ஒட்டன்சத்திரத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் நெடுஞ்சாலையில் செம்பட்டி அருகில் அமைந்துள்ளது போளியம்மனூர். இவ்வூருக்குள் நுழையும்போதே மோர்மிளகாயின் வாசம் காற்றில் கலந்து நாசியைத் துளைக்கிறது. வாசனையைப் பிடித்துக்கொண்டே ஊருக்குள் சென்றால், ஊரில் காணப்படும் வெட்டவெளியெல்லாம் வத்தல் மயம்தான். மோர்மிளகாய் வத்தலைதான் இந்த ஊரில் அதிகமானவர்கள் உற்பத்தி செய்கின்றனர். மோர்மிளகாய் வத்தலில் இரண்டு வகை உண்டு. அவை, சம்பா மிளகாய், குண்டு மிளகாய்.இத்துடன் சேர்த்து இங்கு கத்தரி, மாங்காய், மனத்தக்காளி, சுண்டைக்காய், வெண்டைக்காய், பாகற்காய், கொத்தவரங்காய் என அனைத்து வகையான வத்தல்களும் தயார் செய்கின்றார்கள்.
ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன்தான் இத்தொழிலை இவ்வூர் மக்கள் செய்யத் தொடங்கியுள்ளனர். இதற்கு காரணம், மாணிக்கம் செட்டியார், சுப்பிரமணியம் செட்டியார் என்ற இருவர்தான். இவர்கள் வேலைக்குச் சென்ற ஊரில் இந்த தொழில் செய்வதைப் பார்த்துவந்து இந்த ஊரில் இத்தொழிலை செய்யத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கவும் இவ்வூர் முழுக்க இத்தொழிலை செய்யத் தொடங்கிவிட்டனர். இப்போது எல்லாத் தரப்பு மக்களும் இத்தொழிலை செய்கின்றனர்.
மோர்மிளகாய்க்கு முக்கியத் தேவை மோர். இது அருகில் உள்ள ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து எங்களுக்கு எளிதாகக் கிடைக்கிறது. நாங்கள் பச்சையாக வாங்கும் காய்கறிகளை ஊர்மக்களிடம் தந்துவிடுவோம். அவர்கள் அதை வத்தலாக மாற்றித் தருவார்கள் மேலும், அதற்குத் தேவையான மோர், உப்பு என எல்லா பொருட்களையும் தந்துவிடுவோம். ஒரு மூட்டை வத்தல் உற்பத்தி செய்துதந்தால் அதற்கு நூறு ரூபாய் தருகிறோம்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் மோர்மிளகாய் வத்தல் இரண்டு மாதம் வரை கெடாமல் இருக்கும். மற்ற வத்தல்கள் வருடக்கணக்கில் கெடாமல் இருக்கும். இங்கு கிடைக்கும் வத்தல்களை நன்றாக காய வைப்பதால் எண்ணெய்யில் வறுக்கும்போது அதிகமாக எண்ணெய் குடிக்காது. இந்த ஊரில் மொத்தம் 300 குடும்பங்கள் இந்த தொழிலில் ஈடுபடுகின்றன. இதன் மூலம் மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர் இவ்வூர் மக்கள்.
இங்கிருந்து தமிழ்நாடு முழுமைக்கும் வத்தல்களை அனுப்புகிறோம். மேலும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற வெளி நாடுகளுக்கும் வத்தல்களை ஏற்றுமதி செய்கிறோம். இத்தொழில் நிலைத்திருக்க காரணம், இங்கு கிடைக்கும் நல்ல தண்ணீர் வசதியும், அனுபவ அறிவும், இடவசதியும்தான். வத்தல் காயவைக்க இடம் அதிகம் தேவைபடுவதாலேயே சமீப காலங்களாக நிலத்தின் மதிப்பு இங்கு அதிகமாகியுள்ளது' என்றார் கதிர்வேல்.
இந்த வத்தல்களுக்கு சில மருத்துவகுணங்களும் இருப்பதாகச் சொல்கிறார்கள் இங்குள்ளவர்கள். பாகற்காய் சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்தாகவும், மனத்தக்காளி சளிக்கும், வெண்டைக்காய் ஞாபக சக்திக்கும் உணவே மருந்தாகும் என்பதற்கு ஏற்ப உதவுகின்றன.
இனி வத்தல் என்றால் போளியம்மனூர் உங்கள் நினைவுக்கு வரட்டும்!
1 comments:
I want Kathivel contact Number please
Post a Comment