இன்று "மீம்ஸ்" உருவாக்கி தமிழ்நாட்டையே வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ஃபேஸ்புக்கில், நமது வலி போக்க சைக்கிளில் மோர் கேனுடன் ஒரு ஓரப்புன்னகை ஏந்தியபடியான புகைப்படங்களில் வலம் வருகிறார் இந்த "மோர் தாத்தா".
திருவான்மியூர்-கொட்டிவாக்கம் கடற்கரைச் சாலைகளில் மோர் விற்கும் எஸ்.ராமஜெயம் என்பவரே நம் மோர் தாத்தா. திருநெல்வேலியைச் சேர்ந்தவர். 1998ல் சென்னைக்கு வந்து 2001 வரை வாட்ச்மேனாக பணி புரிந்திருக்கிறார், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இட்லி கடை போட்டார். ஏரியாவில் சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. மனம் தளராதவர், மோர் விற்கலாம் என முடிவெடுத்து, முத்திரை பதித்துவிட்டார்.
கடைகளில் கிடைக்கும் நார்மல் மோரை முதலில் போடத் தொடங்கியவர், 3,4 ஆண்டுகளுக்குப் பிறகு தன் மோரில் பூந்தி, வெள்ளரிக்காய், மாங்காய் துண்டுகளையும் போட்டு புது ரெசிப்பையே கண்டு பிடித்திருக்கிறார். 2011 வரை ஓகே'வாக போய்க்கொண்டிருந்த வியாபாரம், அதன் பிறகு கத்திரி வெயிலைப் போல் சூடு பிடித்திருக்கிறது. ஆனால், இவர் விற்கும் மோர் வெயிலின் சூட்டை தணிக்கத் தவறியதில்லை என்று இவர் கஸ்டமர்கள் கூறுகிறார்கள்.
மோர் ஒன்னு. ரெசிப்பி ரெண்டு.
20 ரூபாய் மோர் ( பூந்தி+வெள்ளரிக்காய் )
25 ரூபாய் மோர் ( பூந்தி+வெள்ளரிக்காய்+மாங்காய் )
இந்த வித்தியாசம் சமீபத்தில் மரம் ஏறிய மாங்காயின் விலையினால் தான் என்கிறார் ராமஜெயம்.
இவர் வீட்டில் இருந்து கிளம்பும் முன்னரே, பீச்சில் காத்திருப்பவர்கள் இவருக்கு கால் செய்து தங்கள் க்ளாஸ் மோரை புக் செய்து கொள்கின்றனர். வார நாட்களில் ஒரு நாளைக்கு 200 மோர் விற்பதாகவும், வார இறுதி நாட்களில் 300 மோர் விற்பதாகவும் சொல்கிறார்.
இதில் தன் குடும்பத்தினரின் பங்கும் பெரிது. இவர் வியாபாரத்திற்கு கிளம்பியவுடன், அவர் கூடவே அவர் மனைவி திருமதி.பமீலா'வும் உதவிக்கு கிளம்பி விடுகிறார். இவர்கள் இருவரும் மோர் தயாரிக்கும் டிபார்ட்மெண்ட்டை எடுத்துக் கொள்ள, மகன்கள் கார்த்தீசன், தவசன்னாசி ஆகிய இருவரும் மாங்காய், வெள்ளரி நறுக்க உதவுகின்றனர். முதல் மகன் 12ஆம் வகுப்பும், இரண்டாம் மகன் 9ஆம் வகுப்பும் படிக்கின்றனர்.
தாத்தா மோருடன் சேர்த்து ஃப்ளேவர்ட் பாலும் விற்கிறார். 15 லிட்டர் பால் வாங்கி அதை 12 லிட்டருக்கு சுண்ட விட்டு, அதிலே ஏலக்காய் அல்லது மசாலாக்களை கலந்து அன்றைய மெனுவை தீர்மானிப்பாரம். மோருடன் மோதினால் மசாலா பால் என்னாகும்? என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு கேட்கிறது. மொத்த மார்க்கெட்டையும் மோரே எடுத்துக் கொள்கிறதாம்.
மசாலா பாலும் இரண்டு விலைகளில் உள்ளது.
30 ரூபாய் - 210 மில்லி
15 ரூபாய் - 100 மில்லி.
காலை இரவு என இரண்டு ஷிஃப்டுகளிலும் மோர் விற்றவர் கொஞ்ச நாட்களாக, இரவில் மட்டும் விற்கிறாராம். இரவு 11-11.30 மணி வரை இவருக்கு திருவான்மியூர் ஆர்.டி.ஓ பீச்சில் இருக்க அனுமதி உண்டு. அதன் பின்னர் காலை 3.30 மணி வரை மெயின் ரோட்டில் விற்பாராம். ஆவடி, ரெட்ஹில்ஸில் இருந்தெல்லாம் தனக்கு வாடிக்கையாளர்கள் உண்டு என பெருமையாகக் கூறுகிறார் மோர் தாத்தா.
தன் படிப்பைப் பற்றிக் கேட்டவுடன்,
"7ஆவது வரைப் படிச்சேன். நான் 7 படிக்கும் போது என் வாத்தியார் என்ன ஒரு நாள் செம்மயா அடிச்சாரு. அவ்வளோ சேட்டை பையன் நான். 8 ஆம் வகுப்பு வர்றப்போ, அவரு ஹெட்-மாஸ்டர் ஆனதால, நான் பயத்துலயே ஸ்கூல் போகல. பாம்பேல மாமா மளிகை கடையில வேலை பார்த்தேன். எனக்கு படிப்பு நல்லா ஏறும். ஆனா படிக்கல. நான் மட்டும் படிச்சிருந்தா இப்போ சென்ட்ரல் கவர்மெண்ட் வேலையில இருந்திருப்பேன்." என்கிறார் தீயாக.
பல பேர் இவருக்குப் போட்டியாக கடை போட்டும், தன் மோரின் தரத்தால் அவர்களை வெற்றி கண்டார். கல்யாண வீடுகளிலும், தேனீர் விடுதிகளிலும் எவ்வலவோ காடு கொடுத்து கூப்பிட்டும்,தனக்குத் தானே முதலாளியாய் இருக்கிறார்.
தாத்தாவின் மாத வருமானம் பருவநிலை பொறுத்து 20-25 ஆயிரம் வரை மாறுபடுமாம். தன் இரு மகன்களும் படித்து நல்ல வேலையில் அமர வேண்டும் என்பதே அவரது கனவாக உள்ளது. சுண்டல், பஞ்சு மிட்டாய், ஐஸ்-கிரீம் என விற்கும் கடற்கரைச் சாலையில், வித்தியாசமாய் மோர் விற்று, வெற்றி கண்டு வரும் தாத்தாவின் மாற்று சிந்தனையை என்ன'னு அப்ரிசியேட் பண்றது?
இந்த "மோர்" ஐடியா எப்படி வந்துது தாத்தா'னு கேட்டா, "அப்பெல்லாம் சரவண பவன்ல இப்படி மோர் தருவாங்கப்பா" என்கிறார் அசால்ட்டாக. பழைய ஐடியாவுக்கு சிறப்பாக பட்டி டிங்கரிங் பார்த்து இன்று தன் வாழ்கையை சிறப்பாக நடத்தி வருகிறார் ராமஜெயம்.
"ஐடியா கெடக்கு நம்மல சுத்தி, நாம தான் யூஸ் பண்ணனும் நம்ம புத்தி" ன்னு பஞ்சடிச்சுட்டு வரட்டான்னு வீர நட கட்டுறாரு மோர் தாத்தா.
மு.சித்தார்த் (மாணவப் பத்திரிகையாளர்)
படங்கள் : ஜெ. விக்னேஷ் (மாணவப் பத்திரிக்கையாளர்)
0 comments:
Post a Comment