இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, July 13, 2023

இனிப்பான வருமானம் தரும் தேனீ வளர்ப்பு

 கிராமத்தினர் முதல் நகரத்தினர் வரை அனைவரும் வீட்டில் இருந்தே எளிய முறையில் தேனீ வளர்ப்பில் வெற்றி பெற ஆலோசனைகள் வழங்குகிறார், மதுரையைச் சேர்ந்த ‘விபிஸ் இயற்கைத் தேனீப் பண்ணை’ உரிமையாளர் ஜோஸ்பின்.


வர்லாம் வாங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அருமருந்து தேன். உலகம் முழுக்க இதற்கான வரவேற்பு அதிகம் இருக்கும் சூழலில், தேனில் கலப்படமும் பெருகிக் கொண்டே இருப்பதைத் தொடர்ந்து கேள்விப்படுகிறோம். காடுகள் அழிப்பு, இயற்கைச் சூழல் சீர்கேடு, தொழிலாளர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் சிறப்பான தேன் உற்பத்தி குறைந்துகொண்டே வருகிறது. அதேநேரம், தேனீ வளர்ப்பு மூலமாகத் தேன் உற்பத்தி என்பது கொஞ்சம் கொஞ்சமாக, பெருக ஆரம்பித்துள்ளது. வீடு, தோட்டம், மாடி என்று தேனீப்பெட்டிகளை வைத்து தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுவருகின்றனர். சுமார் 4 கிலோமீட்டர் சுற்றளவு வரையில் பறந்து சென்று தேன் சேகரிப்பில் தேனீக்கள் ஈடுபடும். வேளாண்மைப் பயிர்கள், மரங்கள் மற்றும் இயற்கைச் சூழல் நிறைந்த பகுதிகளில் தேனீ வளர்ப்பு நன்கு கைகொடுக்கும். கிராமப்புறங்கள்தான் என்றில்லை... நகர்ப் புறங்களில்கூட தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம். பழச்சாறு கொடுத்து தேனீ வளர்ப்பை மேற்கொள்ளலாம். வெளிநாடு களில் வெற்றி பெற்றுள்ள இத்தகைய தேனீ வளர்ப்பு, இந்தியா வில் அதிகம் பிரபலமாகவில்லை. ஆனால், தேனுக்கான தேவை அதிகமாக இருப்பதால் அனைத்துத் தரப்பினரும் இதில் இறங்கி வெற்றிபெறலாம்.

தேனீக்கள் விரும்பும் பழச்சாறு!

தேனீகளுக்குப் பெரிய எதிரியான ரசாயன உரம் மற்றும் ரசாயன பூச்சிக்கொல்லிப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், தேனீக்களுக்குப் போதிய உணவு கிடைக்காமல் போவதால், அவை இடம்பெயர்கின்றன. இதுபோன்ற சூழலில், தேனீப் பெட்டியில் சர்க்கரைப்பாகுக் கரைசல் வைத்து தேனீக்களுக்கு உணவை உருவாக்குவார்கள். இதேபோல பழச்சாறு கொடுத்தும் தேனீ வளர்ப்பை மேற்கொள்ளலாம். சுற்றுவட்டாரத்தில் பூக்கள் இல்லாத பட்சத்தில்தான், தேனீக்கள் பழச்சாற்றைப் பருகும். இதற்காக, வாழை, சப்போட்டா, மா, பப்பாளி போன்ற ஏதாவதொரு பழத்துடன் தண்ணீர் சேர்த்து ஜூஸ் போல செய்து வடிகட்டி கிண்ணத்தில் தினமும் 100 மில்லி அளவில் ஒவ்வொரு பெட்டியிலும் வைக்கலாம். கிராமப் பகுதிகளில் ஒவ்வொரு பெட்டியிலும் மாதம்தோறும் தலா ஒரு கிலோ தேனை அறுவடை செய்யலாம். நகரப் பகுதியில் ஒன்றரை மாதத்துக்கு ஒருமுறை ஒரு கிலோ தேன் கிடைக்கும். கிலோ 450 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. பூக்களில் இருந்து சேகரிக்கப்படும் தேனுக்கு இணையாக இந்தத் தேன் இருக்காது என்றாலும், இந்தத் தேனும் ஆரோக்கியமானதே!

வீட்டிலிருந்தே செய்யக்கூடிய எட்டு தொழில்கள்! - குறைவான முதலீடு... நிறைவான வருமானம்!

எறும்பு வருவதைத் தவிர்க்க...

தங்க அரளிப் பூவில் தேன் அதிகம் இருக்கும். இந்தப் பூச்செடி, முருங்கை உட்பட பல்வேறு செடிகளைச் சுற்றுவட்டாரத்தில் வளர்ப்பதால் தேனீக்கள் அதிகம் வரும். தேனீக்களின் பிரதான எதிரிகளில் எறும்புக்கும் இடம் உண்டு. பெட்டிகள் பொருத்தப் பட்டிருக்கும் ஸ்டாண்டைச் சுற்றி மஞ்சள்தூளை அவ்வப்போது தூவி விடுவதால் எறும்பு வருவதைத் தவிர்க்கலாம். தேனீக்களைத் தொந்தரவு செய்யாத வரைக்கும் அவற்றால் நமக்கு எந்தப் பிரச்னைகளும் வராது.

முதலீடு: தேனீக்களுடன்கூடிய ஒரு பெட்டி 4,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை மூலம் தேனீப் பெட்டிகள் வாங்க 40 சதவிகிதம் மானியமும் கிடைக்கிறது.

மூலப்பொருள்கள்: 10,000 தேனீக்களுடன்கூடிய தேனீப் பெட்டிகள் விலைக்குக் கிடைக்கின்றன. தேனீ வளர்ப்பில் நம் உழைப்பு அதிகம் இருக்காது. ஆனால், முறையாக கவனித்துக்கொள்வதே மிகவும் முக்கியமானது.

பயிற்சி வகுப்பு: வேளாண் கல்லூரிகள், தோட்டக்கலைத்துறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளலாம். நானும் இலவசமாகப் பயிற்சி அளிக்கிறேன்.

விற்பனை வாய்ப்பு: தேனீ வளர்ப்பை மேற்கொள்வது தெரிந்தால், நமக்குத் தெரிந்தவர்களே தேடி வருவார்கள். இயற்கை அங்காடிகள், மளிகைக்கடைகள், சந்தைகளிலும் விற்பனை செய்யலாம். தேனில் மதிப்புக்கூட்டல் உணவுப்பொருள்கள் தயாரித்தும் கூடுதல் வருமானம் ஈட்டலாம்.

நோட் பண்ணுங்க!

முதலில் இரண்டு பெட்டிகள் மட்டும் வாங்கி நிலத்திலோ, மொட்டைமாடியிலோ தேனீ வளர்ப்பை மேற்கொள்ளலாம். தேனீக்கள் நம் இருப்பிடச் சூழலில் சரியாக வாழ்வதை உறுதிசெய்த பிறகு, முதலில் வீட்டுக்கான தேனைச் சேகரித்து முறையான அனுபவம் பெற வேண்டும். பின்னரே சுயதொழிலாகச் செய்யலாம்.

* தேனீ வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் பெற, கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறையைத் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு: 0422 - 6611214, 6611414

மாதம்தோறும் 6-ம் தேதி ஒருநாள் பயிற்சி வகுப்பு நடக்கும். அந்த நாள் விடுமுறை தினமாக இருந்தால், அதற்கு அடுத்த வேலை நாளில் பயிற்சி வகுப்பு நடைபெறும்.

பயிற்சிக் கட்டணம்: 500 ரூபாய் (ஜி.எஸ்.டி தொகை 18 சதவிகிதம் சேர்க்காமல்)

பயிற்சி நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

குறிப்பு: பயிற்சியில் கலந்துகொள்ள, முன்கூட்டியே போன் வாயிலாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites