போம். சாம்பார் பொடிகூட வழக்கமான  மிளகாய், மல்லி சேர்த்து அரைச்சதா இல்லாம, அதிமதுரம், கடுக்காயெல்லாம் சேர்த்து அரைக்கப்பட்டதா இருக்கும். தாளிக்க தோலோடு கூடிய  உளுந்து, மண்பானை சமையல்னு ஒவ்வொரு கவள உணவுமே ஆரோக்கியமானதா இருக்கணும்னு கவனமா பார்த்துக்கிட்டோம். நம்ம மக்களுக்கு  காலங்காலமா பழகிப் போன சாப்பாடைத் தவிர்த்துட்டு, இதையெல்லாம் முயற்சி பண்றதுல ஆரம்பத்துல ஒரு தயக்கம் இருந்தது. 

வாடிக்கையாளர்களை ஈர்க்கறது முதல் சில நாள்களுக்கு பெரிய சவாலாதான் இருந்தது. ஆனாலும், நாங்க சோர்ந்து போயிடலை. ‘எங்க சாப்பாட்டை  சாப்பிட்டா நீரிழிவும் ‘பிபி’யும் கட்டுப்பாட்டுக்கு வரும். செரிமானம் சுலபமா இருக்கும். நோய் எதிர்ப்பு  சக்தி அதிகமாகும்’னு வந்தவங்களுக்கெல்லாம்  சொன்னோம். வயசானவங்களுக்கு எங்களோட சாப்பாடு ரொம்பப் பிடிச்சது. வயசான காலத்துல தனியா இருக்கிற தம்பதிகள் பலருக்கும் நல்ல  சாப்பாடுதான் பிரச்னையே. செய்து கொடுக்க ஆட்கள் இருக்க மாட்டாங்க. 

வெளிச்சாப்பாடு உடம்புக்கு ஆகாது. நல்ல ஹோட்டலை தேடிப் போய் சாப்பிட அவங்களோட உடல்நிலை ஒத்துவராது. அந்த மாதிரி சீனியர்  சிட்டிசன்களுக்காக டோர் டெலிவரி வசதியையும் அறிமுகப்படுத்தினோம். அத்தனை பேரோட வாழ்த்தும் ஆசீர்வாதமும் சென்னையோட எல்லா  ஏரியாக்கள்லயும் கிளைகள் தொடங்கற உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுத் திருக்கு....’’ என்கிற அனந்தலட்சுமியிடம் வேலை பார்க்கிற  அத்தனை பேருமே பெண்கள்! 

துவையல் அரைக்க, வத்தக் குழம்பு வைக்க, கூட்டு, பொரியல் செய்ய, ரசம் வைக்க என ஒவ்வொரு அயிட்டத்துக்கும் அதில் கை தேர்ந்தவர்களைத்  தேடிப்பிடித்துச் சேர்த்திருக்கிறார். ‘‘இப்ப 8 பேர் கொண்ட பெண்கள் குழுவா இருக்கிற நாங்க, இன்னும் 80 பேரா - 800 பேரா வளரணும். ஆரோக்கிய  உணவோட அவசியத்தை மட்டும் பிரசாரம் பண்ணாம, அதுக்கான வழிகளையும் எங்க மூலமா மக்களுக்குக் கொண்டு போய் சேர்க்கணும். எங்க  ஒவ்வொருத்தரோட உழைப்பும் அதை நோக்கினதுதான்...’’ - அமைதியாக, அழுத்த மாகச் சொல்கிறார் அனந்தலட்சுமி.

- வி.லஷ்மி
படங்கள்: லோகநாதன்

Thanks!!!http://www.dinakaran.com/Ladies_Detail.asp?cat=501&Nid=2029

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites