இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Sunday, September 22, 2024

கேன் வாட்டர் தொழில்

 சூப்பர் தொழில் ஏதாவது சொல்லுங்கள் என்று யாரிடம் கேட்டாலும் அவர்கள் சொல்லும் பட்டியலில் நிச்சயம் கேன் வாட்டர் தொழிலும் இருக்கும். அந்த அளவுக்கு நல்ல வாய்ப்புள்ள ஒரு தொழிலாக இது மாறியிருக்கிறது. இன்றைய சூழ்நிலையில், கிடைக்கும் குடிதண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கும் அளவுக்கு யாருக்கும் நேரமிருப்பதில்லை; அல்லது குடிதண்ணீரே கிடைப்பதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கை கொடுப்பது கேன் வாட்டர் என்று அழைக்கப்படும் சுத்திகரிக்கப்பட்டு கேன்களில் வழங்கப்படும் குடிதண்ணீர் தான்.

சந்தை வாய்ப்பு

நகர்ப்புறங்களில் கேன் வாட்டருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் இதைத் தான் பயன்படுத்துகிறார்கள். பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், பொது நிகழ்ச்சிகள், திருமணங்கள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்கள் போன்றவற்றிலும் கேன் வாட்டர் தான் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அதிகமான சந்தை வாய்ப்பு உருவாகியுள்ளது.

முதலீடு

இந்தத் தொழிலைத் தொடங்க குறைந்தபட்சம் பத்து லட்சம் ரூபாய் தேவை. பத்து லட்சம் முதல் முப்பது லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டிலும் இந்த தொழிலை தொடங்கி நடத்தலாம்.

மூலப் பொருட்கள்

  • தண்ணீர் தான் முக்கிய மூலப் பொருள்
  • தண்ணீரை சுத்தம் செய்ய சில வகையான கெமிக்கல்கள் தேவை

தயாரிப்பு

கேன் வாட்டர் தயாரிப்பில் மொத்தம் ஏழு நிலைகள் உண்டு. முதல் நிலை, தண்ணீர் சேகரிக்கும் தொட்டியில், அதாவது சம்ப்பில் (Sump) தண்ணீரை நிரப்புவது. சம்ப்பில் தண்ணீரை நிரப்பிய பிறகு சாண்ட் ஃபில்டர் (Sand Filter) என்ற இயந்திரத்திற்கு அனுப்புவது இரண்டாம் நிலை. இந்த இயந்திரம் கூழாங்கல், குறுமண் ஆகியவற்றால் நிரப்பப்பட்டிருக்கும். இங்கு தான் தண்ணீர் சுத்திகரிப்பு நடக்கும். தண்ணீரில் உள்ள தூசி, அழுக்கு போன்றவற்றை இந்த இயந்திரம் நீக்கி விடும். மூன்றாவது நிலையில், ஆக்டிவேட்டட் கார்பன் ஃபில்டர் (Activated Carbon Filter) என்ற இயந்திரத்திற்கு தண்ணீர் அனுப்பப்படும். இந்த இயந்திரம் நிலக்கரியால் நிரப்பப்பட்டிருக்கும். இங்கு அழுத்தம் கொடுப்பதனால் தண்ணீரில் உள்ள தூசி மற்றும் அழுக்குகள் நீக்கப்படும். இதனால் தண்ணீரின் கடினத் தன்மையும் குறையும்.

நான்காம் நிலையில், மைக்ரான் ஃபில்டர் பிராஸஸ் (Micron Filter) என்னும் முறையின் மூலம் தண்ணீரில் இருக்கும் நுண்கிருமிகள் நீக்கப்படும். அடுத்து ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் இயந்திரத்திற்கு தண்ணீர் அனுப்பப்படும். இங்கு அதிக அழுத்தம் கொடுப்பதன் மூலம் தண்ணீரில் உள்ள அளவுக்கதிகமான உப்பு, கால்சியம், இரும்பு போன்றவை தனியாகப் பிரிக்கப்படுகிறது. இந்த இயந்திரத்தின் குழாய் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு குழாயில் நல்ல தண்ணீரும், மற்ற குழாயில் தேவையற்ற தண்ணீரும் வெளியே வந்துவிடும். நல்ல தண்ணீர் ஸ்டோரேஜ் டேங்குக்கு அனுப்பப்படும். இது ஐந்தாவது நிலை.

இந்த டேங்கில் உள்ள தண்ணீர் ஓஸநேட்டர் என்ற இயந்திரம் மூலம் ஸ்டெர்லைஸ் செய்யப்படுவது ஆறாம் நிலை. அடுத்து அல்ட்ரா வயலெட் பல்ப் (UV Bulb) என்ற இயந்திரத்திற்கு அனுப்பப்படுகிறது. புற ஊதாக் கதிர்களால் தண்ணீரில் உள்ள வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகள் அழிக்கப்படும். இது தான் ஏழாவது நிலை. இதன் பின் இறுதியாக, சுத்தமான தண்ணீர் ஃபில்லிங் இயந்திரத்திற்கு அனுப்பப்பட்டு கேன்களில் அடைக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பாட்டில் அல்லது கேன்களில் நிரப்ப ஒரு பகுதி தனியாக இருக்க வேண்டும். அந்த அறை கண்டிப்பாக ஏசி வசதி கொண்டதாக இருக்க வேண்டும். இப்படி தயாராகும் தண்ணீரை நேராக மார்க்கெட்டிங் செய்ய கொண்டு சென்று விடலாம்.

கட்டிடம்

இத்தொழில் செய்ய குறைந்தபட்சம் 2000 சதுர அடி இடம் கொண்ட கட்டிடம் தேவைப்படும். கட்டிடத்தில் பலவிதமான பணிகள் செய்ய தனித்தனியே அறைகள் அமைக்கப்பட வேண்டும். தண்ணீர் நிரப்ப ஒரு அறையும், அதன் சுத்தத் தன்மையை ஆராய ஒரு பரிசோதனைக் கூடமும், ஆரோ பிளான்டில் சுத்தம் செய்ய ஒரு அறையும் தேவைப்படும்.

மின்சாரம்

  • 21-30 ஹெச்.பி. மின்சாரம் வரை தேவைப்படுகிறது.

இயந்திரங்கள்

  • மண்ணை சுத்தப்படுத்தும் சாண்ட் ஃபில்டர்
  • ஆக்டிக் கார்பன் ஃபில்டர்
  • மைக்ரான் ஃபில்டர்
  • ஆர்.ஓ. யூனிட்
  • தண்ணீர் சேகரித்து வைக்கும் டேங்க்
  • ஓஸநேட்டர்
  • புற ஊதாக் கதிர்கள் சிஸ்டம்

இந்த இயந்திரங்கள் அனைத்துமே ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். தண்ணீரின் சுத்தத்தை ஆய்வு செய்ய ஆய்வகத்தில் இன்குபேட்டர், வாட்டர் பாத், மைக்ரோஸ்கோப் போன்றவைகள் தேவைப்படும்.

வேலையாட்கள்

இத்தொழிலுக்கு குறைந்தபட்சம் எட்டு பேர் முதல் பதினெட்டு பேர் வரை தேவை. மேலும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஆய்வு செய்ய மைக்ரோ லேபில் பி.எஸ்சி. மைக்ரோபயாலஜி படித்த ஒருவரும், கெமிக்கல் லேபில் பி.எஸ்சி. கெமிஸ்ட்ரி படித்த ஒருவரும் தேவை.

பிளஸ்: மற்ற தொழிலில் மூலப் பொருளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், தண்ணீர் ஏறக்குறைய எந்த செலவும் இல்லாமல் கிடைத்துக் கொண்டே இருப்பது இந்தத் தொழிலில் உள்ள மிகப் பெரிய பிளஸ்.

மைனஸ்: 12000 லிட்டர் தண்ணீரை சுத்திகரித்தால் 6000 லிட்டர் மட்டுமே இறுதியில் சுத்தமாக்கி பயன்படுத்த முடியும் என்பதால் செலவு அதிகமாக இருக்கும். போட்டியாளர்கள் அதிகமானவர்கள் இதில் இருப்பது இன்னொரு பெரிய மைனஸ்.

லேப் பணிகள்: சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் டி.டி.எஸ். டெஸ்ட்டும், ஓடர் டெஸ்ட்டும் (ODOUR TEST) செய்யப்படும். மேலும், கெமிக்கல் ஆய்வகத்தில் பி.ஹெச். லெவல் டெஸ்ட் செய்வது அவசியம்.

கட்டுப்பாடுகள்

சட்டப்படி இங்கு வேலை செய்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது.

  • தண்ணீரை நிரப்பும் பகுதியில் வேலை செய்யும் பெண்கள் கண்டிப்பாக பூ, பொட்டு, வளையல் போன்றவை அணியக்கூடாது.
  • கண்டிப்பாக அவர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் தேவை.
  • தலைக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.
  • கையில் உறை, வாயில் முக மூடியும் அணிந்து கொள்ள வேண்டும்.
  • இருபது லிட்டர் கேன்களை மறுபடி உபயோகப்படுத்தும் போது சோப் ஆயில், குளோரின், சுடு தண்ணீர் போன்றவற்றால் கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.
  • ஐ.எஸ்.ஐ. தரச் சான்று பெற வருடம் ரூ. 97,000 முதல் ரூ. 1 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
  • தண்ணீர் நிரப்பப்பட்ட 20 லிட்டர் கேன் ஒன்றின் விலை ரூ. 40. இதன் மூலம் ஒரு கேனுக்கு 3 முதல் 5 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.
  • தண்ணீர் பேக் செய்யும் அளவுகள்: 300 மில்லி, 500 மில்லி, 1, 2, 5, 20 லிட்டர்.
  • மழை நீரை நேரடியாக சுத்திகரிக்கக் கூடாது.

இளைஞர்கள் அதிகளவில் ஈடுபட்டு வரும் தொழில். அதிகரித்து வரும் சந்தையும் சாதகமாக இருப்பதால் துணிந்து இத்தொழிலில் இறங்கலாம்.

ஆதாரம்: தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு, சென்னை

செயற்கை ரோஸ் பொக்கே தயாரிப்பு

 

செயற்கை ரோஸ் பொக்கே

இயற்கையான பூக்களால் தயாரிக்கப்படும் பொக்கேக்களின் ஆயுள், சில நாட்களில் முடிந்து விடுகிறது. நிரந்தரமாக வீட்டை அலங்கரிக்கும் வகையில் தயாரிக்கப்படும் செயற்கை பூ பொக்கேக்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. செயற்கை சிங்கிள் ரோஸ் பொக்கேக்களை தயாரித்து விற்பது லாபகரமானது.

செயற்கை சிங்கிள் ரோஸ் பொக்கேயை யார் வேண்டுமானாலும் எளிதாக தயாரிக்கலாம். காதலர் தினம், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் இவற்றை அதிகம் பயன்படுத்துவதால் நல்ல கிராக்கி உள்ளது. காதல் ஜோடிகள் சிவப்பு ரோஜா, நெருங்கிய நண்பர்கள் பிங்க் ரோஜா பொக்கேக்களை அதிகம் வாங்குகின்றனர்.

அந்த தினங்களுக்கு ஏற்ப தயாரித்து விற்கலாம். பெண்கள் வீட்டில் இருந்தவாறே ஓய்வு நேரங்களில் செய்வதற்கு ஏற்ற தொழில் இது. வீட்டிலுள்ள பெண்கள் கூட்டாக சேர்ந்து ஒருவர் பூ தயாரித்து, மற்றொருவர் கோன் தயாரித்து, இன்னொருவர் பொக்கேவை முழுமைப்படுத்தினால் குறைந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையில் செய்யலாம்.

தயாரிக்கும் முறை

பொக்கே கோன், பூ ஆகியவற்றை தனித்தனியாக தயாரிக்க வேண்டும். ரேப்பரை முக்கால் அடி உயரம், ஒன்றரை இஞ்ச் திறப்பு உள்ளவாறு சுற்றினால் கோன் தயார். பூ தயாரிக்க முதலில் இதழ் தயாரிக்க வேண்டும், பின் அவற்றை பூவாக மாற்ற வேண்டும். ஒரு பூவுக்கு 7 இதழ்கள் தேவை. இதழ் தயாரிக்க ஆர்கன்டி துணியில் ஒன்றே முக்கால் இஞ்ச் அளவில் 1 துண்டு, 2 இஞ்ச் அளவில் 1 துண்டு, இரண்டரை இஞ்ச் அளவில் 2 துண்டு, இரண்டே முக்கால் இஞ்ச் அளவில் 1 துண்டு, 3 இஞ்ச் அளவில் 2 துண்டு என மொத்த 7 துண்டுகளை வெட்டிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு துண்டையும் தனித்தனியாக மடித்து இதழாக மாற்ற வேண்டும். இதழ் செய்ய, முதலில் ஒவ்வொரு துண்டையும் தனித்தனியாக துண்டின் வலது, இடது புற முனைகள் தொடும் வகையில் மடிக்க வேண்டும். பின்னர் கீழ், மேல் முனைகள் இணையும் வகையில் மடிக்க வேண்டும். பின்னர் அதை சமமாக இடது, வலதாக மடிக்க வேண்டும். இரு முனைகளையும் வெளிப்புறமாக மடிக்க வேண்டும். இப்போது சிறியது முதல் பெரியது வரை வெவ்வேறு அளவுகளில் தனித்தனி இதழ்கள் தயாராகும்.

பூ தயாரிக்க, முதலில் 5 இஞ்ச் நீளமுள்ள கம்பியை எடுத்துக் கொள்ள வேண்டும். மேல் பகுதியை கொக்கி போல் வளைத்து, சிறிய இதழை அதில் செருக வேண்டும், பின்னர் அடுத்தடுத்த இதழ்களை ஒவ்வொன்றாக சுற்றியும் வைத்து, ஒவ்வொரு இதழுக்கும் பச்சை நிற நூலால் கட்ட வேண்டும். ஏழு இதழ்களையும் கட்டி முடித்தால் பூ தயாராகும். பூவின் கீழ் பகுதி முதல் கம்பி முழுவதும் கிரீன் பேப்பர் செலோ டேப்பால் சுற்றினால் கம்பி பச்சை நிற காம்பாக தோற்றமளிக்கும். காம்போடு கூடிய முழுமையான பூ தயாராகும். ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள பொக்கே கோனில் கிரீன் கிராப்பை கொத்தாக சொருகி, அதன் மேல் பூவை செருகினால் செயற்கை ரோஸ் சிங்கிள் பொக்கே ரெடி.

கட்டமைப்பு

தரை, சேரில் அமர்ந்தோ அல்லது டேபிளில் வைத்தோ தயாரிக்கலாம் என்பதால் வீட்டின் சிறிய அறை போதுமானது. பெரிய அளவில் முதலீடு தேவையில்லை. கலை உணர்வும், திறமையும் தான் முதலீடு.

தேவைப்படும் பொருட்கள்

ஆர்கன்டி துணி (பூக்களுக்கு தேவையான இதழ்கள் தயாரிக்க பயன்படுவது, ஒரு மீட்டர் ரூ. 30 - 20 பூக்கள் தயாரிக்கலாம்).

பூ கட்டும் கம்பி (பூக்களுக்கு தேவையான காம்புகள் செய்ய பயன்படுவது, தங்கம் மற்றும் வெள்ளி நிறத்தில் கிடைக்கும். ஒரு கம்பி ரூ. 2 - 5 காம்புகள் தயாரிக்கலாம்).

கிரீன் பேப்பர் செலோ டேப் (காம்புகள் மீது சுற்ற பயன்படுவது, ஒரு ரோல் ரூ. 25 - 20 காம்புகளில் சுற்றலாம்), கிரீன் கிராப் (கம்பு தானிய கதிரின் சருகு, பொக்கே பூவை சுற்றி இலைகளாக அமைக்க பயன்படுவது. பல கலர்களில் கிடைக்கும். 100 கிராம் பாக்கெட் ரூ. 25 - 4 பொக்கேவில் பயன்படுத்தலாம்), பொக்கே ராப்பர் (பேக்கிங் ஷீட். ஒரு ஷீட் ரூ. 8 - 10 பொக்கேவுக்கு பயன்படுத்தலாம்). பேபி சாடின் ரிப்பன் (பொக்கேயின் கீழ் அழகுக்காக கட்டுவது. ஒரு ரோல் ரூ. 15 - 25 பொக்கேக்களுக்கு பயன்படுத்தலாம்).

கிடைக்கும் இடங்கள்

ஸ்டேஷ்னரி மற்றும் கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் ஸ்டோர்களில் கிடைக்கும்.

உற்பத்தி செலவு (மாதத்துக்கு): ஒரு பொக்கே தயாரிக்க உற்பத்தி பொருள் செலவு ரூ. 8. ஒரு நாளில் மணிக்கு 4 வீதம் 8 மணி நேரத்தில் 32 பூக்கள் தயாரிக்கலாம். ஒரு நாள் உற்பத்தி செலவு ரூ. 256. மாதம் 25 நாளில் 800 பொக்கே தயாரிக்க ரூ. 6,400 தேவை.

வருவாய் (மாதத்துக்கு)

ஒரு செயற்கை பொக்கேவை மொத்த விற்பனை விலையாக கடைகளுக்கு தலா ரூ. 20 வீதம் விற்கலாம். இதன் மூலம் வருவாய் ரூ. 16 ஆயிரம். உற்பத்தி செலவு போக லாபம் ரூ. 9,600. சில்லரையாக ரூ. 25 விற்கலாம். அவ்வாறு விற்றால் லாபம் கூடும். பெரிய பூக்களை செய்து, கொத்தாக உருவாக்கி, அதை வண்ணம் தீட்டப்பட்ட பொக்கே ஸ்டாண்ட்களில் செருகி ‘பிளவர் வாஷ்’ தயாரித்து விற்கலாம். அதன் மூலம் அதிக வருவாய் கிடைக்கும்.

ஆதாரம்: தீபம் கல்வி மற்றும் பயிற்சி ­­மையம், சென்னை

தக்காளி சூப் மிக்ஸ் தயாரிப்பு

 

தக்காளிப் பொடி

முழுவதுமாக பழுத்த கெட்டியான தக்காளிப் பழங்களை குழாயில் ஓடும் தண்ணீரில் நன்றாகக் கழுவவும். பின் இதனை சிறு துண்டுகளாக வெட்டி தனி அறையில் உலர்த்தியில் 80 டிகிரி செல்சியஸில் 10 மணி நேரம் உலர்த்த வேண்டும். நீர் நீக்கம் செய்யப்பட்ட துண்டுகளை மின் அம்மியில் அரைத்து பொடியாக்க வேண்டும்.

வெங்காயப் பொடி

பெரிய வெங்காயத்தை தேர்வு செய்து தோலை உறிக்கவும். பின் இதனை குழாயில் ஓடும் நீரில் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கவும். இதனை தனி அறையில் உலர்த்தியில் 60 டிகிரி செல்சியஸில் 7 மணி நேரம் வரை வைத்து உலர்த்த வேண்டும். நீர் நீக்கம் செய்யப்பட்ட செதில்களை அரைத்து பொடியாக்கி பாலித்தீன் பைகளில் நிரப்பி மூடவும்.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

அளவு

தக்காளிப் பொடி

5.0 கிராம்

வெங்காயப் பொடி

0.5 கிராம்

சோள மாவு

2.0 கிராம்

சீரகத் தூள்

0.5 கிராம்

மிளகுத் தூள்

0.3 கிராம்

உப்பு

1.5 கிராம்

அஜினமோட்டோ

0.5 கிராம்

தக்காளி சூப் மிக்ஸ் செய்முறை

அனைத்து தேவையான பொருட்களையும் நன்கு கலக்கி பாலித்தீன் பைகளில் நிரப்பி மூடவும்.

தக்காளி சூப் செய்முறை

தக்காளி சூப் செய்வதற்கு 10 கிராம் தக்காளி சூப் மிக்ஸை 150 மில்லி கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து கலக்கவும்.

ஆதாரம்: தொழில்யுகம் மாத இதழ்

இறைச்சிப் பொருள்கள் தொழில்

 

இறைச்சிப் பொருள்கள் தொழிலுக்கான மாதிரித் திட்டம்

கோழி இறைச்சி உருண்டைகள் மற்றும் சமோசா விற்பனை மூலம் கிடைக்கும் இலாபத்தைப் பற்றி தற்போது பார்ப்போம். இறைச்சி உற்பத்தி பொருள்களில் அனுமானங்கள், முதலீடு, நிரந்தரச் செலவுகள், மாறுபடும் செலவீனங்கள், வரவு, பணத்தின் கால மதிப்பு, இலாபச் செலவு விகிதம் போன்றவை முக்கியப் பங்காற்றுகின்றன.

அனுமானங்கள்

கால்நடை பொருளாதாரமானது சில அனுமானங்களின்படி கணக்கிடப்படுகிறது. கால்நடைகளின் வகை, தரம், அவற்றின் விலை, உற்பத்தித் திறன், சந்தை விற்பனை வழி முறைகள், தேவைப்படும் வேலையாட்கள், அவர்களின் கூலி, தீவன அளவு, அவற்றின் விலை, காப்பீடு போன்ற விவரங்கள் அனுமானங்களில் குறிப்பிடப்படும்.

நிரந்தர முதலீடு

கோழி இறைச்சி உருண்டைகள் மற்றும் சமோசா உற்பத்தியில், கட்டிடங்கள், உபகரணங்கள் போன்றவை நிரந்தர முதலீடாகும். இவை ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குப் பலன் தரும். அத்தகைய செலவுகள் நிரந்தர முதலீடாகும்.

செலவுகள்

கால்நடைப் பண்ணை வளர்ப்பில் இரு வகையான செலவுகள் இருக்கும். ஒன்று மாறாச் செலவுகள் மற்றும் மாறுபடும் செலவீனங்கள் ஆகும்.

மாறாச் செலவுகள்

இத்தகைய செலவுகளின் அளவானது உற்பத்தியைப் பொறுத்து மாறுவதில்லை. இவை நிலையான செலவுகளாகும். நிரந்தர முதலீட்டின் மீதான வட்டி, உபகரணங்கள் மற்றும் கட்டிடத்தின் மீதான தேய்மானம், காப்பீட்டுத் தொகை போன்றவை மாறாச் செலவுகளில் அடங்கும்.

மாறுபடும் செலவுகள்

தீவனச் செலவுகள், மருத்துவச் செலவுகள், போக்குவரத்து, மின்சாரச் செலவுகள் போன்றவை மாறுபடும் செலவுகளாகும். இவற்றின் அளவு உற்பத்தியைப் பொறுத்து மாறுபடும்.

வரவு

கோழி இறைச்சி உருண்டைகள் மற்றும் சமோசா விறபதன் மூலம் வருவாய் கிடைக்கும்.

நிகர இலாபம்

வரவுக்கும் செலவுக்கும் இடைப்பட்ட வேறுபாடே நிகர இலாபமாகும்.

கோழி இறைச்சி பந்துகள் தயாரிப்பு மாதிரித் திட்டம்

கோழி இறைச்சி பந்துகள் உற்பத்திக்கான நிரந்தர முதலீடு மற்றும் செலவுகள், அதற்குத் தேவையான இடவசதி, வாடகை, உபகரணங்கள் மற்றும் அவற்றின் விலையைப் பொறுத்து மாறுபடும். இங்கே நாம் கிராமிய மட்டத்தில் செய்வதாகக் கருதப்படுவதால் இறைச்சி பதப்படுத்துவதற்குச் சொந்த இடத்தை பயன்படுத்தலாம். அவர்களுக்கு நிரந்தர முதலீடு என்பது இறைச்சி குறு அரிவாள் மற்றும் ஒருதன்மையாக்கி வாங்குவது மட்டுமே.

தொழில்நுட்ப அனுமானம்

  1. இறைச்சி குறு அரிவாள் மற்றும் ஒருதன்மையாக்கிக்கு ஆரம்ப முதலீடு - ரூ. 50,000
  2. பையகப்படுத்தும் இயந்திரத்தின் விலை – ரூ. 4,000
  3. பாத்திரங்களின் விலை – ரூ. 1000
  4. உற்பத்தி ஒரு வருடத்திற்கு 310 நாட்கள் மட்டுமே, மீதம் 55 நாள்கள் விடுமுறை நாள்கள்
  5. எலும்பில்லாத கோழிக்கறி 1 கிலோவின் விலை மற்றும் காய்கறி எண்ணெய், மசாலாத் தூள், கருப்பு மிளகு, இஞ்சி மற்றும் பூண்டு விழுது ஆகியவற்றின் விலை – ரு. 350
  6. பணியாளர்கள் செலவு, ஒரு நாளுக்கு ரூ. 250 எனக் கணக்கிடப்படுகிறது
  7. இதர செலவுகள் 1 கிலோ இறைச்சி மற்றும் பிற வேறுபடும் உள்ளீடுகளுக்கு 10% எனக் கருதப்படுகிறது.
  8. தினசரி 5 கிலோ கோழி இறைச்சியில் இருந்து இறைச்சி உருண்டைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன எனக் கருதப்படுகிறது.
  9. ஒரு பந்து 10 கிராம் பேட்டர் என்ற வீதம் ஒரு கிலோ கோழி இறைச்சியிலிருந்து 135 பந்துகள் தயாரிக்கப்படுகின்றன எனக் கருதப்படுகிறது.
  10. தயாரித்து முடிக்கப்பட்ட இறைச்சிப் பந்து, ஒரு பந்து ரூ. 4 என்ற வீதம் விற்பனை செய்யப்படுகிறது.

வ.எண்

நிரந்தர முதலீடுகள்

ருபாயில்

1

குறு அரிவாள் மற்றும் ஒருதன்மையாக்கியின் விலை

50,000

2

பேக்கேஜிங் இயந்திரத்தின் விலை

4,000

3

பாத்திரங்களின் விலை

1,000

 

நிரந்தரச் செலவு

55,000

 

வ.எண்

நிரந்திர முதலீடுகள்

ருபாயில்

1

மூலதன முதலீட்டு வட்டி ஒரு வருடத்திற்கு 10 %

5,500

2

தேய்மானம் ஒரு வருடத்திற்கு 10 %

5,500

3

வருடாந்திர வாடகை

_

4

வருடாந்திர மின்சாரக் கட்டணம்

3,000

 

மொத்த நிரந்தரச் செலவுகள்

14,000

 

மொத்த நிரந்தரச் செலவு நாளொன்றுக்கு

38.35

 

வ.எண்

நிரந்தர முதலிடுகள்

ரூபாயில்

1

5 கிலோ எலும்பில்லாத கோழிக்கறியின் விலை, காய்கறிகள், எண்ணெய் மசாலாத்தூள், கருப்பு மிளகு, இஞ்சி மற்றும் பூண்டு விழுது ஆகியவற்றின் விலை

1,750

2

தொழிலாளர் சம்பளச் செலவு

250

3

இதர செலவுகள்

200

 

மொத்த மாறுபடும் செலவுகள்

2,200

 

மொத்த நிரந்தரச் செலவு

38.35

 

மொத்த செலவு

2,238.35

வ.எண்

வருமானம்

ரூபாயில்

1

5 கிலோ கோழிக்கறி உருண்டைகள் விற்பனை மூலம் (135*5*4)

2,700

2

நிகர இலாபம் ஒரு நாளுக்கு

461.55

3

நிகர இலாபம் ஒரு மாதத்திற்கு

11.541.25

4

நிகர இலாபம் ஒரு வருடத்திற்கு

1,38,435

கோழி இறைச்சி சமோசா மாதிரித் திட்டம்

கோழி இறைச்சி சமோசா உற்பத்திக்கான நிரந்தர முதலீடு மற்றும் செலவுகள், அதற்குத் தேவையான இடவசதி, வாடகை, உபகரணங்கள் மற்றும் அவற்றின் விலையைப் பொறுத்து மாறுபடும். இங்கே நாம் கிராமிய மட்டத்தில் செய்வதாகக் கருதப்படுவதால், இறைச்சி பதப்படுத்துவதற்குச் சொந்த இடத்தை பயன்படுத்தலாம். அவர்களுக்கு நிரந்தர முதலீடு என்பது இறைச்சி மற்றும் ஒருதன்மையாக்கி வாங்குவது மட்டுமே.

தொழில்நுட்ப அனுமானம்

  1. இறைச்சி குறு அரிவாள் மற்றும் ஒருதன்மையாக்கிக்கு ஆரம்ப முதலீடு – ரூ. 50,000
  2. பையகப்படுத்தும் இயந்திரத்தின் விலை – ரூ. 4,000
  3. பாத்திரங்களின் விலை _ ரூ. 6,000
  4. உற்பத்தி ஒரு வருடத்திற்கு 310 நாட்கள் மட்டுமே, மீதம் 55 நாட்கள் விடுமுறை நாட்கள்
  5. எலும்பில்லாக் கோழிக்கறி 1 கிலோவின் விலை மற்றும் காய்கறி, எண்ணெய் மசாலாத் தூள், கருப்பு மிளகு, மைதா, ரவா, இஞ்சி மற்றும் விழுது ஆகியவற்றின் விலை
  6. பணியாளர்கள் செலவு, ஒரு நாளுக்கு ரூ. 250 எனக் கணக்கிடப்படுகிறது
  7. இதர செலவுகள் ஒரு கிலோ கோழி இறைச்சியில் இருந்து சமோசா தயாரிக்கப்பட்டு வருகிறது எனக் கருதப்படுகிறது.
  8. தினசரி 5 கிலோ கோழி இறைச்சியில் இருந்து சமோசா தயாரிக்க்பட்டு வருகிறது எனக் கருதப்படுகிறது.
  9. ஒரு சமோசா 40 கிராம் பேட்டர் என்ற வீதம் ஒரு கிலோ கோழி இறைச்சியிலிருந்து 40 சமோசா தயாரிக்கப்படுகின்றன எனக் கருதப்படுகிறது.
  10. தயாரித்து முடிக்கப்பட்ட இறைச்சி சமோசா ஒன்று ரூ. 15 என்ற வீதம் விற்பனை செய்யப்படுகிறது.

இறைச்சித் தொழிற்கூடங்களுக்குத் தேவையான அத்தியாவசியக் கருவிகள் மற்றும் உபகரணங்கள்

இறைச்சி மனிதனின் உணவாகக் கற்காலம் முதலே இருந்து வருகிறது. கற்காலம் முதல் இக்காலம் வரை இறைச்சியைக் கிழித்து உணவாக மாற்றப் பல்வேறு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆதிமனிதன் இறைச்சியைக் கிழிக்கச் சுமார் 3.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே மனித மிருகங்களின் நகங்களையும் எலும்புகளையும் பற்களையும் பயன்படுத்தினான். அதன் அடிப்படையிலேயே தற்காலத்தில் நாம் இறைச்சியை வெட்டவும் பதப்படுத்தவும் பல்வேறு கருவிகளை உபயோகப்படுத்தி வருகிறோம். நமது இறைச்சி தேவை மற்றும் தன்மை அடிப்படையில் நாம் பயன்படுத்தும் கருவிகளும் மாறுபடுகின்றன. தற்காலத்தில் சிறிய அளவில் உற்பத்தி செய்யப்படும் இறைச்சித் கூடங்கள் அதிக அளவில் உள்ளன. இவை நமது 60-70 விழுக்காடு இறைச்சி தேவையைப் பூர்த்தி செய்கின்றன. எனவே, நாம் இங்கு சிறிய அளவிலான அசையூண் பிராணிகள், பன்றி மற்றும் கோழி இறைச்சிக் கூடங்களுக்குத் தேவையான அத்தியாவசியக் கருவிகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இறைச்சிக் கூடத்திற்கு தேவையான பொதுவான உபகரணங்கள்

  • இறைச்சி வெட்டுபவர்களுக்குத் தேவைப்படும் தற்பாதுகாப்பு உபகரணங்கள்
  • இறைச்சிக் கூடத்திற்குத் தேவையான உபகரணங்கள்
  • இறைச்சி சேமித்துப் பாதுகாக்க உதவும் கருவிகள்
  • இறைச்சி வியாபாரத்திற்குப் பயன்படும் உபகரணங்கள்

இறைச்சி வெட்டுபவர்களுக்குத் தேவைப்படும் தற்பாதுகாப்பு உபகரணங்கள்

  1. பாலித்தீன் அல்லது இரப்பராலான மேலங்கி மிகவும் அத்தியாவசியமானது. இது வெட்டுபவர்களைத் தண்ணீர் மற்றும் இரத்தத்திலிருந்து பாதுகாப்பதுடன் கூரிய இயந்திரங்களின் வெட்டுகளிலிருந்து பாதுகாக்கிறது.
  2. முழங்கால் வரையிலான காலணிகள் மற்றும் நன்கு தாங்கக்கூடிய இரப்பராலான காலணிகள் தேவை. மேலும் இவை வெண்மை நிறத்திலும், கயிறுகள் கொண்டு கட்டும்படி இல்லாதவாறும், விலங்குக் கொழுப்புகள் அதன் மேல் ஒட்டாதவாறும் இருக்க வேண்டும்.
  3. இயந்திரங்கள் மூலம் இறைச்சி வெட்டுபவர்களுக்கு இரும்பினாலான (துருப்பிடிக்காத) இரும்புக் கையுறைகள் அணிவது அவசியம்.
  4. மேலும் இறைச்சிக் கூடத்தில் பணிபுரியும் அனைவரும் மேலங்கி, தலை மற்றும் முக உறை அணிந்து பணிபுரிய வேண்டும். இவை இறைச்சியில் உரோமம் மற்றும் கிருமித் தொற்றுத்தலைத் தவிர்க்கும்.

இறைச்சி கூடத்திற்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள்

  1. ஒவ்வொரு இறைச்சிக் கூடத்திற்கும் நுழையும் முன்பு நுழைவாயிலில் நிரப்பப்பட்ட பாதம் நனைக்கும் தொட்டி அமைக்கப்பட வேண்டும்.
  2. மேலும் ஒவ்வொரு நுழைவாயிலில் காற்றுத் தடுப்புத்திரை அமைத்து வெளிப்புறத்தில் இருந்து பூச்சிகள் மற்றும் வெப்பக்காற்று கூடத்தில் உள்ளே நுழையாதவாறு தடுக்க வேண்டும்.
  3. இறைச்சி வெட்டும் மற்றும் பையகப்படுத்திச் சேமிக்கும் கூடம் குளிர்பதனப்பட்டிருத்தல் வேண்டும்.
  4. ஈ, பூச்சி பிடிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டிருத்தல் வேண்டும்.

அத்தியாவசிய உபகரணங்கள்

  1. சிறிய மற்றும் பெரிய கத்திகள்
  2. கத்தி கிருமி நீக்கும் வெந்நீர்க்கலன்
  3. துருப்பிடிக்காத இரும்பினாலான மேசைகள்
  4. இறைச்சி எடையிடும் கருவிகள்
  5. இறைச்சியைத் தொங்கவிடப் பயன்படும் கொக்கிகள்

இறைச்சி சேமிக்க மற்றும் பாதுகாப்பிற்குப் பயன்படும் உபகரணங்கள்

இறைச்சியை உற்பத்தி செய்த பிறகு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அதனைக் குளிர்வித்துச் சேமித்தல் அவசியம் இல்லையெனில் இறைச்சியானது கிருமித் தொற்றுக்கு ஆளாகி விரைவில் கெட்டுவிடும். பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து இறைச்சியையும் உடனடியாக விற்பனை செய்வது எளிதான காரியம் அல்ல. எனவே உற்பத்தி செய்யப்பட்ட இறைச்சியை தகுந்த முறையில் பாதுகாத்து சேமித்து வைத்தல் வேண்டும். இதற்காக இறைச்சிக் கூடத்தில் குளிர்சாதன அறைகள், குளிர்சாதனப் பெட்டிகள் அவசியம்.

இறைச்சி வணிகத்திற்குத் தேவைப்படும் போக்குவரத்துச் சாதனங்கள்

இறைச்சி வியாபாரத்திற்கு, இறைச்சியானது கெடாமல் பாதுகாக்கப்பட்டு இறைச்சிக் கூடத்தில் இருந்து விற்பனை வாயப்புள்ள இடங்களுக்குக் கொண்டு செல்லும் வாகனங்கள் குளிரூட்டப்பட்ட வாகனங்களாக இருத்தல் அவசியம். மேலும் இறைச்சிக் கூடத்திலிருந்து வாகனங்களுக்கு மாற்றப்படுவதற்கு முன்பு வாகனங்கள் நன்கு குளிரூட்டப்பட்டு இருத்தல் அவசியம். சிறிய அளவிலான குறைந்த தொலைவிற்கு இறைச்சியைக் கொண்டு செல்ல வெப்பம் கடத்தாத பிளாஸ்டிக் பெட்டிகளைப் பயன்படுத்தலாம்.

10 முதல் 15 எண்ணிக்கையிலான அசையூண் பிராணிகளை (ஆடு, மாடு) கையாளும் இறைச்சிக் கூடத்திற்கு தேவையான உபகரணங்கள்.

  1. மின்சாரம் மூலம் அதிர்ச்சியூட்டி நினைவிழக்கச் செய்யும் சாதனம்
  2. கேப்பிட்டிவ் போல்ட் துப்பாக்கி (பெரிய அசையூண் விலங்குகளுக்கு)
  3. பின்னங்கால்கள் வெட்டும் இயந்திரம்
  4. மின் தூக்கிகள்
  5. நின்று பணிபுரியும் தளங்கள்
  6. மேல்நிலைத் தண்டவாளங்கள்
  7. நெஞ்சு பிளக்கும் பல் அறுப்பான் (இரம்பம்)
  8. இறைச்சி வெட்டும் பல் அறுப்பான் (இரம்பம்)
  9. அதிக அழுத்தத்தில் நீரை வெளியேற்றி இறைச்சி மற்றும் உபகரணங்களைக் கழுவும் இயந்திரம்
  10. சரிவு அமைப்புகள்
  11. இறைச்சி அடுக்குச் சட்டம்
  12. இறைச்சியைக் கையாள மற்றும் பையகப்படுத்த உதவும் மேசைகள்
  13. உள்ளுறுப்புகள் மற்றும் கழிவுகளைக் கையாளும் தள்ளுவண்டி
  14. கொக்கிகள் மற்றும் கத்திகள்

இறைச்சி கையாளும் மேசை

பன்றி இறைச்சி உற்பத்திக் கூடங்களுக்கு மேற்குறிப்பிட்டவைகளுடன்

  1. இரத்தம் வெளியேற்றும் தொட்டி
  2. கொதிநிர்க்கலன் (உரோமங்களை நீக்க)
  3. உரோமம் நீக்கும் கத்திகள் முதலியனவும் கூடுதலான தேவை

ஒரு நாளைக்கு 100 முதல் 500 சிறிய அளவிலான கோழி இறைச்சி உற்பத்தி கூடத்திற்கு தேவையான உபகரணங்கள்

  1. மின் அதிர்ச்சியூட்டி
  2. ஹலால் அறுப்பிற்கான கத்தி
  3. இரத்தம் வடிய உதவும் கூம்புகள்
  4. கொதிநீர்க்கலன் (இறகு நீக்க)
  5. இறகு நீக்க உதவும் இயந்திரம்
  6. உள் உறுப்புகளை நீக்கிச் சுத்தப்படுத்த உதவும் மேசை
  7. உள் உறுப்பு நீக்கப்பட்ட கோழி இறைச்சியைச் சுத்தப்படுத்த உதவும் கலன்
  8. இறைச்சியை எடையிடும் இயந்திரம்
  9. இறைச்சியை பையகப்படுத்தும் இயந்திரம்
  10. இறைச்சியைச் சேமித்து வைக்க உதவும் குளிர்விப்பான்

தற்போது ஒரே நாளில் 250 முதல் 50000 கோழிகளை வெட்டிச் சுத்தப்படுத்தும் நவீன இயந்திரங்களால் சுத்தப்படுத்தப்பட்டு குளிர்விக்கப்பட்டு பையகப்படுத்தப்படுகின்றன.

மதிப்பூட்டப்பட்ட இறைச்சி உற்பத்தித் தொழிற்கூடங்களில் கீழ்க்கண்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இறைச்சி அரைப்பான்

இந்த இயந்திரத்தில் இறைச்சித் துண்டுகள் அரைக்கப்பட்டு அவை அதிக அழுத்தத்தில் சிறுதுளைகள் மூலம் சிறிய துகள்களாக மாற்றப்படுகின்றன. இவை இறைச்சிக் குழலப்பம், துண்டுகள், பிட்டு மற்றும் பல இறைச்சிப் பொருள்கள் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.

சுழலும் கிண்ண இறைச்சி வெட்டி

வட்ட வடிவத்தில் சுழலும் கொள்கலனின் கத்திகளினால் இறைச்சி சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு அவை பிற சேர்க்கைப் பொருள்களுடன் கலக்கப்பட்டு அவை, பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட இறைச்சி பொருள்களாகத் தயாரிக்கப்படுகின்றன.

ஆதாரம்: மு.பிரபு, வ.செந்தில்குமார்

ஆயில் மில் – சுயதொழில்

 

அறிமுகம்

நம்முடைய தினசரி சமையலில் எண்ணெய் கலக்காத உணவு என்று எதுவுமில்லை. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் என பலவகையான எண்ணெய்கள் நம்மூரில் இருக்கிறது. நிலக்கடலை, சோயா பீன்ஸ், தேங்காய், எள் போன்ற மூலப் பொருட்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

சந்தை வாய்ப்பு

உணவுப் பொருட்களுக்கான தேவை இருக்கும் வரை எண்ணெய்க்கான தேவையும் இருக்கும். வீடுகள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்களில் எண்ணெய் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பிரியாணி, பஜ்ஜி, வடைகள், அசைவ உணவுகள் தயார் செய்வதற்கு அதிக அளவில் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தவிர, ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு குறைந்தது மூன்று லிட்டர் எண்ணெய் தேவைப்படுகிறது. தேசிய அளவில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி என்பது எந்த சூழ்நிலையிலும் சரிந்து போகாத தொழில். தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் தேங்காய் எண்ணெய் தேவை பெரிய அளவில் உள்ளதால், என்றுமே இதன் மார்க்கெட் களை கட்டியிருக்கும்.

முதலீடு

எண்ணெய் உற்பத்தி செய்யத் தேவைப்படும் முக்கியமான முதலீடு என்றால் கட்டிடமும், இயந்திரமும் தான். ஆண்டுக்கு 12,000 லிட்டர் எண்ணெய் உற்பத்தி செய்யும் மில் ஒன்றைத் தொடங்க சுமார் 15 லட்ச ரூபாய் தேவைப்படும். இந்த தொழிலைத் தொடங்கும் நிறுவனர் 15%, மீதமுள்ள 85% கடன் மற்றும் மானியம் மூலம் பெற்றுக் கொண்டு தொழிலைத் தொடங்கலாம்.

கட்டடம்

ஆயில் மில் தொடங்க குறைந்தபட்சம் 30 சென்ட், அதிகபட்சமாக ஒரு ஏக்கர் வரை இடம் தேவைப்படும். தேவையான இடம் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ எடுத்துக் கொள்ளலாம். எண்ணெய் உற்பத்திக்குத் தகுந்தவாறு கட்டிடங்களை அமைப்பது அவசியம்.

வேலையாட்கள்

இத்தொழிலில் வேலையாட்களின் பங்கு மிகவும் அவசியம். ஒரு நாளைக்கு 32 லிட்டர் உற்பத்தி செய்வதற்கு திறமையான வேலையாள் ஒருவர், ஒரு சூப்பர்வைஸர் என இரண்டு நபர்கள் தேவை.

மூலப் பொருட்கள்

நிலக்கடலை, எள், தேங்காய், சோயா பீன்ஸ் போன்ற பொருட்கள் தான் முக்கிய மூலப் பொருட்கள். இதில் எது உங்களுக்கு சுலபமாகக் கிடைக்குமோ அதைக் கொண்டு எண்ணெய் உற்பத்தி செய்யலாம். சில இடங்களில் மேற் சொன்ன எல்லா மூலப் பொருட்களும் எளிதாகக் கிடைக்கும் பட்சத்தில், எல்லாவிதமான எண்ணெய்களையும் உற்பத்தி செய்யலாம். ஆனால், ஒவ்வொன்றுக்கும் தனித் தனி இயந்திரங்கள் தேவைப்படும். காரணம், ஒரு இயந்திரத்தில் ஒரு வகையான எண்ணெய் மட்டுமே தயார் செய்ய முடியும். தேங்காய் கிடைக்கும்போது தேங்காய் எண்ணெய், எள் கிடைக்கும் போது நல்லெண்ணெய் என மாதத்திற்கு ஒரு எண்ணெய்யை நம்மால் தயார் செய்ய முடியாது.

இயந்திரம்

எக்ஸ்பெல்லர், வடிகட்டும் இயந்திரம், பாய்லர், அளவிடும் இயந்திரங்கள் என மொத்தம் 90,000 ரூபாய் வரை இயந்திரத்திற்குச் செலவாகும். பெரும்பாலும் இந்த இயந்திரங்கள் அனைத்தும் தமிழகத்திலேயே கிடைக்கிறது.

தயாரிப்பு முறை

  • தேங்காய் பருப்பு தனியாகவும் கிடைக்கும், அல்லது தேங்காயிலிருந்து பருப்பை நாமே எடுத்துக் கொள்ளலாம்.
  • இப்படி தனியே எடுத்த தேங்காய் பருப்பில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதால் எண்ணெய் எடுப்பது கடினம். எனவே அதை பாய்லர் வெப்பத்தின் மூலம் ஈரத்தை உறிஞ்சி, உலர வைக்கிறார்கள்.
  • பின்னர் கட்டர் இயந்திரத்தின் மூலம் தேங்காயைத் துண்டு துண்டாக்கி கிரஷிங் மெஷினில் போட்டு அரைக்கிறார்கள். இதிலிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கப்பட்டவுடன் அதன் சக்கைகள் வெளியே தள்ளப்படுகிறது.
  • இந்த தேங்காய் எண்ணெய் இதன் பிறகு ஃபில்டர் இயந்திரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கசடுகள் வடிகட்டப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், ஆயில் ஃபில்லிங்’ இயந்திரம் மூலம் பாக்கெட்டுகளிலும், சிறிய டின்களிலும் அடைக்கப்பட்டு விற்பனைக்குச் செல்கிறது.

ஆதாரம்: தொழில்யுகம் மாத நாளிதழ்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites