இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, April 20, 2013

அழகா செய்தால் அள்ளலாம் லாபம்!


ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை 100 ரூபாய் எடுத்துக்கொண்டு மார்க்கெட் சென்றால் ஒரு வாரத்துக்குத் தேவையான காய்கறிகளை வாங்கி விடலாம். ஆனால், இன்றைக்கு 100 ரூபாய்க்கு ஒரு நாளைக்குத் தேவையான காய்கறிகளைக்கூட வாங்க முடியவில்லை. அந்தளவிற்கு எகிறிக் கிடக்கிறது காய்கறிகளின் விலை. நான்கு நபர்கள் உள்ள ஒரு குடும்பத்தில் ஒரு மாதத்துக்கான காய்கறிகளுக்கு செலவு மட்டுமே ஆயிரம் ரூபாய்க்கும் அதிகம். இவ்வளவு செலவு செய்து வாங்கும் காய்கறிகள் ரசாயனத்தைக் கொட்டி விளைய வைக்கப்படுவதால் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.
ந்த பிரச்னைக்கு ஒரே தீர்வு, நம் வீட்டின் மொட்டை மாடியிலேயே தோட்டம் அமைத்து நமக்குத் தேவையான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்வதுதான். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள வட்டவிளை கிராமத்தைச் சேர்ந்த பிரபா அருள் தனது வீட்டுத் தோட்டத்தில் பலவிதமான காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார். அவருடன் பேசினோம்.
”எங்க அத்தை மன அமைதிக்காகக் கொஞ்சம் செடி கொடிகளை வளர்த்தாங்க. பிறகு அதுல ஒருவித ஈடுபாடு வந்து ஒட்டுமொத்தக் குடும்பமும் சேர்ந்து வீட்டில் செடி, கொடிகளை வளர்க்கத் தொடங்கினோம். வீட்டைச் சுத்தி காலியிடம், மொட்டை மாடி, வராண்டான்னு எங்க வீட்டுல எங்கே பார்த்தாலும் செடிகளாகத்தான் இருக்கும். எங்களுக்குத் தேவையான காய்கறிகள் இதுலயே கிடைத்துவிடுகிறது.
வகை வகையாக..!
தக்காளி, கத்தரி, பச்சை மிளகாய் மட்டுமில்லாம மலைப்பகுதிகள்ல விளையுற கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் மாதிரியான காய்கள், சுரைக்காய், பீர்க்கன், அவரை, கொத்தவரை, முள்ளங்கி, மக்காச்சோளம், வெண்டை, கூவைக்கிழங்கு, கறிவேப்பிலை, இஞ்சின்னு எங்க வீட்ல விளையாத காய்கறிகளே இல்லீங்க. மிளகாய்ல மட்டும் பச்சை, வெள்ளை, உருண்டை, ஃபேன்ஸி, பஜ்ஜி, காந்தாரின்னு சொல்ற மோர்மிளகாய்னு பல ரகங்க இருக்கு. கீரையில பொன்னாங்கன்னி, சிவப்பு கீரை, பச்சைக்கீரை, கொடி பசலி, ஆப்பிரிக்கன் கீரைன்னு பல ரகங்க இருக்கு. இதுபோக அயர்ன் பீன்ஸ் கொடியும் இருக்கு. இது பார்க்குறதுக்கு அரிவாள் மாதிரியே இருக்கும். பிஞ்சா இருக்கும்போது பறிச்சு பொறியல் வெச்சா அவ்வளவு ருசியா இருக்கும். இடை இடையே சேம்பையும், சேனைக் கிழங்கையும் வெச்சுருக்கோம்.
இதைத் தவிர சுண்ட வத்தல், வலுதலங்காய், அன்னாசி, தடியங்காயும் இருக்கு. வீட்டுக்குப் பக்கத்துல காலியா இருக்கற இடத்துல தென்னை, வாழை வெச்சுருக்கோம். இந்த செடி, கொடிகளுக்கு இடையிடையே கேந்தி, ரோஜா, ஆர்க்கிட் மாதிரியான அலங்கார செடி கொடிகளையும் வெச்சிருக்கோம்” என்ற பிரபா அருள் வீடுகளில் தோட்டம் அமைக்கும் முறைகளைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
பழைய சிமென்ட் சாக்கே போதும்!

வீட்டுக்கு முன்னாடி காலி இடம் இருக்கறவங்க நிலத்தைக் கொத்திவிட்டு விதைகளை, செடிகளை நட்டு வெச்சு காய்கறிகளை உற்பத்தி செய்யலாம். இடம் இல்லாதவங்க மொட்டை மாடியிலயே தோட்டம் அமைக்கலாம். மொட்டை மாடியில தோட்டம் அமைக்கும்போது தண்ணி இறங்கி கான்கிரீட் பாதிக்குமேன்னு கவலைப்படத் தேவையேயில்லை. அதுக்கு சில வரைமுறைகளை கடைபிடிச்சாலே போதும். மரப்பலகைகளை வச்சு அதுமேல தொட்டி அல்லது சாக்கு பையை வச்சா கட்டுமானத்துல தண்ணி இறங்காது. செடிகளை வளர்க்க மண் தொட்டிதான் வேணும்னு இல்லை. சிமென்ட் சாக்கு, காலியான அகலமான டப்பாவுலக்கூட வளர்க்கலாம். நாங்க சாக்குப் பையிலதான் அதிகமா வளர்க்குறோம். சாக்கோட கீழ்ப்பகுதியில ஒரு அடுக்கு தேங்காய் மட்டையை அடுக்கணும். இதை வச்சா செடிக்கு ஊத்துற தண்ணி கீழே வடியாது. அதோட மண்ணும் உறுதியா இருக்கும். தேங்காய் மட்டைக்கு மேல இலை, தழைகளை ஒரு அடுக்கு போடணும். அதுக்கு மேல செம்மண், மணலை நிரப்பி அதோட கொஞ்சம் தொழுவுரம், வேப்பம் புண்ணாக்கு, எலும்புத்தூள், சுண்ணாம்புத்தூளையும் போட்டு அதுக்கு மேலதான் செடிகளை நடணும். ஒருமுறை விதைகளை வாங்கி நடவு செஞ்சா போதும். அடுத்தடுத்த முறை விளையுற காய்கள்ல இருந்தே விதைகளை எடுத்து பயன்படுத்திக்கலாம். 
உடற்பயிற்சியோடு..!
அங்கங்க கேந்தி (செண்டுமல்லி) செடி இருக்கறது அழகுக்காக மட்டுமல்ல. அது பூச்சியை விரட்ட உதவுது. அதேபோல புதினா, செவ்வந்தி, துளசி, வசம்புன்னு பூச்சிகளுக்கு எதிரான செடிகளையும் வளர்க்குறோம். வசம்பு இருக்குறதால பாம்பு வராது. வாரம் ஒருமுறை பச்சை சாணத்தோட கடலை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கை தண்ணியில கலக்கி ஒவ்வொரு செடிக்கும் ஒரு கொட்டாங்குச்சி அளவுக்குத் தெளிப்போம். மாசத்துக்கு ஒருமுறை கொஞ்சம் தொழுவுரத்தைப் போடுவோம். தினமும் ஒருமுறை செடிகளுக்கு தண்ணி ஊத்துறதே நல்ல உடற்பயிற்சியாகவும் மனதுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கும். அப்பப்பக் கொஞ்சம் மஞ்சள் தூளையும் செடிகள்ல தூவி விடுவோம். இதுபோக சமையலறையில வீணாகுற கழிவுகளையும் செடிகளுக்கு உரமா போடுறோம்.
இந்த செடிகளுக்குக் கொஞ்சம்கூட ரசாயன உரம் கொடுக்காம இயற்கையான முறையில விளையிறதால அக்கம் பக்கம் இருக்கவங்க விலைக்கு வாங்கிட்டுப் போறாங்க. வீட்டுத் தேவைக்குப் போக, தினசரி கீரை மட்டும் 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய்க்கு வித்துடும். நாங்க இதை வியாபாரமாச் செய்யலை. எங்களோட தேவைக்குப் போகத்தான் வெளியில கொடுக்குறோம். ஆனா, நகரங்கள்ல சொந்த வீடு இருக்கறவங்க மாடித் தோட்டம் அமைச்சு இயற்கை காய்கறிகளை உற்பத்தி பண்ணினா வீட்டுத் தேவையும் நிறைவேறும்; கணிசமான வருமானமும் கிடைக்கும்” என்றார்.
வாய்ப்பு உள்ளவர்கள் காய்கறிகளை உற்பத்திச் செய்து பயன்படுத்திக்கொள்வதோடு அதை விற்று நாலு காசும் பார்க்கத் தொடங்கலாமே!
படங்கள்: ரா.ராம்குமார்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites