இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, January 1, 2014

பேப்பர் கவர் தயாரிப்பில் அசத்தும் தோழிகள்


வீட்டில் காகிதம் கிடந்தால் குப்பை தொட்டியில் போடுவதற்கு பதில் கொஞ்சம் யோசித்தால் போதும்; சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பு. பணமாக்கவும் முடியும் என்பதை நிரூபித்துள்ளனர் ஊட்டி தோழிகள் காஞ்சனா, ஜெனீபர் ஆகியோர். மிக குறைந்த வருமானம் கொடுத்த தொப்பி தைக்கும் தொழிலை விட்டு பழைய பேப்பரை வாங்கி காகித பை தயாரிக்க ஆரம்பித்தவர்களுக்கு தற்போது மாதம் தோறும் நிலையமான வருமானத்திற்கு உத்தரவாதம் கிடைத்துள்ளது.
ஊட்டி ஹில்பங்க் அருள் நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஜெனிபர், ராஜா என்பவரின் மனைவி காஞ்சனா. இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் தொப்பி தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். அப்போது ஒரு தொப்பி தயாரித்து கொடுத்தால் (தைப்பது) ரூ.1 வீதம் வழங்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு கம்பெனிக்குள் சென்றால் மாலை 6 மணிக்குத்தான் வீட்டிற்கு வர முடியுமாம். இந்த இடைப்பட்ட நேரத்தில் மிஷினை விட்டு வெளியே வரமுடியாது. ஒரு நாளுக்கு 100 தொப்பிகள் வரை தைத்து வந்துள்ளனர். இதன் மூலம் ஒரு நாள் முழுவதும் உழைத்தால் ரூ.100 மட்டுமே வருமானம் கிடைத்து வந்துள்ளது.
தொப்பி தயாரிக்கும் வேலையை விட்டு விட்டு வீட்டிலேயே பேப்பர் கவர்களை தயாரிக்கும் தொழிலில் கடந்த 8 ஆண்டுக்கு முன் ஜெனீபர் ஈடுபட துவங்கினார். பின் இவருடன் காஞ்சனாவும் பேப்பர் கவர் தயாரிப்பில் ஈடுப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் கவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை சட்டம் சற்று கடுமையாகவே பேப்பர் கவர்களுக்கு கிராக்கி அதிகமானது
தற்போது தினமும் 100 கவர்களை கொண்ட 20 கட்டுக்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். கவர்களின் அளவுக்கு ஏற்றார் போல் விலையும் மாறுபடுகிறது. சிறிய புத்தகங்கள் முதல் பெரிய நாளிதழ்களை கொண்டு கவர்கள் தயாரிக்கப்படுகிறது. தற்போது மாதம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் இருவரும் ரூ.20 ஆயிரம் சம்பாதித்து வருகின்றனர். இதற்கென பெரிய அளவிலான மூல தனம் ஒன்றும் கிடையாது. பழைய பேப்பர் கடைகள், வீடுகளில் வாங்கும் பேப்பர்கள் மற்றும் புத்தகங்களை குறைந்த விலைக்கு வாங்கி வீட்டிலேயே உட்கார்ந்து இந்த கவர்களை செய்கின்றனர்.
சாதாரண பழைய பேப்பர் என்று நினைக்காமல் அதனை முறையாக பயன்படுத்தி மாதம் தோறும் ரூ.10 ஆயிரம் சம்பாதித்து வரும் ஜெனிபர் மற்றும் காஞ்சனாவை பார்த்து பல பெண்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்தவர்களிடம் வேலைக்கு சென்று கஷ்டப்படுவதைவிட சுய தொழில் செய்தால் கை நிறைய சம்பாதிப்பது மட்டுமின்றி குடும்பத்தையும் பராமரிக்க முடிகிறது என ஜெனிபர் மற்றும் காஞ்சனா ஆகியோர் தெரிவித்தனர்.
அவர்கள் இருவரும் கூறுகையில், தொப்பி தயாரிக்கும் வேலை சற்று கடினமானது. ஆனால் ஊதியம் மிகவும் குறைவு. லீவு எடுக்க முடியாது. குழந்தைகளை கவனிக்க முடியாது. மன உளைச்சலுடனே இருக்க வேண்டியிருந்தது. பேப்பர் கவர் தயாரிக்க ஆரம்பித்தவுடன் நாங்கள் அதிகம் சம்பாதிக்கிறோம். வீட்டு வேலை மட்டுமின்றி குடும்பத்தில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ள முடிகிறது. நாங்கள் துவக்கத்தில் கடைகளுக்கு சென்று கவர்கள் வேண்டுமா என கேட்கும் போது சற்று கூச்சமாகவும் தயக்கமாகவும் இருந்தது. தற்போது எங்களை பார்த்து கவர்களை சீக்கிரம் கொண்டு வாங்க என கடைக்காரர்கள் அன்பாக மிரட்டுகின்றனர். பழக்கடைகள், சில்லரை கடைகளில் எங்கள் கவர்களுக்கு அதிக மவுசு. தற்போது நாங்கள் தயாரிக்கும் கவர்களுக்கு கிராக்கி அதிகம். எனினும் அதிகளவு தயாரித்து கொடுக்க முடியவில்லை என்றாலும் நாள் தோறும் சுமார் 20 முதல் 25 கட்டுக்கள் தயாரித்து கொடுத்து விடுகிறோம். கை நிறைய சம்பாதிக்கிறோம். சந்தோஷமாக உள்ளது என்றார்.
துவக்கத்தில் கடைகளுக்கு சென்று கவர்கள் வேண்டுமா என கேட்கும் போது சற்று கூச்சமாகவும் தயக்கமாகவும் இருந்தது. தற்போது எங்களை பார்த்து கவர்களை சீக்கிரம் கொண்டு வாங்க என கடைக்காரர்கள் அன்பாக மிரட்டுகின்றனர்.

1 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites