இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, September 22, 2024

இரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு,

 

சீட் கவர்

வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்களின் சீட் கவர் தயாரித்து நேரடியாகவோ கடைகளுக்கோ விற்றால் லாபம் சம்பாதிக்கலாம்

இருசக்கர வாகனங்களின் சீட்கள் பிராண்ட்களுக்கேற்ப ஒன்றுக்கொன்று சிறிய அளவில் மாற்றம் இருக்கும். பல்வேறு இருசக்கர வாகன சீட்களின் மாதிரிகளை நாம் வைத்திருந்தால் உடனடியாக தயாரித்து விடலாம்.

சீட் கவரில் வாடிக்கையாளர்கள் டிசைன்கள், எழுத்துகளை வடிவமைக்க விரும்புகின்றனர். டிசைன் வேலைப்பாட்டுக்கேற்ப கூலி கிடைக்கும். குறிப்பாக, கல்லூரி மாணவர்கள் சீட் கவரில் டிசைன்களை விரும்புகிறார்கள். பெண்கள் டிசைன் இல்லாத சீட் கவர்களை விரும்புகின்றனர். சீட் கவர் தயாரிக்க பெரிய அளவில் பயிற்சிகள் தேவை இல்லை. ஓரளவு தையல் தெரிந்தவர்களாக இருந்தால் போதும். இருசக்கர வாகன சீட் கவர் தயாரிப்பில் போதிய அனுபவம் இருந்தால் 4 சக்கர வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களுக்கு சீட் கவர் செய்து கொடுக்கலாம். நல்ல வருவாய் கிடைக்கும்.

இத்தொழிலை பெண்கள் வீட்டிலேயே செய்ய முடியும். மொத்த சீட் விற்பனை கடைகளில் ஆர்டர் எடுத்து செய்யலாம் அல்லது வெட்டி கொடுக்கும் பாகங்களைக் கொண்டு தைத்து கொடுக்கலாம். மழை, வெயிலில் நிறுத்தப்படுவதால், சீட் கவர்கள் அடிக்கடி கிழிந்து விடுகிறது. ஒரு சீட் கவர் 9 மாதம் வரை உழைக்கும்.

தயாரிக்கும் முறை

இரு சக்கர வாகனத்துக்குரிய சீட்டின் மாதிரி வடிவத்தை வைத்து, சீட்டின் மேல், இடது மற்றும் வலது புற பாகங்களை ரோசிலின் சீட்டில் வெட்டி எடுத்து கொள்ள வேண்டும். அவற்றை பார்டர் டேப் அல்லது பீடிங் வயரால் இணைத்துத் தைக்க வேண்டும். அதை ஸ்பாஞ்ச் மீது வைத்து இடது, வலது புறங்கள் வழியாக கீழ் புறம் வரை கவரை இறுக்கமாக கொண்டு வர வேண்டும். இப்போது ரோசிலின் சீட்டை ஸ்பாஞ்ச் மீது கன் சூட்டரால் அமுக்கினால் சீட் கவர் தயார்.

டிசைன் சீட் கவர் தயாரிக்க, டிசைன் இடம்பெறும் பகுதிகளுக்கு புள்ளி ரெக்சின் சீட் அல்லது சிம்பொனி சீட்டை தேவையான வண்ணங்களில், டை மூலம் வெட்டிக் கொள்ள வேண்டும். அதற்கு வடிவமைப்பு இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும். வெட்டிய டிசைன்களை ஏற்கனவே தயாரித்த சீட்டில் இணைத்து தைக்க வேண்டும். (சீட் கவர் பொருத்துவதற்கு முன்பு, இருசக்கர வாகனத்தில் இருந்து பழைய சீட்டை டூல் கிட் மூலம் கழற்ற வேண்டும். அதில் ஸ்பாஞ்சின் மீதுள்ள கவரை அகற்ற வேண்டும்).

முதலீடு

டிசைன் வடிவமைப்பு இயந்திரம் ரூ. 1.25 லட்சம்

மின் தையல் இயந்திரம் ரூ. 13 ஆயிரம்

கம்ப்ரசருடன் இணைந்த கன் சூட்டர் ரூ. 16 ஆயிரம்

டூல் கிட் ரூ. 2 ஆயிரம்

பல்வேறு டிசைன் டை ரூ. 15 ஆயிரம்

சீட் கவர் மாதிரிகள் ரூ. 4 ஆயிரம்

இரண்டு கத்திரி ரூ. 1000

10 x 16 அடி அளவுள்ள அறை அட்வான்ஸ் ரூ. 15 ஆயிரம்

ஒரு டேபிள் ரூ. 4 ஆயிரம்

ரேக் ரூ. 4 ஆயிரம்

மொத்த முதலீடு  ரூ. 2 லட்சம்.

உற்பத்தி பொருட்கள்

ரோசிலின் சீட், புள்ளி ரெக்சின் சீட், சிம்பொனி சீட், ஸ்பாஞ்ச், பீடிங் வயர், கருப்பு நிற நூல், பின்.

கிடைக்கும் இடங்கள்

டிசைன் வடிவமைப்பு இயந்திரம், கன் சூட்டர் ஆகியவை சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் கிடைக்கிறது. மற்ற முதலீட்டு பொருள்கள் ஹார்டுவேர்ஸ் கடைகளில் கிடைக்கும். உற்பத்தி பொருட்கள் பிரத்யேக ரெக்சின் கடைகளில் கிடைக்கிறது.

உற்பத்தி செலவு

ஒரு நாளில் 8 மணி நேரத்தில் 5 சீட் கவர்கள் வீதம் மாதம் 25 நாளில் 125 சீட் கவர்கள் தயாரிக்கலாம். இதற்கு உற்பத்தி செலவு ரூ. 14 ஆயிரம், கடை வாடகை ரூ. 2 ஆயிரம், மின் கட்டணம் ரூ. 400, உழைப்பு கூலி ரூ. 6 ஆயிரம், இதர செலவுகள் ரூ. 2 ஆயிரம் என ரூ. 22,400 செலவாகும். ஒரு சீட் சராசரி உற்பத்தி செலவு ரூ. 180 ஆகிறது.

லாபம்

ஒரு சாதாரண சீட் கவர் ரூ. 250, டிசைன் சீட் கவர் ரூ. 350க்கு விற்கப்படுகிறது. 75 சாதாரண சீட் கவர்கள் விற்பதன் மூலம் ரூ. 18,750, 50 டிசைன் கவர்கள் விற்பதன் மூலம் ரூ. 17,500 என மொத்த வருவாய் ரூ. 36,250. இதில் செலவு போக லாபம் ரூ. 13,850.

சந்தை வாய்ப்பு

இருசக்கர வாகன விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில வாகன விற்பனை நிலையங்களில் மட்டுமே சீட் தயாரித்து விற்கின்றனர். அதிலும் பிளெய்னாக உள்ள சீட்கள் மட்டும் கிடைக்கிறது. தாங்கள் விரும்பும் நிறம் மற்றும் டிசைன் உள்ள சீட் கவரை பெற வெளியில் உள்ள கடைகளையே நாடுவதால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கிறார்கள். சீட் கவர்கள் சேதமடைந்தால் அவற்றை மாற்றவும் பழைய வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.  இருசக்கர வாகன விற்பனை நிலையங்கள் மற்றும் சீட் கவர் மொத்த விற்பனை நிலையங்களுக்கும் ரெடிமேடு சீட் கவர்களை சப்ளை செய்யலாம். நல்ல கிராக்கி உள்ளது.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites