ஜூலை மாதத்துக்கு ஏற்ற தோட்டப் பயிராக எலுமிச்சையை பயிரிட்டு 3-ஆம் ஆண்டு முதல் நல்ல லாபத்துடன் கூடிய சாகுபடியை விவசாயிகள் பெறலாம்
எலுமிச்சை, மக்களின் அன்றாட உணவில் பயன்படுத்தக் கூடிய ஒன்றாகும். எலுமிச்சையில் 2 ரகங்கள் உள்ளன. ஒன்று சாதாரண எலுமிச்சை, மற்றொன்று கொடி எலுமிச்சை. கொடி எலுமிச்சை மலைப் பகுதிகளில் மட்டுமே பயிரிடப்படுகிறது.
மண், தட்பவெப்ப நிலை
சுமார் 2 மீட்டர் ஆழத்துக்கு மண் கண்டம் இருக்க வேண்டும். நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் கலந்துள்ள தோட்டக்கால் நிலங்களிலும், களிமண் இல்லாத மணல் பாங்கான தோட்டக்கால் நிலங்களிலும் எலுமிச்சை செழிப்பாக வளரும்.
எலுமிச்சையை ஜூலை முதல் டிசம்பர் வரை நடவு செய்ய வேண்டும். ஒரு நாற்றுக்கு 5 மீட்டர் சுற்றளவில் இடைவெளியைவிட வேண்டும். அப்படி நடும்போது ஒரு ஏக்கருக்கு 160 செடிகள் நடவு செய்யலாம். நோய்த் தடுப்பு செய்யப்பட்ட எலுமிச்சை நாற்றுகளையே நடவு செய்ய வேண்டும்.
குழி தயாரிக்கும் முறை, நீர்ப்பாசனம்
இதற்கான குழியை 75 செ.மீ. சுற்றளவு உள்ளவாறு தோண்ட வேண்டும். நன்கு வளரும் வரை நீர் பாய்ச்சுவது அவசியம். சுமார் 7 முதல் 10 நாள்களில் நீர்ப் பாய்ச்சுவது போதுமானது. வேர் பாகத்தில் நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
உரமிடுதல்
- தழைச்சத்து 2 பாகங்களாக மார்ச், அக்டோபர் மாதங்களில் இட வேண்டும். தொழுஉரத்தை முதல் வருடத்துக்கு 10 கிலோவும், ஆண்டுதோறும் 5 கிலோவும் அதிகரிக்க வேண்டும். தழைச்சத்து முதல் வருடம் 200 கிராமில் தொடங்கி ஆண்டுக்கு 100 கிராம் அளவில் சேர்த்து இட வேண்டும். மணிச்சத்து, சாம்பல் சத்தை ஆண்டுக்கு 100 கிராம் அளவில் போட்டு, ஆண்டுதோறும் 40 கிராம் வரை கூடுதலாகச் சேர்க்க வேண்டும்.
- உரங்களை இடும்போது மரத்தில் இருந்து 70 செ.மீ. தள்ளி மண்ணில் போட்டு கொத்தி விட வேண்டும்.
- புதிய துளிர் வரும்போது துத்தநாக சல்பேட் 100 லிட்டர் தண்ணீருக்கு 500 கிராம் கலந்து அந்தக் கரைசலை மார்ச், ஜூலை, அக்டோபர் மாதங்களில் தெளிக்க வேண்டும்.
- செடியை 45 செ.மீ. உயரம் வரை கிளைகளின்றி நேராக வளர விட வேண்டும். செடிக்கு 30 கிலோ பச்சை இலைகளை 3 மாதத்துக்கு ஒரு முறை இட வேண்டும்.
- எலுமிச்சை செடியின் ஊடுபயிராக அவரை குடும்பத்தைச் சேர்ந்த பயிர்கள், காய் வகைகளை மரங்கள் காய்ப்புக்கு வரும் காலம் வரை கூடுதலாகப் பயிரிட்டு பயன்பெறலாம்.
பயிர் வளர்ச்சி ஊக்கி தெளித்தல்
காய் பிடிப்பை அதிகப்படுத்த 2.4 டி மருந்தை பி.பி.எம். 20 மில்லி லிட்டர் அளவில் தெளிக்க வேண்டும். பிஞ்சு காய்கள் உதிர்வதைத் தடுக்க 20 பி.பி.எம். 2.4 டி அல்லது என்.ஏ.ஏ. 30 பி.பி.எம். என்ற மருந்தை 30 மில்லி கிராம் அளவில் தெளிக்க வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு
எலுமிச்சை மரத்தை இலைதுளைப்பான், சாறு உறிஞ்சும் பூச்சி, பழ அந்துப் பூச்சி, குருத்து துளைப்பான், தண்டு துளைப்பான், பழ ஈ, நூற்புழு ஆகிய பூச்சிக்கள் தாக்கும். இலை துளைப்பானைக் கட்டுப்படுத்த, மானோகுரோட்டோபாஸ் 1 லிட்டர் தண்ணீருக்கு 15 மில்லி அளவில் கலந்து தெளிக்க வேண்டும். இல்லையெனில், வேப்பங்கொட்டை, பிண்ணாக்கு திரவம் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.
சாறு உறிஞ்சும் பூச்சியைக் கட்டுப்படுத்துதல்
- வெள்ளை ஈக்கு குயினைல்பாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி அளவு கலந்து தெளிக்க வேண்டும். கறுப்பு ஈக்கு மானோகுரோட்டோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 மில்லி கிராம் கலக்க வேண்டும்.
- அசுவினி பூச்சிக்கு மானோகுரோட்டோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி கிராம் கலந்து தெளிக்க வேண்டும். சிகப்புச் சிலந்தி பூச்சிக்கு நனையும் கந்தகத் தூளை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
குருத்துத் துளைப்பான்
இப்பூச்சியைக் கட்டுப்படுத்த மானோகுரோட்டோபாஸ் மருந்தை ஒரு லிட்டருக்கு ஒரு மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
பழ அந்துப் பூச்சி
பாத்திகளில் உள்ள டினோஸ்போரா களைகளை அகற்றுதல் வேண்டும். பழங்களை பாலித்தீன் பைகள் கொண்டு மூட வேண்டும்.
தண்டு துளைப்பான்
புழு தாக்கப்பட்ட கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மாதத்துக்கு ஒருமுறை ஊசி மூலம் மானோகுரோட்டோபாஸ் 10 மில்லி அளவில் பூச்சி துளைத்த இடத்தில் செலுத்தி களிமண் கொண்டு மூடவும்.
நூற்புழு
நூற்புழு பாதித்த ஒரு மரத்தை கார்போபியூரான் 3ஜி 750 கிராம் அளவுக்கு இட்டு இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
அறுவடை
மேற்கண்ட முறைப்படி பயிரிட்டால் எலுமிச்சை நடப்பட்ட 3-ஆவது வருடம் முதல் டிசம்பர் - பிப்ரவரி, ஜூன்- செப்டம்பர் ஆகிய மாதங்களில் இருந்து அறுவடை செய்யலாம். இதன்மூலம் விவசாயிகள் அதிக லாபமடைய முடியும்
ஆதாரம் : தமிழ்நாடு தோட்டக் கலைத் துறை
1 comments:
அருமை
Post a Comment