இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, December 6, 2015

சின்ன’ வெங்காயம்...‘பெரிய’ லாபம்!


60 சென்ட்... 70 நாள்... ரூ 90 ஆயிரம் லாபம்!

குறுகிய காலத்தில் மகசூல் கொடுக்கும் பயிர்களில் கீரைகளுக்கு அடுத்த இடத்தில் இருப்பது வெங்காயம். ஆட்சியையே கவிழ்க்கும் ஆற்றல் உள்ள வெங்காயம், விவசாயிகளுக்கு ‘அதிர்ஷ்டமான பயிர்’தான். எப்படியாவது ஆண்டுக்கு இரண்டு முறையாவது இதன் விலை உச்சத்துக்குச் சென்று விவசாயிகளுக்கு நல்ல லாபம் ஈட்டிக் கொடுத்து விடும். தவிர, இதை இருப்பு வைத்து விற்க முடியும் என்பதும், கூடுதல் நன்மை. அதனால்தான் பல விவசாயிகள் வெங்காய சாகுபடியில் ஈடுபட்டு நல்ல லாபம் பார்த்து வருகிறார்கள். அந்த வரிசையில் ஒருவர்தான், இயற்கை விவசாயி ராஜேஷ்குமார். 
இயற்கை விவசாயம் என்றாலே... ‘ஆண்டுக் கணக்கில் ரசாயன உரம் போட்டு விவசாயம் செய்த நிலத்தை இயற்கைக்கு மாற்றினால் மகசூல் எடுக்க முடியுமா?’ என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கும். இதற்கு தனது அனுபவம் மூலம் பதில் சொல்கிறார், ராஜேஷ்குமார். இவர், ரசாயன விவசாயம் செய்த நிலத்தை இயற்கைக்கு மாற்றி, முதல் சாகுபடியிலேயே நல்ல மகசூல் எடுத்திருக்கிறார் என்பதுதான் சிறப்பே!
கால் ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணையம்!
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாச்சியார்ப்பட்டி கிராமத்தில் இருக்கிறது ராஜேஷ்குமாரின் தோட்டம். வெங்காயம் அறுவடைப் பணியில் ஈடுபட்டிருந்த ராஜேஷ்குமாரைச் சந்தித்தபோது....
“பாரம்பர்யமாவே விவசாயக் குடும்பம்தான். பி.இ முடிச்சதும், ‘என் கூட சேர்ந்து விவசாயத்தைப் பார்த்துக்கடா’னு அப்பா சொன்னார். ‘விவசாயத்தையெல்லாம் உங்களோட வெச்சுக்கங்க’னு சொல்லிட்டு தனியார் கம்பெனியில மூணு வருஷம் வேலை பார்த்தேன். கூட வேலை பார்த்த நண்பர் மூலமா நம்மாழ்வார் பற்றி தெரிஞ்சுக்கிட்டு... அவர் நடத்துன மூன்று நாள் பயிற்சியில கலந்துக்கிட்டேன். ‘அரசு வேலை பார்ப்பவர்கள்கூட வேலையை விட்டுட்டு நிலத்தை வாங்கி விவசாயம் செய்றாங்க. நாமளும் நம்ம குடும்பத் தொழிலை செஞ்சா என்னா?’னு யோசனை செஞ்சு நான் பாத்துக்கிட்டிருந்த வேலையை விட்டுட்டேன்.
ஆடு, மாடு, கோழிகள், நாய்கள் மீது எனக்கு சின்ன வயசுல இருந்தே விருப்பம் அதிகம். அதனால எனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் இடத்துல 25 சென்ட்ல ஒருங்கிணைந்த பண்ணையம் அமைச்சிருக்கேன். நூத்துக்கணக்குல இருந்த கோழிகள், ஆடுகள் எல்லாம் விற்பனையாகி, இப்போ என்கிட்ட 10 பெட்டைக்கோழிகள், 25 ஆடுகள், 6 நாட்டுமாடுகள், 4 சிப்பிப்பாறை நாய்கள் இருக்குது.
குத்தகை நிலத்தில் குதூகல மகசூல்!
ஆடு, மாடு வளர்ப்போட மட்டும் நாம நிற்கக்கூடாது. இயற்கை விவசாயமும் செய்யணும்னு நினைச்சு, என்ன பயிர் சாகுபடியில இறங்கலாம்னு யோசிச்சேன். குறைந்த பராமரிப்பு, குறுகிய கால அறுவடைனு சின்னவெங்காயம் நட முடிவு செஞ்சேன். என்னோட நிலத்துல உப்புத்தண்ணியா இருக்கறதால, ‘இதுல வெங்காயம் சரியா விளையாது’னு சொன்னாங்க. அதனால, இதே கிராமத்துல உள்ள உறவினரோட இடத்துல, ஒரு ஏக்கரை மட்டும் குத்தகைக்கு எடுத்தேன்.
நிலத்துக்காரர், மக்காச்சோளம், பருத்தினு ரசாயன உரத்தை அள்ளிப்போட்டு விவசாயம் செய்துட்டு இருந்தார். ‘பல வருஷமா ரசாயனம் போட்ட நிலத்துல, எடுத்ததும் இயற்கை விவசாயம் செஞ்சா மகசூல் கிடைக்காது’னு நண்பர்கள் சொன்னாங்க. ஆனா, ‘முறையான பராமரிப்பு இருந்தா மகசூல் எடுக்கலாம்’னு எனக்குத் தோணுச்சு.
60 சென்ட்ல மட்டும் சின்னவெங்காயத்தை சாகுபடி செய்திருக்கேன். அவர், ரசாயன முறையில் விதைச்ச மக்காச்சோளத்தை மாசி மாதம் அறுவடை பண்ணினார். அதுக்கப்பறம், ஒரு உழவு ஒட்டிட்டு, இரண்டு நாட்கள் செம்மறியாட்டுக்கிடை போட்டு உழவு அடித்து நிலத்தைக் காய விட்டு சாகுபடி பண்ணுனேன். நல்ல மகசூல் கிடைச்சிருக்கு” என்று சொல்லி பெருமிதப் பார்வையை வீசிய ராஜேஷ்குமார், தொடர்ந்தார்.
அதிக லாபம் தரும் நேரடி விற்பனை!
“60 சென்ட் நிலத்தில் எனக்கு 30 குவிண்டாலும் 12 கிலோவும் மகசூல் கிடைச்சிருக்கு. சராசரியா 60 சென்ட் நிலத்துல 30 குவிண்டால்தான் மகசூல் கிடைக்கும். அதுவும் ரசாயனத்திலிருந்து இயற்கைக்கு மாத்துன முதல் வருஷமே 30 குவிண்டால்ங்கிறது எனக்கு நல்ல மகசூல். விருதுநகர் மாவட்ட இயற்கை விவசாயிகள் 15 பேர் ஒண்ணா சேர்ந்து, சிவகாசி போஸ்ட் ஆபிஸ் எதிரில், ‘தேன்கனி உழவர்சந்தை’ங்கிற பெயர்ல... ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியில் இருந்து  மதியம் 2 மணி  வரை அவங்கவங்க விளைபொருட்களை நேரடியா விற்பனை செய்றோம். நானும் வெங்காயத்தைக் கொண்டு போய் விற்பனை செய்றேன். சமீபத்துல பட்டறை மூலம் வெங்காயத்தை சேமித்து வெச்சிருக்கிற தொழில்நுட்பத்தைக் கத்துக்கிட்டேன். அதன் மூலமா தேவைக்கு தகுந்தாப்புல வெங்காயாத்தை விற்பனை செய்யவும் முடிவு செய்திருக்கேன். இயற்கை முறையில விளைஞ்ச வெங்காயங்கிறதால ஆர்வமா வாங்கிட்டுப் போறாங்க. ‘விவசாயி, வியாபாரியாவும் மாறணும்’னு நம்மாழ்வார் ஐயா சொன்ன மாதிரி வியாபாரியாவும் மாறுனாத்தான் எல்லா விவசாயியும், லாபம் பார்க்க முடியும்’’ என்ற ராஜேஷ்குமார், நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.   
குறைந்த நாள்... அதிக லாபம்!
“ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாயில இருந்து அதிகபட்சம் 50 ரூபாய் வரைக்கும் விற்பனையாகுது. சராசரியா 40 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலும் 30 குவிண்டாலுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கிடைச்சுடும். இதில், உழவு, ஆட்டுக்கிடை, களை எடுப்பு, அறுவடைனு எல்லா செலவும் போக, 90 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைச்சுடும். கரும்பு, வாழை, நெல் பயிரிட்டால் மகசூல் எடுக்க குறைந்தது 6 மாசமாகும். காய்கறிகளை சாகுபடி செய்தாலும் தினமும் பறிக்கணும். ஆனா, 70 நாள்ல குறைவான பராமரிப்பில் நல்ல லாபம் கிடைக்கிற பயிர் சின்ன வெங்காயம்தான்” என்று தன்னுடைய வெற்றிவிவசாயத்தின் ரகசியம் சொன்னார் ராஜேஷ்குமார்!  
தொடர்புக்கு,
ராஜேஷ்குமார்,
செல்போன்: 99527-11002

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites