இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, February 13, 2013

பட்டுப்புழு வளர்ப்பில் அதிக லாபம் !

பட்டுப்புழு வளர்ப்பில் அதிக லாபம் பெற இளம்புழு வளர்ப்பை வணிகரீதியில் கையாளும் நடைமுறை உதவுகிறது. பட்டுக்கூடு அறுவடை வெற்றிகரமானதாக அமைவதற்கு ஆரோக்கியமான மற்றும் திடகாத்திரமான இளம்புழுக்களே முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. சரியான முறையில் அட்டை அடைகாப்பு, புழு வளர்ப்பு மனை மற்றும் சுற்றுப்புறங்களை கிருமிநீக்கம் செய்தல், இணக்கமான சுற்றுச்சூழல் மற்றும் சத்தான இலைகள் ஆகியவை ஆரோக்கியமான இளம்புழு வளர்ப்புக்கு அடிப்படைக் காரணிகளாகும். இளம்புழு வளர்ப்பு மையங்களில் விஞ்ஞான ரீதியில் இளம்புழுக்கள் வளர்க்கப்படுவதால், பட்டு விவசாயிகளுக்கு நல்ல அறுவடையைத் தரக்கூடிய ஆரோக்கியமான மற்றும் வலிமையான புழுக்களை வினியோகம் செய்ய முடிகிறது. மாதிரி இளம்புழு வளர்ப்பு மையம்: பட்டுக்கூடு விளைச்சலின் வெற்றி இளம்புழு வளர்ப்பில் அடிப்படையிலேயே தீர்மானிக்கப் படுகிறது. அதனால் இளம்புழு வளர்ப்பை பிரத்யேக புழு வளர்ப்பு மனையில் உகந்த சூழ்நிலையில் ஊட்டச்சத்து மிக்க மல்பெரி இலைகளை அளித்து திறமையான வேலை ஆட்களைக் கொண்டு செய்ய வேண்டும். விஞ்ஞான முறையில் இளம்புழு வளர்ப்பதால் கிடைக்கும் ஆரோக்கியமான இளம்புழுக்கள் பிறகு நல்ல கூடு விளைச்சலுக்கு வழிவகுக்கும். வாணிப இளம்புழு வளர்ப்பு மையங்கள் ஆரோக்கியமான இளம்புழுக்களை விவசாயிகளுக்கு வினியோகிக்கின்றன.

மாதிரி வாணிப இளம்புழு வளர்ப்பு மையத்திற்கு பிரத்யேக சாக்கி மல்பெரி தோட்டம், இளம்புழு வளர்ப்பு மனை மற்றும் புழு வளர்ப்பு உபகரணங்கள் தேவை. புழு வளர்ப்பில் அனுபவம் உடைய திறமையான வேலையாட்கள் தேவை. இத்தகைய புழு வளர்ப்பு மையத்திலிருந்து புழுக்களை வாங்குவதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக கூடு மகசூலும், ஆதாயமும் கிட்டுகிறது. இளம்புழுக்களை வாங்கி முதிர்புழு வளர்ப்பு மட்டும் மேற்கொள்வதால் விவசாயிகளுக்கு 8 முதல் 10 நாட்கள் வேலை நேரம் மற்றும் பணம் மிச்சம் ஆகிறது. இதனால் உற்பத்தி செலவும் குறைகிறது. வெற்றிகரமான இளம்புழு வளர்ப்புக்கு, பட்டு முட்டைகளை முட்டை வித்தகத்திலிருந்து கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் 120 முதல் 150 ஏக்கர் மல்பெரி தோட்டமும் 80-100 பட்டு விவசாயிகளும் இளம்புழு வளர்ப்பு மையத்தைச் சுற்றிலும் இருப்பது மிகவும் அவசியம். 

மாதிரி இளம்புழு வளர்ப்பு மனை: இளம்புழு வளர்ப்பு மனையை, முதிர்புழு வளர்ப்பு மனை மற்றும் கூடு கட்டவிடும் அறையிலிருந்து தூரமாக கட்டவேண்டும். ஜன்னல் மற்றும் வென்டி லேட்டர்கள் அதிகம் இருக்கக்கூடாது. அப்போதுதான் புழு வளர்ப்பு மனையின் உள்ளே தேவையான சூழ்நிலையைப் பராமரிக்க முடியும். அறையின் உட்புறச் சுவரைச் சுற்றிலும் சிறிய கால்வாய் இருக்க வேண்டும். இது எறும்புகள் தாங்கியில் ஏறாமல் தடுப்பதோடு, அறை மற்றும் தளவாடங்களை கழுவும்போது நீரை வெளி யேற்ற உதவுகிறது. அறையின் தரை, உட்புற மற்றும் வெளிப்புற சுவர்களுக்கும் சிமென்ட் பூசவேண்டும். மாதிரி இளம்புழு வளர்ப்பு மையத்தில் மூன்று அறைகள் முறையே முக்கிய புழு வளர்ப்பு அறை, இலை பாதுகாப்பு அறை மற்றும் தடுப்பு அறை இருக்க வேண்டும். தடுப்பு அறை ஊசி ஈ நுழைவதை தடுப்பதுடன், புழு வளர்ப்பிற்கு தேவையான பொருட்களை சேமித்து வைக்கவும் பயன்படுகிறது. மனையின் மூன்று புறமும் தாழ்வாரம் கட்டப்பட வேண்டும். ஊசி ஈ நுழைவதைத் தடுக்க கதவு மற்றும் ஜன்னல்களுக்கு கம்பிவலை பொருத்த வேண்டும். 

தொடர்பு: நா.தாஹிரா பீவி, விஞ்ஞானி-சி, ஆராய்ச்சி விரிவாக்க மையம், கோபி. 04285-228 171. -கே.சத்தியபிரபா, உடுமலை

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites