''நாங்கள் சொந்த வீடு, கார், பைக், ஸ்கூட்டர் என சகல வசதிகளுடன் சந்தோஷமாகத்தான் இருந்தோம்.
என் கணவர் லெதர் பொருட்கள் தயாரிப்பதற்கான ஜிப், எலாஸ்டிக், பட்டன் போன்ற உபரிப் பொருட்கள் விற்பனை
செய்யும் கடை வைத்திருந்தார். டெல்லி, மும்பை என இந்தியா முழுக்க சென்று பிஸினஸ்
செய்து வந்தார். நல்ல லாபகரமாகத்தான்
இருந்தது. எந்தச் சிக்கலும் இல்லாமல் போய்க் கொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில் மிக
மோசமான காலகட்டமும் வந்தது.
பிஸினஸை இன்னும் பெரிய அளவில் செய்ய
ஆசைப்பட்டார் என் கணவர். அதற்காக எட்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். அவரது
பிஸினஸ் நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி இலங்கை, மலேசியா என சென்று, பல கம்பெனிகளில் பொருட்கள்
ஆர்டர் செய்துவிட்டு அட்வான்ஸ் தொகையையும் செலுத்திவிட்டு வந்தார். ஆனால், பொருட்களும் வந்துசேரவில்லை; செலுத்திய பணமும் திரும்ப
வரவில்லை. பல லட்சங்கள் நஷ்டம் உண்டாகி, கடனுக்கு மாதா மாதம் பல ஆயிரங்களை வட்டியாகக்
கட்ட வேண்டிய கஷ்டமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம். வருமானம் முழுவதும் வட்டிக்கே
சரியாகப் போனது. ஸ்கூட்டர் தவிர கார், பைக் என எல்லாவற்றையும் வட்டிக்காகவே இழந்தோம்.
கூடவே குழந்தைகளுடைய சந்தோஷத்தையும்தான் இழந்தோம். ஆனால், எப்படியோ வீட்டை மட்டும்
இழக்காமல் சமாளித்தோம்.
வசதியாக வாழ்ந்து, காரில் சென்றுவந்த நாங்கள்
பஸ்ஸில் செல்லக்கூடிய சூழ்நிலையிலும் அதற்காக மனம் ஒடிந்து போகவில்லை. சொகுசான
வாழ்க்கையைத் தியாகம் செய்தோம். வட்டி கட்ட கடையையும் விற்றுவிட்டபிறகு, குடும்பச் செலவுக்கும், குழந்தைகளின் படிப்புச்
செலவுக்கும் வீட்டில் இருந்த நகைகளை விற்க ஆரம்பித்தோம். என் கணவருக்கு வெறும் 100 ரூபாய்தான் பெட்ரோல் காசு
கொடுப்பேன்.
இந்தச் சிக்கலான சூழ்நிலையில் இதற்காக சண்டை போட்டுக்கொண்டால், இருக்கும் நிம்மதியும்
தொலைந்து போகுமே. சாமர்த்தியமாகத்தான் இந்த இக்கட்டை கடந்து வரவேண்டும் என்று
முடிவெடுத்தேன்.
கடனை அடைக்க உதவி செய்யுங்கள் என உறவினர்களிடம்
கேட்கத் தயக்கமாக இருந்தது. மாடியில் வீட்டைக் கட்டி, அதை லீசுக்கு விடுவதன் மூலம்
கடனை அடைத்துவிடலாம் எனத் தோன்றியது. ஆனால் வீடு கட்ட பணம்..? உறவினர்களைத்தான் நாடினோம்.
ஆனால், எங்களின் சூழ்நிலை அறிந்த
சிலர் பணம் இருந்தும் உதவ மறுத்துவிட்டார்கள்.
ஆனாலும் தயங்காமல் தெரிந்தவர்கள், குடும்ப நண்பர்கள், சொந்தபந்தங்கள் என
எல்லோரிடமும் கேட்டோம். பலர் அவரவர் வசதிக்கேற்ப கொடுத்து உதவினார்கள். மூன்று
லட்சம் ரூபாயில் வீட்டை சிரமப்பட்டு கட்டினோம். ஆனால், ஏதாவது ஒரு குறை சொல்லி
லீசுக்கு யாரும் வரவில்லை. எங்கள் நிலைமை இன்னும்
மோசமானது. பிறகு குறைகளை சரிசெய்தபிறகு, ஒருவழியாக லீசுக்கு ஆள்
வந்துவிடவே, சில லட்ச ரூபாய் கடனை
அடைத்தோம். ஆனால், சொந்தபந்தங்களிடம் வாங்கிய
கடன் நின்றுவிட்டது. அவர்களிடம் கால தவணைப் பெற்றோம். பரந்த மனம்கொண்ட சிலர்
எங்கள் கஷ்டத்தைப் புரிந்து, பணத்தை திரும்பக்
கேட்கவில்லை. கடைசியாக என் அண்ணன் தந்த பணத்தை முதலீடாக வைத்து வியாபாரத்திற்கு திரும்பவும்
உயிர் கொடுத்தோம். அகல கால் வைக்காமல் நிதானமாக பிஸினஸை நடத்தினோம். கொஞ்சம்
கொஞ்சமாக கடனை அடைத்தோம். இழந்த நிம்மதியையும் சந்தோஷத்தையும் மீட்டெடுத்தோம்.
நன்றி ஈமெயில் வந்த செய்தி
நன்றி ஈமெயில் வந்த செய்தி
0 comments:
Post a Comment