இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, June 5, 2013

பலே வருமானத்துக்கு பட்டு வளர்ப்பு...




ஒரு ஏக்கர்... ஒரு மாதம்...30,000
ஜி.பழனிச்சாமி, படங்கள் : க.ரமேஷ்
''விவசாயத்தோடு... அதுசார்ந்த உபதொழில்களையும் சேர்த்து செய்தால், நிச்சயமாகப் பொருளாதார ரீதியில் பெருவெற்றிதான்'' என்பது விவசாயப் பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கருத்து! இதைச் சரியாகப் புரிந்து கொண்ட பலரும் ஆடு, மாடு, கோழி, பட்டுப்புழு... என வளர்த்து கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார்கள். ''நானும் அவர்களின் ஒருவன்'' என்று இங்கே சந்தோஷம் பகிர்கிறார்...
வெண்பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்து சிறந்த வருமானம் பார்த்து வரும், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம் காசிலிங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து. இதற்காக இவரைப் பாராட்டி, '2011 மற்றும் 2012-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான சிறந்தப் பட்டுக்கூடு உற்பத்தியாளர்' என்கிற விருதை கொடுத்திருக்கிறது தமிழக அரசின் பட்டு வளர்ச்சித் துறை!
வழிகாட்டிய மனைவி!
வீடு தேடிச் சென்றபோது, பளீர் வெண்மையில் மின்னிக் கொண்டிருந்த பட்டுக்கூடுகளைச் (கக்கூன்) சேகரித்துக் கொண்டிருந்த செல்லமுத்து, ''வெங்காயம், மிளகாய், மக்காச்சோளம்னு வெள்ளாமை செஞ்சுக்கிட்டு இருந்தேன். அதுல நிரந்தரமான வருமானம் கிடைக்கல. லிட்டர், லிட்டரா பூச்சிக்கொல்லியும் மூட்டை, மூட்டையா உரத்தையும் வாங்கிப் போட்டு, கடனாளி ஆனதுதான் மிச்சம். ஆனா, விவசாயத்தை விட்டா எனக்கு வேற தொழிலும் தெரியாது. இந்த நிலையில எனக்கு கல்யாணமும் ஆயிடுச்சு. மனைவி பாப்பாத்தியோட ஊர் நிறையூர். அங்க, கிட்டத்தட்ட எல்லா விவசாயிகளுமே பட்டுக்கூடு உற்பத்தி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. என் மனைவி வீட்டுலயும் பட்டுக்கூடு உற்பத்திதான். அதனால, அதைப்பத்தின நெளிவு, சுளிவு அத்தனையும் அவங்களுக்குத் தெரிஞ்சுருந்தது. கல்யாணமாகி வந்ததுமே, பாப்பாத்தியோட சேர்ந்து, நானும் பட்டுப்புழு வளக்க ஆரம்பிச்சுட்டேன்.
செழிப்பு தரும் பட்டுப்புழு!
89-ம் வருஷத்துல இருந்து பட்டுப்புழு வளர்த்துக்கிட்டு இருக்கோம். மல்பெரிச் செடிகளை நடவு செஞ்சுட்டு, வீட்டோட ஒரு பகுதியையே பட்டுப்புழு வளர்ப்பு மனையா மாத்திட்டோம். நான், ரெண்டு தடவை சிறந்த பட்டு விவசாயிக்கான மாநில விருது வாங்கியிருக்கேன்னா... அதுக்கு என் மனைவியோட உழைப்பும், தொழில்நுட்ப அறிவும்தான் காரணம். என்னோட ரெண்டு பசங்களையும் நல்ல இன்ஜினீயரிங் காலேஜ்ல சேத்துருக்கேன். இந்தஅளவுக்கு நான் செழிப்பா இருக்கறதுக்குக் காரணம், பட்டுப்புழு வளர்ப்புதான்'' என்று முன்னுரை கொடுத்து நிறுத்த, தொடர்ந்தார் அவருடைய மனைவி பாப்பாத்தி.
சுலபமாக வளர்க்கலாம்!
''ஆரம்பத்துல மஞ்சள் நிறக் கூடுகளைத்தான் உற்பத்தி செஞ்சோம். அதைவிட வெள்ளைக்கூடுகளுக்கு அதிக விலை கிடைக்கறதால... ஆறு வருஷமா வெள்ளைக்கூடுதான் உற்பத்தி பண்றோம். விவசாயம் சார்ந்தத் தொழில்கள்ல கொறஞ்ச நாள்லயே வருமானம் தரக்கூடியது, பட்டுக்கூடு உற்பத்திதாங்க. ஆனா, பட்டு வளர்ச்சித்துறைக்காரங்க சொல்லித் தர்ற தொழில்நுட்பத்தை சரியாக் கடைபிடிச்சு, நல்ல தரமான கூடுகளை உற்பத்தி பண்ணினாத்தான் லாபம் சம்பாதிக்க முடியும். முன்னயெல்லாம்... ஒரு நாளைக்கு அஞ்சு வேளைக்கு இலைகளைப் பொடிப்பொடியா நறுக்கி புழுக்களுக்குக் கொடுக்கணும். அதனால, நாள் முழுக்க வேலை பாக்க வேண்டியிருக்கும். இப்போ, எளிமையான உபகரணங்கள் வந்துட்டதால, வேலை குறைஞ்சுடுச்சு. இப்போ வளர்ப்பு முறைகளும் மாறிடுச்சு. அதனால, வீட்டு வேலை, மத்த விவசாய வேலை எல்லாத்தையும் பாத்துக்கிட்டே பட்டுப்புழுவையும் வளத்துடலாம்'' என்று சிறிது இடைவெளிவிட, பட்டுப்புழு வளர்ப்பு பற்றிய விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தார், செல்லமுத்து.
ஒரு ஏக்கரில் மல்பெரி... 100 கிலோ கூடு உற்பத்தி!
'ஒரு ஏக்கர் நிலத்துக்கு 10 டிராக்டர் தொழுவுரம், 5 டன் கோழி எரு ஆகியவற்றைக் கொட்டி இறைத்து, நன்றாக உழவு செய்ய வேண்டும். 3 அடி இடைவெளியில் பார் அமைத்து, அதில் 5 அடி இடைவெளியில் மல்பெரிச் செடிகளை நடவு செய்ய வேண்டும். பட்டு வளர்ச்சித்துறை மூலமாக மானிய விலையில் நாற்றுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் 4 ஆயிரத்து 800 செடிகளை நடவு செய்ய முடியும். நடவு செய்த பிறகு சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து, வாரம் ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். சொட்டுநீர் அமைக்கவும் மானியம் உண்டு. களை மற்றும் பயிர் பராமரிப்பு முறைகளை சரியாக மேற்கொண்டு வந்தால், நடவு செய்த 90-ம் நாளில், செடிகள் ஆளுயரத்துக்கு வளர்ந்துவிடும்.
இந்தச் செடிகளில் 20 ஆண்டுகள் வரை தொடர்ந்து மகசூல் எடுக்கலாம். 25 நாட்களுக்கு ஒரு முறை இலைகளைப் பறிக்கலாம். நிலத்தைப் பாதியாகப் பிரித்துக் கொண்டு சுழற்சி முறையில் முறையில் அறுவடை செய்தால், தொடர்ந்து ஆண்டு முழுவதும் இலைகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். பட்டுப்புழுக்களுக்கு முக்கியத் தீவனம் மல்பெரி இலைகள்தான் என்பதால், இவை தரமாக இருந்தால்தான் புழுக்களும் ஊக்கமுடன் வளர்ந்து, அதிக எடையுள்ள கூடுகளை உற்பத்தி செய்யும். 100 முட்டைத் தொகுதிகளில் உருவாகும் புழுக்களுக்கு, மொத்தம் 700 கிலோ அளவுக்கு இலை தேவை. இதற்கு, ஒரு ஏக்கர் நிலத்தில் மல்பெரி வளர்க்க வேண்டும். 100 முட்டைத் தொகுதிகள் மூலம் மாதம் 100 கிலோ பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்ய முடியும்.
தட்பவெப்பம்... கவனம்!
தீவனம் தயாரான பிறகு நமக்குத் தேவையான அளவில் முட்டைத் தொகுதிகளை பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தில், வாங்கி அடை வைக்க வேண்டும். அடை வைக்கும் இடத்துக்கு 'இளம் புழு வளர்ப்பு மனை’ என்று பெயர். மனையைச் சுற்றிலும் கொசு வலை அடித்து தென்னங்கீற்று வேய்ந்து, மனைக்குள் தட்பவெட்பம் சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். முட்டை பொரிந்து வெளிவரும் புழுக்களை, 8-ம் நாள் வரை இளம்புழு வளர்ப்பு மனையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். தினமும் காலையிலும், மாலையிலும் இளம் வயது செடிகளில் உள்ள கொழுந்து இலைகளைப் பறித்து உணவாக வைக்க வேண்டும். முதல் எட்டு நாட்களுக்கு இளம்புழுக்களுக்குத் தனிக்கவனம் தேவை. அவ்வளவு நுணுக்கமாக, பார்க்க ஆள் வசதி இல்லையென்றால், 'சாக்கி சென்டர்’ என்று அழைக்கப்படும் இளம்புழு வளர்ப்பு மையங்களில் இருந்து எட்டு நாட்கள் வயதுடைய புழுக்களை வாங்கி வந்து வளர்க்கலாம் (இவர், தற்போது இளம்புழுக்களை வாங்கி வந்துதான் வளர்க்கிறார்).
8 நாட்கள் வயதுடைய புழுக்களை அதற்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் புழு வளர்ப்பு தாங்கிகளில்விட வேண்டும். கட்டில் போல இருக்கும் இந்தத் தாங்கிகளில் 'நெட்ரிக்கா’ எனும் பிளாஸ்டிக் விரிப்பை விரிக்க வேண்டும். இந்த விரிப்பில் நூற்றுக்கணக்கான அறைகள் இருக்கும். அவற்றின் மூலமாகத்தான், பட்டுபுழுக்கள் தன்னைச் சுற்றி கூடுகளைக் கட்டும். வளரும் புழுக்களுக்கு தினமும் காலையிலும், மாலையிலும்... ஒரு மாத வயதுக்கு மேல் உள்ள செடிகளில் இருந்து முற்றிய இலைகளைக் காம்புடன் பறித்து உணவாக வைக்க வேண்டும். புழுக்கள், இலைகளை மட்டும் சாப்பிட்டு விட்டு, காம்புகளை ஒதுக்கி விடும். பிறகு, காம்புகளை அப்புறப்படுத்த வேண்டும். புழுக்கள் 27 நாட்கள் வயதில், கூடுகளை உருவாக்கிக் கொள்ளும். இதுதான் அறுவடை தருணம். அறுவடை முடிந்த பிறகு, வளர்ப்பு மனை மற்றும் தளவாடங்களை சுத்தம் செய்து, பிளீச்சிங் பவுடர் போட்டுக் கழுவி, அடுத்தத் தொகுதியை வளர்க்க ஆரம்பிக்க வேண்டும்.’
வளர்ப்பு முறைகளைச் சொல்லிய செல்லமுத்து நிறைவாக, வருமானம் பற்றிச் சொன்னார்.
ஒரு ஏக்கர்... இரண்டு ஆட்கள்... மாதம் 30 ஆயிரம்!
''100 கிலோ பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்யறதுக்கு இரண்டு வேலை ஆட்களே போதும். நல்ல தண்ணியோட, ஒரு ஏக்கர் நிலம் இருந்தா... கணவன், மனைவி இரண்டு பேரும் வேலை செஞ்சாலே... மாசம் 100 கிலோ கூடு உற்பத்தி செஞ்சு முப்பதாயிரம் ரூபாய் வரைக்கும் சம்பாதிச்சுட முடியும். நான் ரெண்டு ஏக்கர்ல மல்பெரி சாகுபடி செய்றேன். மாசம் 200 கிலோ கூடு உற்பத்தி செய்யுறதுல, குறைஞ்சபட்சமா 60 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் பாக்குறேன்.
நான் கோயம்புத்தூர்ல இருக்குற பட்டுக்கூடு விற்பனை அங்காடியிலதான் விக்கிறேன். இங்க லீவு நாட்கள் தவிர எல்லா நாட்கள்லயும் ஏலம் நடக்கும். இப்போ ரெண்டு வருஷமா ஒரு கிலோ பட்டுக்கூடு 300 ரூபாய்க்கு குறையாம ஏலம் போயிட்டுருக்கறதால... நல்ல வருமானம் கிடைக்குது'' என்று சந்தோஷமாகச் சொல்லி விடைகொடுத்தார், செல்லமுத்து.
தொடர்புக்கு,
செல்லமுத்து, செல்போன்: 96007-95002.
பி. முத்தைய்யா, செல்போன்: 73735-25252.
உதவி இயக்குநர், ஈரோடு,
தொலைபேசி: 0424-2339664

மானியங்களை அள்ளி வழங்குது மத்திய அரசு!
ஈரோடு மண்டல பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பக்கிரிசாமியை சந்தித்தபோது, பட்டுப்புழு வளர்ப்பு பற்றிய சில விவரங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
''இந்தியாவில் பட்டு நூல் தேவை அதிகளவில் உள்ளது. இந்தியாவுக்கு ஆண்டுக்கு 29 ஆயிரம் மெட்ரிக் டன் கச்சாப்பட்டு தேவை. ஆனால், இங்கு 20 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டும்தான் உற்பத்தியாகிறது. அதனால், சீனாவில் இருந்து கச்சா பட்டு இறக்குமதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 3 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்குத் தேவை இருந்தாலும், அதில் பாதியளவுதான் உற்பத்தியாகிறது. அதனால், தமிழகத்தில் பட்டுக்கூடு உற்பத்தி நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலாக இருக்கிறது. இந்திய அளவில், நான்கு ஆண்டுகளாக வெண்பட்டு உற்பத்தியில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது.
இத்தொழிலுக்கு மத்திய-மாநில அரசுகள் மானியத்தை அள்ளி வழங்குகின்றன. நாற்று, நடவு, இலைப்பறிப்புக் கருவி, விசைத்தெளிப்பான், பட்டு வளர்ப்பு மனை, மற்றும் தளவாடங்கள், சொட்டுநீர் அமைப்பு என்று அனைத்துக்கும் 75% வரை மானியம் உண்டு. சிறு-குறு விவசாயிகளுக்கு 100% மானியத்தில் சொட்டுநீர் வசதியும் செய்து தரப்படுகிறது. வங்கிக்கடன் வசதியோடு, இயற்கைச் சீற்றங்கள், நோய்கள் போன்றவற்றில் ஏற்படும் திடீர் இழப்பை ஈடுசெய்ய, காப்பீடு வசதியும் உண்டு. மல்பெரி வயல் வரப்புக்களில் மரக்கன்றுகள் நடவும் மானியம் உண்டு'' என்றார், பக்கிரிசாமி.

பட்டு வளர்க்கலாம் வாங்க!
குண்டடம், மானூர்பாளையம், தொட்டியந்துறை உள்ளிட்ட தாராபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில், பட்டு வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளில் பெரும்பாலானோர், தாங்கள் பட்டு வளர்ப்புக்கு வந்ததற்கு காரணமாகக் கைகாட்டும் நபர் முத்தையா. இவர், கடந்த 34 ஆண்டுகளாக பட்டு வளர்ச்சித்துறையில் பணியாற்றி, ஆறு மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றிருக்கிறார். அரசு வேலையை 'கடனுக்கு’ என்று செய்யாமல், நூற்றுக்கும் மேற்பட்ட சிறு-குறு விவசாயிகளுக்கு பட்டு வளர்ப்பில் ஆர்வத்தை ஊட்டி... அவர்களைப் பொருளாதார ரீதியில் முன்னேற வைத்திருக்கிறார், இவர். பணி ஓய்வு பெற்ற பிறகும் அதேபகுதியில் ஒரு இளம்புழு வளர்ப்பு மையத்தில் பணியாற்றிக் கொண்டு, தேடி வரும் விவசாயிகளுக்கு ஆலோசனைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார், முத்தையா.
அவரிடம் பேசியபோது, ''வித்து நன்றாக இருந்தால்தான், விளைச்சல் நன்றாக இருக்கும். அதேபோல, இளம்புழுக்கள் தரமாக ஊக்கமுடன் வளர்ந்தால்தான் பட்டுக்கூடுகளின் உற்பத்தி நன்றாக இருக்கும். இளம்புழு வளர்ப்பு மிகவும் கடினமான காரியம். எமர்ஜென்ஸி வார்டில் உள்ள குழந்தையைக் கண்காணிப்பது போல மிகத்துல்லியமாகப் பராமரிக்க வேண்டும். இதில் கோட்டை விட்டால், தரமானக் கூடுகள் கிடைக்காது. அதற்குப் பயந்தே பலர் பட்டுப்புழு வளர்ப்புக்கு வருவதில்லை. அதனால், அந்த வேலையை மட்டும் தனியாக கவனம் எடுத்துச் செய்யும் விதத்தில்... ஆர்வமுள்ள சில விவசாயிகளுக்கு இளம்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்களைக் கற்றுத்தந்து, அவர்கள் மூலம் 'சாக்கி சென்டர்’களை உருவாக்கியிருக்கிறது, பட்டு வளர்ச்சித்துறை. இளம்புழுக்கள் வளர்க்கக் கஷ்டப்படும் விவசாயிகள், இந்த சென்டர்களில் இருந்து, 8 நாள் வயதான புழுக்களை வாங்கி வளர்த்துக் கொள்ள முடியும். இதனால், 20 முதல் 22 நாட்களில் வருமானம் பார்த்துவிட முடியும். ஒரு ஏக்கர் நிலத்தில் மல்பெரி நடவு செய்து, வெண்பட்டுக்கூடு உற்பத்தி செய்தால், எல்லா செலவுகளும் போக, ஆண்டுக்கு 2 லட்ச ரூபாய் முதல் 3 லட்ச ரூபாய் வரை கண்டிப்பாக வருமானம் பார்க்க முடியும்'' என்ற முத்தையா,
''ஆண்டுக்கு 10 பேட்ச் மூலம் 1,000 கிலோ கூடு உற்பத்தி என்பதுதான், பட்டு வளர்ச்சித்துறையின் இலக்கு. அதை சர்வசாதாரணமாக முறியடித்து சாதனை புரிந்திருக்கிறார் செல்லமுத்து. இரண்டு ஏக்கர் நிலத்தில் மல்பெரி சாகுபடி செய்து ஆண்டுக்கு 18 பேட்சுக்கள் எடுத்து மாநில அளவில் சாதனை புரிந்துள்ளார். அவர், ஒரு வினாடியைக்கூட வீணாக்க மாட்டார். அர்ப்பணிப்போடு பணியாற்றியதால்தான், அவர் இன்று லட்சாதிபதியாக உயர்ந்துள்ளார். சராசரியாக 20 நாட்களுக்கு ஒரு முறை குறைந்தபட்சம் 60 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார், செல்லமுத்து. இவரால், எங்கள் பட்டுவளர்ச்சித் துறைக்கே பெருமை'' என்று சொல்லி புளகாங்கிதப்பட்டார்!

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites