'ஏக்கர் கணக்கில் நிலம், கூலி ஆட்கள், இடம், தண்ணீர் என சகலமும் இருந்தால்தான் விவசாயம் செய்ய முடியும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே ஓய்வுநேரத்தில் மொட்டை மாடியில் வீட்டுத் தோட்டம் அமைத்து, முதுமையிலும்கூட சம்பாதிக்க முடியும்’ என்பதை நிரூபித்து வருகிறார், சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்.

''நான், ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர். இந்த வீட்டுக்குக் குடிவந்தப்ப... இந்த ஏரியாவே... செடி, கொடி இல்லாம பாலைவனம் மாதிரி இருந்துச்சு. மொத்த ஏரியாவை மாத்த முடியாட்டியும்... நம்ம வீட்டையாவது பசுமையாக்குவோம்னு நினைச்சுதான் இந்த வீட்டுத்தோட்டத்தை உருவாக்கினேன்'' என்று பெருமையோடு சொன்னவர், தொடர்ந்தார்.


''மொட்டை மாடியில் தட்டுகள்ல மண்தொட்டிகளை வெச்சு... அதுல செம்மண், தேங்காய் நார், ஆட்டுப் புழுக்கைகளைப் போட்டுத்தான் பயிர் பண்றேன். தக்காளி, பப்பாளி, சிகப்புத் தண்டுக்கீரை, மிளகாய், வெள்ளரி, பீன்ஸ், பீர்க்கங்காய், பசலைக்கீரை, வெண்டை, காராமணி, புடலங்காய், அவரை, முட்டைகோஸ், முருங்கைக்காய், பாகல், கேரட், வாழைனு அத்தனையையும் வளக்கிறேன். சின்னச் செடிகளை தொட்டியிலயும், வாழை மாதிரியான பயிர்களை செம்மண் நிரப்புன சாக்குப் பையிலயும் வளக்குறேன். இந்த ஆயிரம் சதுரடியில் மட்டும் பூக்கள், காய்கள், கீரைகள்னு 50 வகையான தாவரங்கள் இருக்கு.

பொதுவா, காய்கறிச் செடிகளுக்கு சூரிய வெளிச்சம் தேவை. அதுவே அளவுக்கு மீறி இருந்தா ஆபத்தாகிடும். அதனால, வெளிச்சத்தைப் பாதியா குறைக்கறதுக்காக பசுமைக் குடில் அமைச்சுருக்கேன். பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெயைத் தண்ணியில கலந்து தெளிப்பேன். காலையிலயும் சாயங்காலமும் தண்ணி ஊத்துவேன். தொட்டியில வழிஞ்சு வர்ற தண்ணி, தொட்டிக்குக் கீழ இருக்கற தட்டுலயே தங்கிடும். அதனால அதைத் திரும்பவும் பயன்படுத்த முடியும். அதோட, காங்கிரீட்டுக்கும் பாதிப்பு இருக்காது.





கழிவுகள்ல இருந்து எரிவாயு தயாரிக்கற கலனை வீட்டுல அமைச்சுருக்கேன். கழிவுகளை அரைச்சு அதுல ஊத்திட்டா வீட்டுக்குத் தேவையான எரிவாயு கிடைச்சுடுது. ஆரம்பகட்டத்துல ஆகுற செலவு மட்டும்தான். வேற செலவு கிடையாது. இந்தக் கலன்ல இருந்து வெளியாகுற கழிவு நீர்... நல்ல உரம்.

இதைத்தான் செடிகளுக்கு ஊட்டத்துக்காகக் கொடுக்கிறேன். அதனால, ஒரு சொட்டு ரசாயனத்தைக்கூட பயன்படுத்தறதில்லை. ஒரு வருஷமா... எங்க வீட்டுல விளையுற காய்களைத்தான் நாங்க சாப்பிடறோம். தேவைக்குப் போக மீதம் உள்ளதை வித்துடறோம்'' என்ற ராதாகிருஷ்ணன், 

''வயசான காலத்துல சந்தோஷம், மனநிம்மதி, ஆரோக்கியம், பணம்னு எல்லாம் கொடுக்கிற இந்த இயற்கைக்கு, நான் என்ன கைமாறு செய்ய போறேன்னுதான் தெரியல'' என்று நெகிழ்ச்சியாகச் சொல்லி விடை கொடுத்தார்.