இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, September 22, 2024

சோப் தயாரிப்பு,

 புதிதாக தொழில் துவங்குபவர்கள் முதலில் குடும்பமாக உழைத்து, உற்பத்தி செலவை குறைத்து, குறைந்த விலையில் விற்றால் தான் இப்போதைய போட்டிக்கு தாக்கு பிடிக்க முடியும்.

தயாரிப்பு முறை

சோப் தயாரிக்கும் இயந்திரமானது கலவை, பிளாடர், கட்டிங் ஆகிய 3 பகுதிகளை கொண்டது. கலவை இயந்திரம் ஓடத் துவங்கியதும் அதில் வாஷிங் சோடா 12 கிலோ, சிலரி ஆயில் 20 கிலோ, டினோபால் பவுடர் 50 கிராம், தண்ணீர் 2 கிலோ ஆகியவற்றை கொட்ட வேண்டும், 10 நிமிடத்துக்கு பின், களிமண் பவுடர் 5 கிலோ, கால்சைட் (கல்மாவு) 48 கிலோ, சிலிகேட் 5 கிலோ ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக 7 நிமிட இடைவெளிகளில் கொட்ட வேண்டும். அதில் எஸ்டிபிபி 5 கிலோ, சென்ட் 200 மி.லி., நீல நிற பவுடர் 50 கிராம் ஆகியவற்றை கொட்டி 29 நிமிடம் கழித்து இயந்திரத்தின் இயக்கத்தை நிறுத்த வேண்டும். இப்போது கலவை இயந்திரத்தில் நீல நிறத்தில் பேஸ்ட் உருவாகியிருக்கும். அதை பிளாடரில் செலுத்தினால், அச்சு வழியாக நீளமான சோப் பார் வரும். அது தேவையான அளவு கட் செய்யப்பட்டு வெளியேறும். இவற்றை டிரேயில் அடுக்கி, லேபிள் மூலம் கவர் செய்தால் சோப் விற்பனைக்கு தயார். மணிக்கு 100 கிலோ வீதம் உற்பத்தி செய்யலாம்.

கட்டமைப்பு

2500 சதுர அடி ஷெட் அட்வான்ஸ் ரூ. 50 ஆயிரம்

மின் இணைப்பு 5 எச்பி ரூ. 5 ஆயிரம்

சோப் தயாரிக்கும் இயந்திரம் ரூ. 5 லட்சம்

சோப் கட்டி அடுக்க டிரே 50 ரூ. 2 ஆயிரம்

10 கேன் ரூ. 2 ஆயிரம்

இதர பொருட்கள் ரூ. 1000

அடிப்படை கட்டமைப்பு செலவு ரூ. 5.6 லட்சம்

முதல் மாத உற்பத்தி செலவு ரூ. 5.77 லட்சம்

மொத்த முதலீடு ரூ. 11.37 லட்சம்

உற்பத்தி செலவு

ஒரு நாளைக்கு 800 கிலோ சோப் வீதம் மாதம் 25 நாளில் 20 டன் தயாரிக்கலாம். ஒரு டன் சோப் தயாரிக்க கெமிக்கல் செலவு ரூ. 27 ஆயிரம் வீதம் 20 டன்னுக்கு ரூ. 5.4 லட்சம். கட்டிட வாடகை ரூ. 5 ஆயிரம், மின் கட்டணம் ரூ. 2 ஆயிரம், 6 பேர் சம்பளம் ரூ. 30 ஆயிரம் என மாத நிர்வாக செலவு ரூ. 37 ஆயிரம். மொத்த உற்பத்தி செலவு ரூ. 5.77 லட்சம். ஒரு டன் சோப் தயாரிக்க ரூ. 28,850 செலவாகிறது.

வருவாய்

ஒரு டன் சோப்பை ரூ. 30 ஆயிரத்துக்கு டீலர்களுக்கு விற்கலாம். டன்னுக்கு ரூ. 1150 வீதம் 20 டன்னுக்கு மாத லாபம் ரூ. 23 ஆயிரம். நேரடியாக கடைகளுக்கு சப்ளை செய்தால் லாபம் இரு மடங்காகும். உற்பத்தியை அதிகரித்தால் அதற்கேற்ப லாபம் கூடும்.

தேவையான பொருட்கள்

சோடா (டன் ரூ .21 ஆயிரம்)

சிலரி ஆயில் (டன் ரூ. 95 ஆயிரம்)

டினோபால் பவுடர் (கிலோ ரூ. 1350)

க்ளே (டன் ரூ. 5 ஆயிரம்)

கால்சைட் (டன் ரூ. 3 ஆயிரம்)

சிலிகேட் (டன் ரூ. 8 ஆயிரம்)

எஸ்டிபிபி பவுடர் (டன் ரூ. 90 ஆயிரம்)

சென்ட் (கிலோ ரூ. 1000)

நீல நிற பவுடர் (கிலோ ரூ. 100)

கிடைக்கும் இடங்கள்

சோடா - கோவை

சிலரி ஆயில் -  புதுவை

டினோபால் பவுடர் - மும்பை

க்ளே - கேரளா

கால்சைட் -  சேலம்

சிலிகேட் - கோவை

எஸ்டிபிபி பவுடர், சென்ட், புளூ கலர் பவுடர் - கோவை

மொத்தமாக வாங்கினால் குறைந்த விலையில் கிடைக்கும்.

சந்தை வாய்ப்பு

குறிப்பிட்ட பகுதிக்கு டீலர்கள் நியமித்து சோப்களை விற்கலாம். டீலர்களிடம் தொகை பெற்றுக் கொண்ட பின், ஆர்டரை தயாரித்து கொடுக்கும் அளவுக்கு கிராக்கி உள்ளது. சில்லரை கடைகளுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு சென்று விற்கலாம். கடைகளில் வினியோகித்த சோப்களுக்கு, அடுத்த வினியோகத்தின் போது தொகை கிடைக்கும். இது தாமதமானாலும் கூடுதல் லாபம் உள்ளது. புதிதாக தொழில் துவங்குபவர்கள் முதலில் சில்லரை கடைகளில் வியாபாரத்தை பெருக்கி, பின்னர் டீலர்களுக்கு விற்கலாம். உற்பத்தி அதிகரித்தால் சலவை சோப்களை கைகளால் பேக்கிங் செய்வதற்கு பதிலாக பேக்கிங் மெஷினை பயன்படுத்தலாம். இதன் மூலம் குறைந்த நேரத்தில், அதிகளவில் உற்பத்தி செய்ய முடியும். பேக்கிங் மெஷினுக்கு மட்டும் கூடுதல் முதலீடு தேவை.

சலவை சோப் உற்பத்தியோடு சலவை பவுடரையும் தயாரிக்கலாம். சோப் உற்பத்தி செய்வதை விட சலவை பவுடர் உற்பத்தி எளிதானது. சலவை பவுடரை சாஷே ஆட்டோமேடிக் பேக்கிங் இயந்திரம் மூலம் பேக்கிங் செய்து விற்கலாம். இதில் சாஷே பேக்கிங் இயந்திரத்துக்கு கூடுதல் முதலீடு தேவை.

தற்போது பாத்திரம் துலக்கும் சோப் மக்களிடையே பிரபலமாகி வருகிறது.  சலவை சோப் தயாரிக்கும் இயந்திரத்தில் பாத்திரம் துலக்கும் சோப்பும் தயாரிக்கலாம். அதற்குரிய கெமிக்கல்கள் மட்டும் மாறுபடும். தயாரிப்பு முறை சலவை சோப் தயாரிப்பது போன்றது தான். பாத்திரம் துலக்கும் சோப்புடன் பாத்திரம் துலக்கும் பவுடரும் தயாரிக்கலாம்.

ஆதாரம்: தீபம் கல்வி மற்றும் பயிற்சி மையம்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites