இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, March 9, 2014

வறட்சியிலும் வளமான வருமானம்! மகசூல்


 நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் மின்சாரம்; தண்ணீர் வற்றிய கிணறு; தலைவிரித்தாடும் வேலையாட்கள் தட்டுப்பாடு; இவற்றுக்கு இடையில்... வானத்தையும், வருண பகவானையும் நம்பி, மானாவாரி பூமியில் விவசாயம் செய்வது என்பதே பெரும் சாதனைதான். இந்த நிலையில், 26 ஏக்கர் நிலத்தில் சப்போட்டா, மா, நெல்லி, கொய்யா என பழவகைகளை சாகுபடி செய்து, நல்ல வருமானத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்... திருவண்ணாமலை மாவட்டம், வடக்குமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந் திரன்-மேகலா தம்பதி என்பது, நம்பிக்கையூட்டும் விஷயம்தானே!
வறண்டு கிடக்கும் நிலங்களுக்கு, மத்தியில் செழிப்பாக இருந்த தோட்டத்தில் காய்த்துக்குலுங்கிய நெல்லி மரங்களுக்கிடையில் ராஜேந்திரன்-மேகலா தம்பதியைச் சந்தித்தோம். முதலில் பேசிய ராஜேந்திரன், ''எனக்கு சொந்த ஊர் கிருஷ்ணகிரி பக்கத்துல சின்னமுத்தூர். அஞ்சு ஏக்கர் நிலத்துல கடலை, வெத்தலைக் கொடிக்கால், கேழ்வரகு மாதிரியான பயிர்களை எங்கப்பா சாகுபடி செய்துட்டிருந்தார். நானும், விவசாயம் பார்த்துக்கிட்டே ஐ.டி.ஐ. வரைக்கும் படிச்சேன். 80-ம் வருஷம் திருச்சி 'பெல்’ நிறுவனத்துல வேலைக்குச் சேர்ந்தேன். ரெண்டு வருஷத்துல ராணிப்பேட்டையில 'பெல்’ நிறுவனத்துக்கு மாறுதலாகி வந்தேன். குடும்பம், குழந்தைகளோட படிப்புனு பலவிதமான எண்ணங்கள்ல மூழ்கி இருந் தாலும், விவசாயம் பார்க்கணுங்குற எண்ணம் மட்டும் மனசுக்குள்ள இருந்து போகல.
அதிகமான மாசுபட்ட வாணியம்பாடி!
92-ம் வருஷம் வேலை பார்க்கும்போது கம்பெனியில விபத்து ஏற்பட்டு, கையில ரெண்டு விரல் போயிடுச்சு. அதுக்காக ஓய்வுல இருந்தப்ப... விவசாயத்துல இறங்கணும்கிற எண்ணம் அதிகமாகிடுச்சு. ரெண்டு வருஷமா நிலம் தேடி.... 96-ம் வருஷம் 30 ஏக்கர் நிலத்தை இங்க வாங்கினேன். தனியார் பள்ளியில ஆசிரியரா இருந்த மனைவி, அந்த வேலையை விட்டுட்டு விவசாயத்துல என்கூட கைகோத்தாங்க.
மண்ணைத் திருத்த நெல் சாகுபடி!
இந்தப் பகுதி முழுக்க மானாவாரி பூமிதான். அதனால ரசாயன உரம், பூச்சிக்கொல்லியால மாசுப்படாத நிலம்தான். இதை திருத்தி, கிணறு வெட்டினேன். முதல்போகத்துல நெல் விவசாயம் செஞ்சு, நிலத்தைப் பண்படுத்தினேன். பிறகு, நிலத்தோட மண் மாதிரிகளை ஆய்வு செஞ்சப்ப, செம்மண் கலந்த சரளை மண்ணுக்கு சப்போட்டா, மா, நெல்லி, கொய்யா மரங்கள் நல்லா வளரும்னு சொன்னாங்க. நிலம் மாசுபடாம இருக்கணும்னா... தாத்தா, அப்பா காலத்து இயற்கை வழி விவசாயம்தான் சிறந்ததுனு புரிஞ்சுக்கிட்டு, அதையே செயல்படுத்தினேன்.
தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வான சொட்டுநீர்ப் பாசனம்!
மொத்தம் 30 ஏக்கர் நிலம். 18 ஏக்கர்ல 1,000 சப்போட்டா செடிகளையும், இடைவெளியில 800 நெல்லிச் செடிகளையும்; 8 ஏக்கர்ல 600 மா  கன்றுகளையும், அதுக்கு இடையில 600 கொய்யாச் செடிகளையும் சாகுபடி செஞ்சுருக்கேன். மீதி நாலு ஏக்கர் நிலத்துல நெல், கடலை, கொள்ளு மாதிரியான பயிர்களை சாகுபடி செய்றேன்.
ஆரம்பத்துல பழச்செடிகளுக்கு என்னோட கிணத்துல இருந்த தண்ணீர் போதுமானதா இல்லை. பக்கத்து நிலத்து விவசாயிகிட்ட இருந்து காசுக்கு தண்ணீர் வாங்கி பாய்ச்சித்தான் செடிகளை வளர்த்தேன். தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க எல்லா பழமரங்களுக்கும் சொட்டுநீர்ப் பாசனம்தான் நடக்குது. ஆரம்பத்துல கிடைச்ச அளவுக்குகூட ஆட்கள் கிடைக்கல. இப்ப என்னோட அப்பா, அம்மா ரெண்டு பேரும்தான் நிலத்தை முழுமையா பராமரிப்பு செய்யுறாங்க. நானும், என்னோட மனைவியும் வாரத்துல ரெண்டு மூணு நாட்கள் நிலத்துக்கு வந்துட்டுப் போறோம். மனைவி, நெல்லிக்காயை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யுறாங்க.
விற்பனைக்கு நண்பர்களே போதும்!
இயற்கை முறையில மரங்களை பராமரிப்பு செய்யறதால, இடுபொருட்களோட செலவு, ஆட்கள் செலவு குறைவா இருக்கு... நல்ல வருமானமும் கிடைக்குது. பழமரங்கள் காய்க்க ஆரம்பிச்ச பிறகு, தோட்டம் முழுக்க விதம்விதமான பறவைகள் வந்துடுச்சு. அதுங்களும் தோட்டத்துக்கு உரத்தைக் கொடுக்குதுங்க.
ஆரம்பத்துல விளைஞ்ச பொருட்களை சென்னை 'சண்டே மார்க்கெட்’டுக்குக் கொண்டு போனேன். போக்குவரத்துச் செலவுகள் அதிகமானதால நண்பர்கள் வட்டாரத்துலயும், தோட்டத்துலயும் நேரடியா விற்பனை செய்றேன்'' என்று, ராஜேந்திரன் முடிக்க, சாகுபடிப் பாடத்தை நடத்த ஆரம்பித்தார் அவருடைய மனைவி மேகலா.
சப்போட்டாவுக்கு நெல்லி... மாவுக்கு கொய்யா...
'30 அடிக்கு 30 அடி இடைவெளியில் சப்போட்டா செடிகளை நடவு செய்ய வேண்டும். இரண்டு சப்போட்டா செடிகளுக்கிடையில் ஒரு நெல்லிச் செடியை நடவு செய்ய வேண்டும். 25 அடிக்கு 25 அடி இடைவெளியில் மா செடிகளை நடவு செய்துவிட்டு, இரண்டு செடிகளுக்கிடையில் ஒரு கொய்யா செடியை நடவு செய்ய வேண்டும். நடவு செய்வதற்கு, ஐப்பசி மாதம் சிறந்தது. 3 கன அடிக்கு குழி எடுத்து, ஒரு மாதம் குழிகளை ஆறப்போட வேண்டும். பின்னர், 10 கிலோ எருவோடு மேல்மண்ணைக் கலந்து முக்கால் பாகத்துக்குக் குழியை நிரப்ப வேண்டும். ஒட்டுச் செடிகளாக இருந்தால், ஒட்டுப்பகுதியானது, தரைப்பகுதியில் இருந்து அரையடி மேலே இருப்பது போன்று நடவு செய்து, உயிர் தண்ணீர் கொடுக்க வேண்டும்.
சப்போட்டாவில் கிரிக்கெட், பி.கே.எம்-1, பி.கே.எம்-2 ஆகிய ரகங்களும்; நெல்லியில் என்.ஏ-7, காஞ்சன், பி.எஸ்.ஆர் ஆகிய ரகங்களும்; மாவில் அல்போன்சா, பங்கனப்பள்ளி, இமாம்பசந்த், மல்லிகா, செந்தூரா போன்ற ரகங்களும்; கொய்யாவில் அலகாபாத், ஹைதராபாத், லக்னோ-49 ஆகிய ரகங்களும் சாகுபடி செய்வதற்கு சிறந்தது.
வளர்ச்சியைக் கூட்டும் பஞ்சகவ்யா!
பழச்செடிகளை நடவு செய்த 3 முதல் 4 ஆண்டுகள் வரையில் ஊடுபயிராக நிலக்கடலை, உளுந்து, தர்பூசணி மாதிரியான குறுகிய காலப்பயிர்களை சாகுபடி செய்யலாம். நான்கு ஆண்டுகள் வரையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை 4 கிலோ எரு, 1 கிலோ மண்புழு உரம், தலா 250 கிராம் வீதம் கடலைப் பிண்ணாக்கு, புங்கன் பிண்ணாக்கு, இலுப்பைப் பிண்ணாக்கு, வேப்பன் பிண்ணாக்கு ஆகியவற்றை  ஒன்றாகக் கலந்து ஒவ்வொரு செடியைச் சுற்றிலும் வைத்துப் பாசனம் செய்ய வேண்டும்.
6 மாதங்களுக்கு ஒருமுறை மரங்களின் வளர்ச்சிக்காக டேங்க் (12 லிட்டர்) ஒன்றுக்கு 1 லிட்டர் பஞ்சகவ்யாவை தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு சுமார் 10 டேங்க் தெளிக்க வேண்டியிருக்கும்.
காய்ப்புக்கு வந்த மரங்களுக்கு, 6 மாதங்களுக்கு ஒருமுறை செடிகளுக்கிடையில் டிராக்டர் மூலம் களையெடுத்து, 10 கிலோ எரு, 2 கிலோ மண்புழு உரம், தலா 1 கிலோ வீதம் கடலைப் பிண்ணாக்கு, புங்கன் பிண்ணாக்கு, இலுப்பைப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை  ஒன்றாகக் கலந்து ஒவ்வொரு செடியைச் சுற்றிலும் மண் வைத்து அணைத்து, பாசனம் செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை டேங்குக்கு (12 லிட்டர்) 1 லிட்டர் பஞ்சகவ்யா, 500 மில்லி வேப்பெண்ணெய் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து தெளித்துவிட வேண்டும். மேலும், 200 லிட்டர் பஞ்சகவ்யா, 2 லிட்டர் குணபசலம், 1 லிட்டர் ஆவூட்டம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒவ்வொரு மரத்துக்கும், ஒரு லிட்டர் வீதம் ஊற்றிவிட வேண்டும். பூச்சித்தாக்குதல் இருந்தால் மட்டும், பூச்சிவிரட்டி தெளிக்கலாம்.
பிப்ரவரியில் சப்போட்டா... ஜூனில் நெல்லி...
நடவு செய்த மூன்றரை முதல் நான்கு ஆண்டுகளில் மரங்கள் காய்க்கத் துவங்கிவிடும். ஒவ்வொரு ஆண்டும்... சப்போட்டா மரங்கள்... நவம்பர் முதல் டிசம்பர் மாதங்களில் பூவைத்து, பிப்ரவரி முதல் மார்ச் மாதங்களில் காய்கள் அறுவடைக்கு வரும். நெல்லி மரங்களைப் பொருத்தவரைப் பிப்ரவரி முதல் மார்ச் மாதங்களில் பூவைத்து, ஜூன் முதல் ஜூலை மாதங்களில் அறு வடைக்கு வரும். மாமரங்கள் பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதங்களில் பூவைத்தால்... ஏப்ரல் முதல் மே மாதங்களில் அறுவடை செய்யலாம். கொய்யா மரங்கள்... ஏப்ரல் முதல் மே மாதங்களில் பூவைத்தால்... ஜூன் முதல் ஜூலை மாதங்களில் காய்களை அறுவடை செய்யலாம்.’ வறட்சிப் பகுதி என்பதால், கொய்யா ஒரு சீஸனில் மட்டுமே காய்க்கிறது.
26 ஏக்கரில்... 9 லட்சம்!
சாகுபடிப் பாடத்தை மேகலா முடிக்க, வரும்படிப் பாடத்தை ஆரம்பித்த ராஜேந்திரன், ''வறட்சியில் சேதாரமான மரங்கள் போக மீதம் உள்ள மரங்களில்... 900 சப்போட்டா மரங்களில் இருந்து, 20,000 கிலோ சப்போட்டா கிடைக்கும். சராசரியாக கிலோ 15 ரூபாய் வீதம் விற்பனை செய்வதன் மூலம்... 3 லட்சம் ரூபாய் கிடைக்கும். 300 மா மரங்களில் இருந்து சராசரியாக 15 ஆயிரம் கிலோ காய்கள் கிடைக்கும். கிலோ 15 ரூபாய் வீதம் விற்பனை செய்தால், 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 600 கொய்யா மரங்களில் இருந்து, 11 ஆயிரம் கிலோ கொய்யா அறுவடை செய்யலாம். கிலோ 10 ரூபாய் வீதம் விற்பனை செய்தால்... 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 500 நெல்லி மரங்களில் இருந்து 7 ஆயிரத்து 500 கிலோ கிடைக்கிறது. ஒரு கிலோ 15 வீதம், 3 ஆயிரத்து 500 கிலோ விற்பனை செய்வதன் மூலம் 52 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கிறது. மீதமுள்ள 4 டன் நெல்லிக் காய்களைப் பதப்படுத்தி... தேன் நெல்லி, இஞ்சி நெல்லிக்காயாக மதிப்புக்கூட்டினால், ஒரு டன் அளவுக்கு மதிப்புக்கூட்டிய நெல்லிக்காய் கிடைக்கும். கிலோ 250 ரூபாய் வீதம், ஒரு டன் மூலமாக 2 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஆக மொத்தம், 26 ஏக்கர் பழமரங்களில் இருந்து, 9 லட்சத்து, 37 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். களையெடுப்பு, உரமேலாண்மை, பறிப்புச் செலவுகளாக ரூபாய் 4 லட்சம் போக... 5 லட்சத்து, 37 ஆயிரம் வரை லாபமாகக் கிடைக்கும்'' என்றார் உற்சாகமாக!
தொடர்புக்கு, ராஜேந்திரன், செல்போன்: 94436-25731

தேன்நெல்லி!
நெல்லிக்காய்களை பாத்திரத்தில் இட்டு, பிளவு வரும் அளவுக்கு, அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும். அதன் பிறகு, இளம் சூட்டில், நெல்லிக்காய் கொட்டைகளை நீக்கம் செய்து, துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். ஒரு கிலோ நெல்லிக்காய்க்கு ஒரு கிலோ வெல்லம் என்ற கணக்கில் பாகு தயாரித்து ஆற வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, அந்தப் பாகில் நெல்லிக்காயைக் கொட்டிக் கிளறி இரண்டு நாட்கள் ஊறவைக்க வேண்டும். பாகு நீர்த்துத் தண்ணீர் போன்று மாறியிருக்கும். பாத்திரத்தில் இருக்கும் நெல்லிக்காயை மாலை வரை, நிழலில் உலர்த்தி விட்டு, மீதம் இருக்கும் தண்ணீர் போன்ற திரவத்தைக் கொதிக்க வைத்து, ஆற வைக்க வேண்டும். மீண்டும் அந்தத் திரவத்தில் நெல்லிக்காயை இட்டு, ஓர் இரவு ஊறவைக்க வேண்டும். மறுநாள் தண்ணீரை வடித்து, வெயிலில் இரண்டு நாட்கள் காய வைத்து, அடுத்த மூன்று நாட்கள் நிழலில் காய வைக்க வேண்டும். இப்போது உலர்ந்த நெல்லிக்காய்த் துண்டுகளாக இருக்கும். அடுத்து, 2 கிலோ நெல்லித்துண்டுகளுக்கு, ஒரு லிட்டர் தேன் என்ற கணக்கில் கலந்து ஊறவைத்தால் ... அடுத்த 24 மணிநேரத்தில் தேன்நெல்லி தயார்.
இஞ்சிநெல்லி!
தேன்நெல்லி தயாரிக்கும் அதே முறையில் தயார் செய்ய வேண்டும். இதில் வெல்லப்பாகு தயார் செய்யும்போது, 2 கிலோ நெல்லிக்காய்க்கு 250 கிராம் இஞ்சி என்றக் கணக்கில் சாறு எடுத்து, அவற்றை கொதிக்க வைத்து, ஆற வைத்து கலந்துகொள்ள வேண்டும். அடுத்த 24 மணிநேரத்தில் இஞ்சி நெல்லி தயார். இதில் தேன் பயன்படுத்தத் தேவையில்லை.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites