இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, May 3, 2014

சோலார் பம்ப்செட்டுக்கு 80% மானியம்… வாரிக் கொடுக்கும், பொறியியல் துறை…

தற்போதைய சூழ்நிலையில், விவசாயப் பரப்பு குறைந்துகொண்டே வருவதற்கு… வறட்சி மற்றும் இயற்கைச் சீற்றங்கள் என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், விவசாயத் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதும் முக்கிய காரணம். அதனால், விவசாயத்தில் உழவு முதல் அறுவடை வரையில் பலவிதமான இயந்திரங்களின் தேவை அவசியமாகிக் கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப பல கருவிகளும் சந்தைக்கு வந்த வண்ணம் உள்ளன.

இப்படிப்பட்ட கருவிகளை வாடகைக்கு விடுவதன் மூலமாகவும், மானியம் கொடுத்து சொந்தமாக வாங்க ஏற்பாடு செய்வதன் மூலமாகவும்… இயந்திரங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் வேலையைத் தொடர்ச்சியாக செய்து வருகிறது, தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறை. இத்துறையின் செயல்பாடுகள் பற்றி, வேலூர் மாவட்ட வேளாண் பொறியியல் துறையின் செயற்பொறியாளர் இன்பநாதன் சொன்ன தகவல்கள் இங்கே இடம்பிடிக்கின்றன.
நிலத்தைச் சமன்படுத்த 910 ரூபாய்…
”விவசாயிகளுக்கு மிகவும் குறைந்த நாட்களுக்கு மட்டுமே தேவைப்படும் புல்டோசர், டிராக்டர், அறுவடை இயந்திரம்… போன்ற கருவிகளைக் குறைந்த கட்டணத்தில் வாடகைக்குக் கொடுத்து வருகிறோம். நீர்ப்பாசனத்தை முறையாக செய்வதற்கு நிலம் சமமாக இருக்க வேண்டும். அப்படி நிலத்தைச் சமன்படுத்து வதற்கு பயன்படுத்தப்படும் புல்டோசர் இயந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கான வாடகை, 910 ரூபாய். சேற்று உழவு, புழுதி உழவு செய்வதற்குத் தேவையான டிராக்டருக்கு ஒரு மணி நேரத்துக்கு 370 ரூபாய். டயர் மூலமாக இயங்கக்கூடிய நெல் அறுவடை இயந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு 910 ரூபாய் என நிர்ணயம் செய்திருக்கிறோம். இக்கருவிகளை வாடகைக்குக் கேட்டு ஒரே நேரத்தில் பலர் அணுகும்போது, பதிவு முன்னுரிமை அடிப்படையில், அனுப்பி வைப்போம்.
நிலத்தடி நீரைக் கண்டுபிடிக்கும் கருவி!
தவிர, பாசனக் கிணறுகளில் இருக்கும் பாறைகளை, வெடி வைத்து உடைத்து ஆழப்படுத்தும் கருவிகளும் உண்டு. இக்கருவிக்கு ஒரு நாளுக்கு 250 ரூபாய் வாடகை. கிணறு, போர்வெல் போன்றவற்றை அமைப்பதற்கு முன்பாக எங்கள் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால்… நீரோட்டம் உள்ள பகுதிகளையும் ஆய்வு செய்து கொடுக்கிறோம். அதற்காக, விவசாய நிலங்களுக்கு 500 ரூபாய் கட்டணமும், மற்ற இடங்களுக்கு 1,000 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கும்.
புதிய கருவிகளுக்கு 50% மானியம்!
வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் கருவிகள் வாங்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதிகபட்ச மானியமாக… பவர் டில்லருக்கு 45 ஆயிரம் ரூபாய்; டிராக்டருக்கு 45 ஆயிரம் ரூபாய்; ரோட்டவேட்டருக்கு 20 ஆயிரம் ரூபாய்; டிராக்டர் மூலம் இயங்கும் இயந்திரங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய்; ஒருங்கிணைந்த கதிர் அறுவடை இயந்திரத்துக்கு 4 லட்சம் ரூபாய் என வழங்கப்படுகிறது. தவிர, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்துக்கு வந்துள்ள நெல் நடவு இயந்திரம், நேரடி நெல் விதைக்கும் கருவி, தென்னை மட்டையைத் தூளாக்கும் கருவி, களை எடுக்கும் கருவிகள், பயிர் பாதுகாப்புக் கருவிகள், பல வகை தானியம் அடிக்கும் கருவிகள்… போன்றவற்றுக்கு 50% மானியம் உண்டு.
பயிற்சியும் உண்டு..!
வேலூர், திருச்சி, திருவாரூர், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய ஆறு மாவட்டங்களில் டிராக்டர் பழுதுபார்க்கும் மையங்கள் உள்ளன. இம்மையங்களில்… எழுதப் படிக்க தெரிந்த கிராமப்புற இளைஞர்களுக்கு வேளாண் கருவிகள் பராமரித்தல் மற்றும் பழுது பார்த்தல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இப்பயிற்சியில் சேர்பவர்களுக்கு ஊக்கத்தொகையும் உண்டு. ஒவ்வோர் ஆண்டும் ஒரு குழுவுக்கு 50 பேர் வீதம், இரண்டு குழுக்களுக்கு 3 மாத காலம் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி தேவைப்படுவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
இளைஞர்களுக்கு முழு மானியத்தில் இயந்திரம்!
‘உழவர் குழுக்கள்’ திட்டத்தின் கீழ் 16 இளைஞர்களை ஒன்றாகச் சேர்த்து குழு அமைத்து… அவர்களுக்கு இயந்திரங்களை இயக்குவது, இயந்திர நடவுக்கான நாற்றுகளை உற்பத்தி செய்வது போன்ற தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொடுக்கிறோம். இத்திட்டத்தின் கீழ், நான்கு பவர் டில்லர்கள், நான்கு நெல் நடவு இயந்திரங்கள், நான்கு களை எடுக்கும் இயந்திரங்கள் என 12 இயந்திரங்களை 100 சதவிகித மானியத்தில் கொடுக்கிறோம். இக்குழுக்களை எங்களின் கண்காணிப்பில் வைத்து, தேவையான ஆலோசனைகளைக் கொடுத்து வருகிறோம். இதுபற்றிய விவரங்கள் தேவைப்படுபவர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
சோலார் பம்ப் செட்டுக்கு 80% மானியம்!
மின்சாரப் பற்றாக்குறையால் பாசனம் தடைபடும் பிரச்னையைப் போக்க, போர்வெல் மற்றும் கிணறுகளில்
5 ஹெச்.பி. திறன் கொண்ட சோலார் பம்ப் செட்டுகள் அமைத்துக்கொள்ள 80% மானியம் வழங்கப்படுகிறது. விவசாயி தனது பங்காக 20% தொகை யையும் அதற்கான வரித்தொகையையும் செலுத்த வேண்டும். அதாவது, போர்வெல் பாசனமாக இருந்தால், வரியுடன் சேர்த்து, 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவாகும். இதில் 3 லட்சத்து, 35 ஆயிரத்து 200 ரூபாய் மானியமாகக் கிடைக்கும். பயனாளி தனது பங்காக 1 லட்சத்து 4 ஆயிரத்து 800 ரூபாய் செலுத்த வேண்டும்.
கிணற்றுப் பாசனத்துக்கு வரியுடன் சேர்த்து, 5 லட்சத்து ஆயிரத்து 500 ரூபாய் செலவாகும். இதில் 3 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மானியமாகக் கிடைக்கும். பயனாளி தனது பங்காக, 1 லட்சத்து 17 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும்.  இத்திட்டத்தில் பயன்பெற… 200 முதல் 300 அடி ஆழத்தில் தண்ணீர் இருக்க வேண்டும். கண்டிப்பாக சொட்டு நீர்ப்பாசனம் அமைத்திருக்க வேண்டும் அல்லது சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பதாக உத்தரவாதம் கொடுக்க வேண்டும்” என்று மிகவும் விரிவாகப் பேசிய இன்பநாதன்,
”இன்றையச் சூழ்நிலையில் ஆள்பற்றாக்குறை, மின்தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளைச் சமாளிக்க இதுபோன்ற கருவிகள், இயந்திரங்கள் அவசியம். அதனால், அரசு வழங்கும் சலுகைகளை முறையாக விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அழைப்பு வைத்தார்!
நன்றி விகடன்

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites