இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, July 13, 2023

பேக்கரி தொழில்

 முந்தைய காலத்தில் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட கேக், திருமணங்கள், அலுவலகக் கொண்டாட்டங்கள், முக்கிய பண்டிகை தினங்கள் எனப்

பல நிகழ்ச்சிகளிலும் அத்தியாவசிய உணவுப் பொருளாக மாறிவிட்டது. பல்வேறு பேக்கரிகளில் ரசாயன சேர்மானங்கள் சேர்த்து கேக், சாக்லேட் தயாரிக்கப்படுவதாகப் பலரும் ஆதங்கப்படும் நிலையில், அதற்கு மாற்றாக உடலுக்குக் கெடுதல் ஏற்படுத்தாத கேக் வகைகளை நாடுவோர் அதிகரித்து வருகின்றனர். நான் வசிக்கும் பகுதியிலேயே 20 பேர் வீட்டில் இருந்தபடியே கேக் தயாரிக்கின்றனர். எனக்குத் தெரிந்தே சென்னையில் நூற்றுக்கணக்கானோர் இந்தத் தொழிலில் இருக்கின்றனர். ஆனால், எல்லோருக்குமே ஆர்டர்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் விருப்பும் கேக், சாக்லேட் தயாரிப்பில் தரத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் ஆர்டர்கள் எப்போதும் தடையின்றி கிடைக்கும்.

நிலையான வெற்றிக்கு!

எத்தனை ஆண்டுகள் அனுபவம் இருந்தாலும், ஒவ்வொரு முறையும் கேக் தயாரிப்பில் மாறுபாடுகள் வரும். அதற்குப் பயன்படுத்திய பொருள்கள், தயாரிப்பு முறை, கேக்கில் வெப்பநிலை மாறுபாடு எனக் காரணங்கள் வேறுபடலாம். எனவே, ஒவ்வொரு முறையும் மிகுந்த கவனத்துடனும் பக்குவத்துடனும் கேக் தயாரிப்பை மேற்கொள்ள வேண்டும். அதேபோல, புதுப்புது ரெசிப்பிகள், ஃப்ளேவர்களைத் தயாரிக்க வேண்டும். அப்போதுதான் போட்டிச்சூழலை மீறி இந்தத் தொழிலில் பல ஆண்டுகளுக்கு நிலையான வெற்றி வாய்ப்புகளை உறுதி செய்ய முடியும். பண்டிகை, பிறந்த நாள், திருமண நாள் போன்று ஆர்டர்களுக்கு ஏற்ப புதுமையான டிசைன்களில் கேக் தயாரித்துக் கொடுப்பதும் நமக்கான தனித்துவத்தை உயர்த்தும்.

விற்பனையைவிட வாடிக்கையாளர் நலன் முக்கியம்!

மைதாவுக்கு மாற்றாக ஆட்டா மாவிலும் சிறுதானிய மாவிலும் கேக் தயாரிப்போர் அதிகரித்துவிட்டனர். அதிலும்கூட பலருக்கு உடன்பாடு இல்லாததால், கீன்வா (Quinoa) பயன்பாடு அதிகரித்து விட்டது. சிலர் க்ரீம் வேண்டாம் என்பார்கள். அவர்களுக்கு க்ரீம் இல்லாத பிரத்யேக கேக் வகைகளைத் தயாரிக்கலாம். சர்க்கரையைத் தவிர்க்க நினைப்பவர்களுக்கு மைதா மற்றும் சர்க்கரை சேர்க்காமல் பிரத்யேக ‘சுகர் ஃப்ரீ’ சர்க்கரை, பேரீச்சை, வாழைப்பழம், தேன் உள்ளிட்ட பொருள்களைச் சேர்த்து கேக் தயாரிக்கலாம்.

முதலீடு: குடும்பத்தினர், தெரிந்தவர்கள் பலருக்கும் சோதனை முயற்சியாக கேக் தயாரித்துக் கொடுத்து, சாதக, பாதக விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். பிறகு, விற்பனை ரீதியாகச் செல்லலாம். வீட்டில் இருந்தபடியே மாதம் சில ஆயிரம் ரூபாய் முதலீட்டில் நிலையான ஆர்டர்கள் எடுத்துச் சிறப்பான வருமானம் ஈட்டலாம்.



பயிற்சி: ஒருநாள் பயிற்சி வகுப்புகள், ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளலாம். யூடியூப் பார்த்து கேக், சாக்லேட் செய்யவும் கற்றுக்கொள்ளலாம்.

பேக்கிங் தொழிலுக்குத் தேவையானவை: மைக்ரோவேவ் அவன், சமையல் பாத்திரங்கள், ஹேண்ட் பிளெண்டர், மைதா அல்லது ஆட்டா, பால், சர்க்கரை, உலர் பழங்கள் உள்ளிட்ட கேக் தயாரிப்புக்கான அடிப்படையான உணவுப் பொருள்கள்.

விற்பனை வாய்ப்பு: நம் தயாரிப்பு கேக், சாக்லேட்டுகளை போட்டோ எடுத்துச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட வேண்டும். கேக், சாக்லேட் தயாரிப்பில் அதிக அனுபவம் இருந்தால், குழுவாகப் பல நபர்களுக்கும் அல்லது தனி நபருக்கும் பயிற்சி வகுப்புகள் எடுத்தும் வருமானம் ஈட்டலாம். உணவுக் கண்காட்சிகளில் பங்குபெற்றும் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தலாம்.

நோட் பண்ணுங்க!

எந்த ஆர்டராக இருந்தாலும் நிச்சயம் அவர்களிடம் ஃபீட்பேக் கேட்க வேண்டும். டெலிவரி செய்த கேக், வாடிக்கையாளருக்குப் பிடிக்கவில்லை என்ற பதில் கிடைத்தால், தயங்காமல் கட்டணம் இன்றி மற்றொரு கேக் கொடுத்து அவர்களைத் திருப்திபடுத்த வேண்டும். மற்றவர்களைப் பின்தொடராமல் நம் தயாரிப்புக்குத் தனி அடையாளம், பிராண்டு மதிப்பு கிடைக்கும்படி அனுபவம் பெற வேண்டும். அவ்வப்போது ஆஃபர்கள் அறிவிக்கலாம். தரமான மூலப்பொருள்களைக் கொண்டு தயாரித்தால், அதிக விலைக்கும் வாங்கவும் வாடிக்கையாளர்கள் தயங்க மாட்டார்கள். ஒரு ஸ்பூன் கெட்டித்தயிர் சேர்த்தால் கேக் சாஃப்ட்டாக வரும். சிறிதளவு காபி தூள் சேர்த்தால் சாக்லேட் கேக் சுவையாக இருக்கும்.

* பேக்கிங் தொழிலுக்கான ஆலோசனை மற்றும் பயிற்சிகள் பெற, ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் அமைந்துள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites